ஒரே நாளில் 17 பதக்கத்தை வென்ற தமிழக அணி – கேலோ இந்தியா
கேலோ இந்திய விளையாட்டு போட்டியில் 16 தங்கம் பெற்று, 44 பதக்கங்களுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. நேரு உள்விளையாட்டு அரங்கில், கடந்த 19 ஆம் தேதி இந்த விளையாட்டு போட்டிகள் தொடங்கின. வரும் 31 ஆம் தேதி இப்போட்டிகள் நிறைவடைகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு பல தங்கப் பதக்கங்களை வென்று அசத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் 13 பதக்கங்களை வென்றுள்ளது. கேலோ இந்தியா போட்டியின் ஆறாவது நாளில், 4 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என தமிழ்நாடு வீரர்கள் பதக்கங்களை அள்ளிக் குவித்துள்ளனர். மகாராஷ்டிரா 64 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹரியானா 55 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு 44 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
போட்டியின் 6-வது நாளான நேற்று ஸ்குவாஷ் போட்டியில் ஆடவர் பிரிவில் சந்தேஷ், அரிஹந்த், மெய்யப்பன் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு அணி தங்கப் பதக்கம் வென்றது. இதேபோன்று மகளிர் பிரிவில் ஷமீனா ரியாஸ், பூஜா ஆர்த்தி, தீபிகா ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்நாடு அணி தங்கப் பதக்கம் வென்றது.
மகளிருக்கான தடகளம் 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழ்நாட்டின் அன்சிலின் பந்தய தூரத்தை 2.11 நிமிடங்களில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை அக்சிலின் பந்தய தூரத்தை 2.11 நிமிடங்களில் அடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இவர்கள் இருவரும் சகோதரிகள் ஆவர்.
மகளிருக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழ்நாட்டின் பவீனா ராஜேஷ் 12.10 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனையான பமிலா வர்ஷினி 11.84 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். மகளிருக்கான தடகளம் 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழ்நாட்டின் அபினயா பந்தய தூரத்தை 12.21 விநாடிகளில் அடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் வீரர் கோகுல் பாண்டியன் பந்தய தூரத்தை 10.89 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வாள்வீச்சில் ஆடவருக்கான சேபர் அணிகள் பிரிவில் அக்சத், அர்லின், மவுரிஷ், ஷார்ஜின் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு அணி வெண்கலம் வென்றது. ஆடவருக்கான குத்துச்சண்டையில் 51-54 கிலோ எடைப் பிரிவில் தமிழ்நாடு வீரர் நவீன்குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். 67-71 கிலோ எடைப் பிரிவில் தமிழ்நாட்டின் கபிலன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மகளிருக்கான குத்துச்சண்டையில் 57-60 கிலோ எடைப் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை ஜீவா வெண்கலப் பதக்கம் வென்றார். 63-66 கிலோ எடைப் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை துர்கா வெண்கலப் பதக்கம் பெற்றார்.
ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டின் தருண் விகாஷ் 2.01 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.