சிவாஜி ராவ் என்கிற ரஜினிகாந்த்
கே.பாலசந்தர்: சிவாஜி ராவ் என்கிற சாதாரண நடிகனை, ரஜினிகாந்த் ஆக்கினேன். சொந்த முயற்சியில் அகில உலகம் போற்றும் நடிகனாகிவிட்டாய். எந்திரன் வந்த பிறகு மூன்று இமய மலைக்கு மேல் போய்விட்டாய். இந்த உச்சத்தை அடைந்த ரஜினியான நீ, திரும்ப சிவாஜி ராவ் ஆக முடியுமா?
ரஜினிகாந்த்: சிவாஜி ராவா இருப்பதால் தான், ரஜினிகாந்தா இருக்கேன். இந்த பேர், புகழ் சிவாஜியால் பாதிக்கப்படவில்லை. அதனால் தான் தாங்கிட்டு இருக்கேன்.
கே.பாலசந்தர்: கோயிலுக்கு போக முடியாது, ஷாப்பிங் பண்ண முடியாது, நடந்து வெளியே போக முடியாது, பெட்டிக் கடையில் டீ சாப்பிட முடியாது, எல்லா சரவண பவனையும் விலைக்கு வாங்க முடியும், ஆனால் உன்னால் அங்கு போய் ஒரு காபி சாப்பிட முடியாது. சூப்பர் ஸ்டாரா நீ கொடுத்த விலை என்ன? சுதந்திரம் போனதில் வருத்தம் உண்டா?
ரஜினிகாந்த்: வருத்தம் உண்டு. என்னுடைய நிம்மதி, சந்தோசத்தை பறிகொடுத்துட்டேன்.
கே.பாலசந்தர்: சுதந்திரத்தை தவிர, வேறு ஏதாவது விட்டுப் போனதாக நினைக்கிறீயா?
ரஜினிகாந்த்: சாதாரண குடிமகனா, நான் வெளியே நடமாட முடியவில்லை. கைதி மாறி இருக்கிறேன். சூழ்நிலை கைதி என்று சொல்லலாம்.
கே.பாலசந்தர்: உன் சுயசரிதையை நீயே எழுதுவியா?
ரஜினிகாந்த்: என் சுயசரிதையை எழுதும் போது உண்மையை எழுத வேண்டும். எதையும் மறைக்க கூடாது. நிறைய பேரின் மனசு துன்பப்படும் என்பதற்காக உண்மையை மறைக்க கூடாது. நடந்ததை நடந்தது மாதிரி எழுதவில்லை என்றால், அது சுயசரிதையே கிடையாது. மகாத்மா காந்தியின் சுயசரிதை படித்த பின், அவருக்கு வந்த தைரியம் எனக்கு வந்தா, நான் எழுதுவேன்.
கே.பாலசந்தர்: இந்தியாவின் நம்பர் 1 நடிகர் என்கிற நிலையை காப்பாற்ற வேண்டும் என்பதில் பயமா இருக்கா? ஈஸியா எடுத்துக்கிறீயா?
ரஜினிகாந்த்: என்னை காப்பாற்றிக் கொள்ள நான் முயற்சிக்க மாட்டேன், ஏன் என்றால் நான் அந்த இடத்தை எதிர்பார்க்கவில்லை. இது ஒரு படத்தில் வந்த இடம். எந்திரனால் வந்த நிலை. அதை நான் நம்பர் ஒன்னாக எடுத்துக்கொள்ள கூடாது.
கே.பாலசந்தர்: சத்தமில்லாமல் பல உதவிகள் செய்கிறாய், கடவுள் அந்தஸ்து கொடுத்த தமிழ் சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறாய்?
ரஜினிகாந்த்: தமிழர்கள், தமிழ் சினிமா பெருமைபடும் அளவிற்கு ஏதாவது செய்வேன்.
கே.பாலசந்தர்: இந்த 30 வருடத்தில், இந்த படத்தை நாம பண்ணிருக்கலாமே என்று நினைத்தது உண்டா?
ரஜினிகாந்த்: உண்டு, நிறைய படம் சொல்லலாம். எந்த படம் என்று சொல்ல விரும்பவில்லை.
கே.பாலசந்தர்: உன்னுடைய திறமையை முழுமையாக யாரும் காட்டவில்லை என்று நினைக்கிறேன், நீயே இயக்கினால் என்ன?
ரஜினிகாந்த்: நான் இயக்குனர் ஆகும் ஆசை இல்லை. அது மிகப்பெரிய பொறுப்பு.
கே.பாலசந்தர்: 50 ஆண்டுகளுக்கு முந்தைய வீரபாண்டிய கட்டபொம்மன், எங்க வீட்டு பிள்ளை படங்களை திரும்பவும் பார்க்கிறார்கள், 50 ஆண்டு கழித்து உன்னுடைய எந்த படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாய்?
ரஜினிகாந்த்: ஸ்ரீ ராகவேந்திரர், பாட்ஷா, எந்திரன்.
நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்
தமிழ்