போக்குவரத்து ஊழியர் போராட்டம் வாபஸ்..! | சதீஸ்

 போக்குவரத்து ஊழியர் போராட்டம் வாபஸ்..! | சதீஸ்

அகவிலைப்படி வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9 ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது, ஓய்வூதியதாரர்களின் ஜனவரி மாத அகவிலைப்படியை தான் உடனடியாக செலுத்த கோருகிறோம் எனவும், எந்த கோரிக்கைக்கும் அரசு செவிசாய்க்காததால் வேலை நிறுத்தத்தை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியால் தற்போது தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதாகவும், அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த மாதம் 6ஆம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அமைதியாக நடந்த வேலை நிறுத்த போராட்டம் வன்முறையை நோக்கி சென்றதாக குறிப்பிட்ட அரசு தரப்பு, பண்டிகை காலங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கூடாது என ஏற்கெனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியது.

7,000 தொழிலாளர்களின் நலனை விட மக்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்தது. இதனிடையே, மேலும், 92,000 ஓய்வூதியதாரர்களுக்கு தற்காலிகமாக 2 ஆயிரம் ரூபாயை ஏன் வழங்கக் கூடாது என நீதிபதிகள் கேட்ட போது, தற்போது வழங்க முடியாது என தமிழ்நாடு அரசு தரப்பில் மறுத்துவிட்டது.

பண்டிகை காலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது மக்களை பிணைக் கைதிகளாக வைத்து போராடுவது போல இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள்,   பொங்கல் பண்டிகை முடியும் வரை வேலைநிறுத்தத்தை ஏன் ஒத்திவைக்க கூடாது என தொழிற்சங்கத்தினரிடம் கேள்வி எழுப்பினர். இதை ஏற்று, வரும் 19ஆம் தேதி வரை வேலைநிறுத்தத்தை நிறுத்தி வைக்க தொழிற்சங்கங்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதால், போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். அப்போது, பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என கூறினார். ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றமுடியாது என்று அரசு கூறவில்லை என்றும் நிதி நிலைமை சீரானதும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துக்கழக தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன், நீதிமன்றத்தில் அரசு கூறியது போல எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தார். முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டாவிட்டால், மீண்டும் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்போம் என அண்ணா தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...