டீன் ஏன் எனப்படும் துடுக்கான இளம் பருவத்தில்
அந்நியன் விக்ரம் மாதிரி மல்டிபிள் பர்சானாலிட்டி ஒளிந்திருக்கும் பருவம் தான் டீன் ஏஜ் பருவமும், குழந்தையாகவும் இல்லாமல் பெரியவர்களாகவும் இல்லாமல், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பிள்ளைகள் பல்வேறு மாறுதல்களை எதிர்கொள்கிறார்கள். என்னதான் தோளுக்கு மேல் பிள்ளை வளர்ந்திருந்தாலும் பெற்றோருக்கு அவர்கள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் அரைக்கால் டவுசரும் பினோபார்மும் போட்ட குட்டிப்பிள்ளைகளாகத்தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள். சிலர் தங்கள் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்று ஒப்புக்கொள்வதே இல்லை, பதின் பருவம் எனப்படும் டீன் ஏஜில் தான் பிள்ளைகளுக்கு எதிர்காலம் குறித்த கேள்விகள் முளைக்கும். அதற்கு சரியான விளக்கம் தருவது பெற்றோர்கள் கடமையே !
நமது பிள்ளைகள் தவழும் வயதில் நாமும் தவழ்ந்தோம் ! விரல் பிடித்து நடக்க வைக்கும் போது நாம நடக்க பழகினோம் அதே போல் டீன் ஏன் எனப்படும் துடுக்கான இளம் பருவத்தில் நான் பெரியவள் அல்லது பெரியவன் எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்படும் போது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிப்பது பெற்றோரின் கடமை.
பிள்ளைகளுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும் அவர்கள் தலையில் ஏறி அமர்ந்து கொள்வார்கள் நான் நில்லுன்னா எம்பிள்ளை நிக்கும், உட்காருன்னா உட்காரும் என்றார் ஒரு தந்தை, சத்தம்போட்டு சிரிக்காதே, கண்ணாடி முன்னாடி நிக்காதே, எதிர்த்து பேசாதே இப்படி அநேக கண்டிப்புகள் என்னும் போர்வையை நாம் வலுக்கட்டாயமாக போர்த்திக் கொள்ளச் சொல்கிறோம். விளைவு ?
அவர்கள் மனரீதியாக நம்மிடம் இருந்து விலகி செல்கிறார்கள். இன்னுமே பல வீடுகளில் பெண்பிள்ளைகள் தங்கள் மாதவிடாய் காலங்களில் தனித்து வைக்கப்படுகிறார்கள். அந்தகாலத்திலே எல்லாம் நாங்கள் ஐந்து நாளைக்கு வீட்டுக்குள்ளே வரமாட்டோம். அத்தனை கட்டுப்பாடு என்று பெருமையடிப்பார்கள். ஆனால் அந்த மாதவிடாய் காலங்களில் சீரற்ற உதிரப்போக்கு, அடிவயிற்றில் வலி இது போன்ற பிரச்சனைகள் பெண் பிள்ளைகளை வாட்டி வதைக்கும். அப்பேர்ற்ப்பட்ட சமயங்களில் அவர்களின் நிலையறிந்து நாம் ஆதரவாக இருக்க வேண்டும்.
கனவுகள் மலரும் பருவம், அந்த பருவத்திற்கே உரிய செய்கைகள் இவையெல்லாம் கண்டிப்பிற்கு உரியது அல்ல, கார்ட்டூன் பார்க்கும் குழந்தை சன் மியூசிக்கில் சூர்யாவையும், காஜலையும் ரசிக்கிறாள் என்றாள் அது பெரிய குற்றமில்லை, அவர்களை போல் தன்னை கற்பனை செய்கிறாள் என்றால் அவர்களுடைய உலகத்தில் அவர்கள் கதாநாயகன் கதாநாயகிகள் தானே, அவர்கள் ரசிக்கத் தகுந்தவர்களே ஆனால் உன்னைவிட அவர்கள் பெஸ்ட் இல்லை என்று நாசூக்கா உணர்த்த வேண்டுமே தவிர, பொழுதன்னைக்கும் என்ன சினிமா பாட்டு, கண்ணாடியே கதின்னு கிடக்கிறியே என்று வசை பாடக் கூடாது, அவள் தன்னை அலங்கரித்து கொள்கிறார்கள் என்றாள் அதிலுள்ள நேர்த்தியைப் பாருங்கள்.
இத்தனை பேசுறீங்க இப்போ உள்ள கால கட்டத்தில் பெண்பிள்ளைகள் தனியா நடமாட முடியுதா ? அதற்கு கட்டுப்பாடு அவசியம் தானே என்று கேள்வி எனக்கு கேட்கிறது, ஆனால் கட்டுப்பாட்டுக்குள் இயங்க அவர்கள் கிணப்ெ நம்மில் சிலர் ஒன்று அளவுக்கதிகமாக பயமுறுத்திவிடுகிறோம், அல்லது அதிக சுதந்திரத்தினை கொடுத்து விடுகிறோம்.
அநேக வீடுகளில் கண்டிருப்போம் வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு காட்சிப்பொருளைப் போல பிள்ளைகளை அழைத்து பெருமையடித்துக் கொள்வோம். இது டீன் ஏஜ் பருவத்திற்கு பொருந்தாது, அவர்களின் உலகம் தனியாய் சிருஷ்டிக்கப்பட்டு விடுகிறது மகளோ மகனோ டீன்ஏஜ் தனிமையை அதிகம் விரும்புகிறார்கள் என்றால் நாம் அவர்களிடம் செலவிடும் நேரம் குறைவு. நம்மைக் காட்டிலும் வாழ்க்கையை ரசனையை, உற்சாகத்தை அவர்களுக்கு வேறு ஏதோ தருகிறது அது செல்போனாக இருக்கலாம், இணையமாக இருக்கலாம் கூடா நட்பாகக் கூட இருக்கலாம். முதலில் குழந்தையாய் இருந்து தனிமனிதனாக தனி மனுஷியாக உருவகம் எடுக்கும் நம் பிள்ளைகளை அவர்களின் ரசனையை ரசிப்போம்.
அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம். கடிவாளத்தை நமது கையில் வைத்துக்கொள்ள அவர்கள் குதிரைகள் இல்லை, இலேசாக முகம் திருப்பினாலே நான் எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தேன் இப்படி மதிக்காம இருக்கியே ? எதுக்கெடுத்தாலும் எதிர்த்து பேசுறீயே என்று பேசாமல் அவர்களுக்கு வாழ்க்கையைப் புரிய வையுங்கள். உன் பிறப்பும், உடன் பிறந்தோரும் பெற்றோரும், உன் நிறம் அழகு என எதையும் நீ தீர்மானிக்கவில்லை, ஆனால் எதிர்காலம் உன்னால் தீர்மானிக்கப்பட இருக்கிறது. மிகுந்த அக்கறையோடு உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக பிரச்சனைகளை அணுக கற்றுத் தர வேண்டும்.
பிள்ளைகளின் தனிப்பட்ட ரசனையை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள். வெறும் மதிப்பெண் அட்டையைக் கொண்டு அவர்களின் திறமையை மதிப்பிடாதீர்கள், நம் இளவரசிகளுக்கு கனவுகள் காண அனுமதியுண்டு, அதை நாம் புரிந்து கொள்ளும் விதத்தில் அவர்கள் நம்மைக் கொண்டாடுவார்கள்.
நட்புபோடு எடுத்துச் சொல்லுங்கள்.
அவள் வளர்ந்துவிட்டாள் ஆடை ஆபரணங்கள் ஏன் பேசும் சுதந்திரம் கூட அவர்களுக்கு உண்டு, அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் நமது மறுப்பை அன்போடு புரிய வையுங்கள், நீ இதைத்தான் செய்ய வேண்டும் என்பதை விடுத்து, இது செய்தால் உன் எதிர்காலம் பிரகாசிக்கும், எனக்கும் விருப்பும் முடிவு நீ எடு என்று அவர்களை தன்னிச்சையாய் செயல்பட அனுமதியுங்கள்.
கேலி குத்தல் அவர்களின் மாற்றங்களை ஜீரணிக்க முயற்சிசெய்யுங்கள், அதில் அக்கறை கொள்ளுங்கள்,
நாம் கஷ்டப்படுவது தெரியக்கூடாது என்று நினைப்பதை விடுத்து அடிப்படை தேவைகளுக்கு செலவிடும் தொகை, குடும்ப நிர்வாகம் இவற்றில் அவர்களையும் ஒரு அங்கத்தினர்களாக சேர்த்து விவாதியுங்கள், அப்போது அவர்களும் பெரிய மனித தன்மையை உணருவார்கள் குடும்பத்தில் தன் பங்கு அலாதியானது என்பதை அறியும் போது வெளியே அன்பை தேட முயலமாட்டார்கள். டீன் ஏஜ் என்றாலே அய்யோ என் பொண்ணு பெரியவளாயிட்டா இனிமே நான் என்ன பண்றது அங்கே என்னடி பார்வை தாவணியை சரியா போடு என்ற நிலையை யெல்லாம் நாம் தாண்டி விட்டோம்.
இன்றைய உலகம் ஆண்பெண் இருபாலரும் எங்கும் நிறைந்தது. டியூசன் தனி வகுப்புகள் என்று எதிர்பாலினத்தவரை தடுக்க இயலாது, பெரும்பாலும் தனக்கு யாரும் இல்லை என்ற நிலையை பிள்ளைகளை தவறான பாதைக்கு தூண்டுகிறது. முதலில் அவர்களுக்கு நான் இருக்கிறேன் என்ற நினைப்பை உருவாக்குங்கள்.