எளிமையின் அடையாளம்.. தகைசால் தமிழர் நல்லக்கண்ணு
எளிமையின் அடையாளம்.. தகைசால் தமிழர் நல்லக்கண்ணுவிற்கு 99வது பிறந்தநாள்.. முதல்வர் வாழ்த்து
99ஆவது பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இன்று டிசம்பர் 26ஆம் தேதி தனது 99ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் தோழர் நல்லக்கண்ணு என்று அழைத்து வாழ்த்து கூறி வருகின்றனர்.
திருநெல்வேலி அருகே, ஸ்ரீவைகுண்டம் நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். இளம்வயது முதலே பொது மற்றும் சேவைப்பணிகளில் ஆர்வம் கொண்ட நல்லகண்ணு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து நாட்டின் விடுதலைக்காக சிறை சென்றவர். 15 வயது இருக்கும் போதே, நல்லகண்ணு இடதுசாரி இயக்கச் செயல்பாடுகளில் தீவிர ஆர்மாக இருந்தவர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பஞ்சம் நிலவிய காலகட்டங்களில் இரண்டாயிரம் நெல் மூட்டையை ஒருவர் பதுக்கிவைத்துள்ளார் என்பதை அறிந்து ஜனசக்தி என்னும், இந்திய கம்ய்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையில் எழுதி, அதை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். தந்தையிடம் சொல்லாமல் எளிய மக்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர் நல்லக்கண்ணு
தனது 18வது வயதில் அதிகாரப்பூர்வமாக தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரப்பூர்மாக இணைத்துக் கொண்டார். ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி சுற்றுவட்டார பட்டியல் இன மக்களின் வாழ்வினை மேம்படுத்த கணிசமான போராட்டங்களை முன்னெடுத்தார். சாதியற்ற சமூகத்தை உருவாக்கத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் நல்லகண்ணு. நல்லகண்ணு ரஞ்சிதம் அம்மாளை இளவயதில் திருமணம் முடித்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ரஞ்சிதம் அம்மாள், ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளித்தலைமை ஆசிரியையாக இருந்து ஓய்வுபெற்றார். தமிழக அரசின் அம்பேத்கர் விருதையும் தகைசால் தமிழர் விருதையும் பெற்றுள்ளார் தோழர் நல்லக்கண்ணு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஐயாவின் 99 ஆவது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று வாழ்த்து கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் 99ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்! ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு அவர்கள், நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்