ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார்..! | சதீஸ்

 ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார்..! | சதீஸ்

ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் நிறுவனத் தலைவரும்,  ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா.  இவர் தனது கட்சியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியுடன் இணைக்கப்போவதாக சமீப காலங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி ஒய்.எஸ்.ஷர்மிளா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.  தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன். கேசிஆர் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெரும் ஊழலால், ஒரு பணக்கார மாநிலம் இப்போது பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளது” என்று வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.  அம்மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.

இதன் பின்னர் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் நிறுவனத் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, தனது கட்சியை ஜனவரி 4-ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்போவதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் கசிந்தன.  மேலும், ஜனவரி 2-ம் தேதி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸுடன் கட்சியை இணைப்பது மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஒய்.எஸ்.ஷர்மிளா,  தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  தன்னுடைய கட்சியையும் காங்கிரஸுடன் இணைத்துக் கொண்டார்.

இதன்மூலம் காங். பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும், கர்நாடகாவில் இருந்து காங். சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்படுவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...