தமிழ்த்திரை இசையின் பிதாமகன்களில் ஒருவர் – வேதா

 தமிழ்த்திரை இசையின் பிதாமகன்களில் ஒருவர் – வேதா

தமிழ்த்திரை இசையின் பிதாமகன்களில் ஒருவர் – வேதா

முழுப் பெயர் வேதாசலம். வேதாவின் பெற்றோர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்கள். இந்தியாவிலேயே தன் மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார் வேதா. சிறுவயதிலேயே இசையின் மீது ஈடுபாடு உண்டாயிற்று. வேதாவின் மாமாவிற்கு இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் வேதாவிற்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தார்.

ஒரு நாள் புரொபஸர் காப்ரியல் அவர்களின் இசை நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அவரது இசையினால் பெரிதும் கவரப்பட்ட வேதா, தானும் ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்று உறுதி பூண்டார். தன்னை காப்ரியலிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு அவரிடம் ஹிந்துதானி இசை பயில ஆரம்பித்தார். ஏற்கெனவே வேதாவிற்கு பங்கஜ் மல்லிக், சைகல் போன்றோரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

அந்நாளில் வெங்கடாசலம் என்பவரது வீட்டில் கலைஞர்கள் ஒன்று கூடி இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் வெங்கடாச்சலத்தின் நண்பரான இசை அமைப்பாளர்

சி பாண்டுரங்கனை வேதா சந்தித்தார். அவருடன் சில காலம் பணி புரிந்தார். போதிய அளவு வாய்ப்புகளும் வருமானமும் இல்லாமல் போகவே அவரிடமிருந்து விலகினார். பின்னர் நடிகை வைஜயந்திமாலா நடத்திவந்த நாடகக் குழுவில் சில காலம் ஹார்மோனியம் வாசித்து வந்தார்.

50களில் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீராம். அவர் மூலம் சிங்களப் படத் தயாரிப்பாளர்களான ஜெயமனே சகோதரர்களின் அறிமுகம் வேதாவிற்கு கிடைத்தது. “மாறும் விதி என்ற சிங்களப் படத்திற்கு வேதா இசை அமைத்தார். அந்தப் படம் வேதாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

அந்தப் படம் மகத்தான வெற்றி கண்டது. பின்னர் ஜெயமனே சகோதரர்கள் தயாரித்த பத்து படங்களுக்கு வரிசையாக வேதான் இசை அமைப்பாளர். இதில் ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழா கண்டது.

வேதாவிற்கு தமிழில் வந்த முதல் வாய்ப்பு, ஜூபிலி ஃபிலிம்ஸின் “மர்ம வீரன்”. இதுவும் நடிகர் ஸ்ரீராமின் உதவியால் வந்த வாய்ப்பு ஆகும். இப்படத்தில் ஸ்ரீராமும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றன. சந்திரபாபுவும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அடுத்து எஸ் எஸ் ராஜேந்திரன், பண்டரிபாய், டி ஆர் ராமச்சந்திரன், பாலாஜி, எஸ் வி ரங்காராவ், தேவிகா ஆகியோர் நடித்த அன்பு எங்கே படத்திற்கு இசை அமைத்தார் வேதா. இதில் சிங்கள பைலா பாணியில் இவர் இசையமைத்த “டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது. இதே படத்தில் கவ்வாலி பாணியில் “நயா தௌர்” என்ற படத்தில் இடம் பெற்ற பிரபல ஹிந்திப் பாடலான “ரேஷ்மி சல்வார் குர்தா ஜாலி கா” என்ற பாடலின் மெட்டில் “அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா” என்ற பாடலும் பெருத்த வரவேற்பை பெற்றது.

அடுத்து நடிகர் ஸ்ரீராம் ஜெமினி சாவித்திரி இவர்களை வைத்து தயாரித்த “மணமாலை” படத்திற்கு இசையமைத்தார் வேதா. இப்படத்தின் P B ஸ்ரீனிவாஸ் குரலில் “நெஞ்சம் அலைமோதவே, கண்ணும் குளமாகவே கொஞ்சும் கண்ணைப் பிரிந்தே போகிறாள், ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள்போகிறாள்” என்ற பாடல் மிகவும் பிரபலம்.

1963ல் வேதாவிற்கு மாடர்ன் தியேட்டர்ஸின் அறிமுகம் கிடைத்தது. மனோரமா கதாநாயகியாக நடித்த கொஞ்சும் குமரி என்ற படத்திற்கு இசையமைத்தார். ஏசுதாஸ் முதல் முதலில் பாடிய படம் இதுதான், “ஆசை வந்த பின்னே, அருகில் வந்த கண்ணே” என்ற பாடலை பாடினர் (எஸ் பாலசந்தர் இசையில் பொம்மை படத்தில் இவர் பாடிய நீயும் பொம்மை 1964 ஆம் வெளி வந்தது)

அடுத்து இவர் இசை அமைத்த படம் “பாசமும் நேசமும்” என்ற ஜெமினிகணேசன், சரோஜா தேவி நடித்த படம், ஹிந்திப் படம் அனாரியின் தழுவல் இது.

அடுத்து வீராங்கனை, சித்ராங்கி படங்களுக்கு இசையமைத்தார். வீராங்கனையில் ஜேசுதாசிற்கு மூன்று பாடல்கள். இதில் “நீலவண்ணக் கண்களிரண்டில்” என்ற பாடல் இன்றும் பிரபலம். சித்ராங்கி படத்தில் “நெஞ்சினிலே நினைவு முகம்” “இன்று வந்த சொந்தமா” போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

பாடல்கள் பிரபலமானாலும் படங்கள் வெற்றியடைந்தால்தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும். சில படங்கள் வெற்றி பெறாததால் இவர் மாடர்ன் தியேட்டர்சுக்கு ஹிந்திப் படங்களின் ரீமேக்குக்கு போய்விட்டார். இவர் ஹிநதிப் பாடல்களைத் தழுவி மெட்டமைத்தாலும் பாடல்வரிகள் ஏனோ தானோ என்று இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

இவரது பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியர்கள் எழுதியதாகவே இருந்தது, உதாரணம் கண்ணதாசன். (நூறு முறை பிறந்தாலும்).

இந்த ஹிந்திப் பாடல் வரிசைப் படங்கள் வருமுன் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஒரு படம் அம்மா எங்கே (1964) அதில் “பாப்பா பாப்பா கதை கேளு” என்று காக்கா நரியின் கதையை அழகான ஆங்கில மெட்டில் நமக்கு அளித்திருந்தார் வேதா.

அடுத்து சரசா பி ஏ என்றொரு படம். P B ஸ்ரீனிவாசின் குரலில் “இரவின் மடியில் உலகம் உறங்கும்” என்று நிமதியின்மையை மௌனமாகப் பொழியும் பாடல். பானுமதி பாடும் “மனதில் மனதை வைத்த பின்னாலே” என்ற பாடல் எடுத்த எடுப்பிலேயே மனத்தைக் கவர்ந்து விடுகிறது.

வல்லவன் வரிசை: ஹிந்தியில் வந்த உஸ்தாத் படங்கள் மாடர்ன் தியேட்டர்ஸில் வல்லவன் வரிசை என்றானது.

“நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்

உனைப் பிரிந்து ஒரு நாளும் போவதில்லை”

“சௌ பார் ஜனம் லேங்கே, சௌ பார் ஃபனா ஹோங்கே” என்ற வரிகளை தமிழில் கவியரசர் இவ்வாறு எழுதினார். இந்தப் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது, இந்தப் பாடல் மட்டுமல்ல, இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரு வெற்றியைப் பெற்றன. “மனம் என்னும் மேடை மேலே” “பாரடி கண்ணே கொஞ்சம்” என்ற கவ்வாலி வகைப் பாடல், “கண்டாலும் கண்டேனே உன் போலே” “நெஞ்சுக்கு நிம்மதி”ஆகிய பாடல்கள்.

அடுத்து வல்லவன் ஒருவன். “பளிங்கினால் ஒரு மாளிகை” “தொட்டு தொட்டுப் பாடவா” “காவிரிக் கரையின் தோட்டத்திலே” ஆகிய பாடல்கள் பெரும் வெற்றி. – வேதா கவியரசர் கூட்டணி நன்முத்துகளை அளித்தது.

அடுத்து நானே வருவேன் – இதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஹிந்தியில் “ரிம் ஜிம் ரிம் ஜிம்” என்று வந்ததை கவியரசர், சிறிதும் யோசிக்காமல், இங்கும் அங்கும் என்று அதைப் போன்றே ஒலிக்குமாறு எழுதினார். ஒரு திகில் பாடலான இது பெரும் வெற்றி ,பெற்றது. இப்படத்தின் மற்ற பாடல்களும் பிரபலம். “உன் வேதனையில் என் கண்ணிரண்டும் உன்னோடு மயங்குவதேன் கண்ணா” இசையும், பாடல் .வரிகளும் மிகவும் அற்புதம்.

அடுத்து எதிரிகள், ஜாக்கிரதை – நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்

காதலித்தால் போதுமா – கொஞ்சம் நில்லடி என் கண்ணே

சி ஐ டி சங்கர் – நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன

ஜஸ்டிஸ் விஸ்வநாதன் – இது நீரோடு செல்கின்ற ஓடம், சிலை, செய்ய கைகள் உண்டு, கண்வழியே கண்வழியே போனது கிளியே

என்று வெற்றிப் பாடல்கள் தந்தார்.

நேரமும் தக்க சுதந்திரமும் இருந்தால் அட்டகாசமான துள்ளல் பாடல்களை தன்னாலும் அளிக்க முடியும் என்று இவர் நிரூபித்த படம் அதே கண்கள். இந்தப் படத்தில் “பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வராண்டி” “லவ், லவ் எத்தனை அழகு இருபது வயதினிலே” என்று கலக்கல் பாடல்கள் தந்தார். இது ஒரு மர்மங்கள் நிறைந்த திகில் படம். அதற்கேற்ப “வா அருகில் வா, தா உயிரைத் தா” என்றொரு பாடலும் வடித்தார்.

உலகம் இவ்வளவுதான் என்றொரு படம்,நாகேஷ் கதாநாயகன். “இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்” “ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு” என்ற பாடல்களை அளித்தார். சினிமாவை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட “நான்கு கில்லாடிகள்” படத்தில், செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்” என்றொரு மெலடி, நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி என்றொரு அமைதிப் பாடல் ஆகியவற்றை வழங்கினார்.

காப்பி அடிப்பதற்கென்றே ஒரு இசையமைப்பாளர் என்ற பெயர் வேதாவிற்கு ஏற்ப்பட்டது துர்பாக்கியமே. ஆனால் அதையும் ஒரு கடமையாக செய்து வந்தார். இவரது திறமைக்கு பார்த்திபன் கனவு ஒன்றே போதும். ஹிந்திப் படங்களின் பாடல்களை தமிழில் வெற்றிகரமாக உலவ விடுவதில் தான் வல்லவனுக்கு வல்லவன் என்று காட்டினார். “ஓராயிரம் பார்வையிலே” “நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன” பாடல்கள் இரவல் மெட்டுக்கள் போன்றா தோன்றுகின்றன

இவர் இசையமைத்த கடைசிப் படம் “ஜஸ்டிஸ் விஸ்வநாத்” 1971.

மிக இளவயதிலேயே மரணமடைந்தார். ஆனாலும் அவர் விட்டுச்சென்ற பாடல்கள் இன்றளவும் நம் மனதை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன.

நன்றி : Live Tamil News

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...