ஆலங்குடி சோமு

 ஆலங்குடி சோமு

ஆலங்குடி சோமு (12 டிசம்பர் 1932 – 6 ஜூன் 1997) ஒரு இந்திய தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார், அவர் பல படங்களில் பல பிரபலமான பாடல்களை எழுதியுள்ளார்.  அவர் 1960 முதல் 1990 களின் பிற்பகுதி வரை துறையில் தீவிரமாக இருந்தார்.

சினிமாக்களுக்கு திரைக்கதை எழுத வேண்டுமென்ற ஆவலோடு கோடம்பாக்கம் நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித் தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். இந்த சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த தேவர் இப்படத்திற்குப் பாடல் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஆலங்குடி சோமு எழுதிய முதற்பாடல் 1960-இல் வெளிவந்த ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தில் ஏ.எல்.இராகவனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய ’ஆம்பளைக்குப் பொம்பளை அவசியந்தான்’’ என்ற பாடல். இஃது ஓர் நகைச்சுவைப் பாடல். படத்தில் இப்பாடல் காட்சியில் நகைச்சுவைச் செம்மல் குலதெய்வம் ராஜகோபாலும் மனோரமாவும் நடித்திருந்தனர். பாடலும் வெற்றியைப் பெற்றது.

1961-இல் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ படத்துக்காக ’கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்’, 1963-இல் ‘கலையரசி’ படத்தில் ’நீல வானப் பந்தலில்’, ’காஞ்சித் தலைவன்’ படத்தில் ‘அவனியெல்லாம் புகழ் மணக்கும் அம்மன் அருள்’, பி.பானுமதி பாடிய ’மயங்காத மனம் யாவும் மயங்கும்’ போன்ற பாடல்கள் ஆலங்குடியாரின் பிரபலமான பாடல்களாகும்.

1964-ஆம் ஆண்டு இரண்டு படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். அவை ‘தொழிலாளி’, ‘தெய்வத்தாய்’. ‘தொழிலாளி’ படத்தில் ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி’ என்ற பாடல் பொதுவுடமை, சகோதரத்துவம், ஒற்றுமை என்பவற்றை அழகாக எழிய தமிழில் எடுத்துக் கூறிய பாடல். சோமு எம்.ஜி.ஆருக்காக எழுதிய முதல் பாடலும் இதுதான்.

1965-ஆம் ஆண்டு 10 படங்களுக்குப் பாடல் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. ‘இரவும் பகலும்’, ’எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒரு விரல்’, ‘கார்த்திகை தீபம்’, ‘எங்க வீட்டுப் பெண்’, ’பூஜைக்கு வந்த மலர்’, ‘நாணல்’, ’நீர்க்குமிழி’, ‘விளக்கேற்றியள்’ என்பவை அந்த பத்தில் அடக்கம். ‘இரவும் பகலும்’ படத்தில் ஆறு பாடல்களை எழுதினார். நடிகர் எஸ்.ஏ.அசோகன் பாடிய ஒரே பாடலான ‘இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான்’, டி.எம்.எஸ்.பாடிய ‘இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்’ பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றப் பாடல்களாகும்.

இதே ஆண்டில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’க்காக இவர் எழுதிய எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினருடன் பாடிய கண்களும் காவடிச் சிந்தாகட்டும், காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்’ என்ற பாடலை எழுதித்தரும்படி கேட்டவுடன் ஏழே நிமிடங்களில் எழுதிக்கொடுத்தார் ஆலங்குடி சோமு. எம்.ஜி.ஆரிடம் ஆலங்குடி சோமுவை அறிமுகப்படுத்தியவர் நடிகர் எஸ்.ஏ.அசோகன். இதே படத்தில் வரும் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ’மலருக்குத் தென்றல் பகையானால்’ பாடலும் இவர் எழுதியதே.

1968-இல் வெளிவந்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் இவர் எழுதிய ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ என்ற டி .எம்.எஸ், பி.சுசீலா பாடிய பாடலைக் கேட்டு ரசிக்காத உள்ளங்கள் இல்லையெனலாம். இப்படத்தின் பாடல்களை நான்கு கவிஞர்கள் எழுதினார்கள். திரையில் இந்தப் படத்தின் தலைப்புப் பட்டியலில் ஆலங்குடி சோமுவின் பெயரும் இடம்பெற்றிருக்கும். இசைத்தட்டில் இந்தப் பாடல் கவிஞர் வாலி எழுதியதாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இணையதளங்களிலும், கவிஞர்களின் பாடல் பட்டியல் களிலும் ஆலங்குடி சோமு என்பதாகத்தானிருக்கும். இதே படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை’ என்ற பாடலும் இவர் எழுதியது .

1960 தொடங்கி, 1997 வரை 35 ஆண்டுகளில் எண்பது படங்களுக்கு 170 பாடல்கள் எழுதியுள்ளார் ஆலங்குடி சோமு. இவர் கடைசியாக எழுதியது ‘பொற்காலம்’ படத்திற்கு எழுதியது 1997-இல் வெளிவந்தது.

இவர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நாகேஷ், ஜெமினிகணேஷ், ராஜஸ்ரீ, பேபி ராஜி, வசந்தா, விஜயலலிதா நடித்த ‘பத்தாம் பசலி’ என்ற படத்தையும், ஜெய்சங்கர், ஜெயகௌசல்யா, ஜே.பி.சந்திரபாபு, சுருளிராஜன், மனோகர், ஏ.சகுந்தலா, ரமாபிரபா, ஜஸ்டின் நடித்த ‘வரவேற்பு’ என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவ்விரு படங்களும் வெற்றி பெறவில்லை. ஆனால் பத்தாம் பசலியில் இடம் பெற்ற ‘அம்மாடி எம்புட்டு தூரம் நடக்குறது’, ‘வெள்ளை மனம் கொண்ட பிள்ளையொண்ணு’, ’போடா பழகட்டும் ஜோடி’, ‘பத்தாம் பசலி மாமா…. மாமோய், அந்தப் பாடம் படிக்கலாமா’ ஆகிய பாடல்கள் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அது போல ‘வரவேற்பு’ படத்தில் இடம்பெற்ற ‘பொன் வண்ண மாலையில் நீ தொடும்போது’, ‘வரவேண்டும் மகராஜா தரவேண்டும் புதுரோஜா’, ‘ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்’ ஆகிய பாடல்களும் அன்றைய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும்.

எம்.எஸ்.வியிடம் அநேக சிறப்பான பாடல்களை எழுதியிருக்கிறார். “ஆண்டவன் உலகத்தின் முதலாளி”, “தாயில்லாமல் நானில்லை”, உள்ளத்தின் கதவுகள் கண்களடா”, போன்ற பல கருத்துள்ள தத்துவப்பாடல்களை இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய “பொன் மகள் வந்தாள், பொருட்கோடி தந்தாள்” என்றபாடல் ஆல்டைம் ஃபேவரைட்.

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (இலக்கியம், இசை மற்றும் நாடகம்) இவரை 1973-74 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி என்ற பட்டத்துடன் பாராட்டியது

நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...