#பூச்சிப்புழுவும்_இயற்கைவிவசாயமும்
பூச்சி இனங்கள் அழிந்து வருவதால் விவசாயம், உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
உலகின் 90% உணவு தேவையைப் பூர்த்தி செய்வதில் 100 தாவரங்களில் 71 தாவரங்கள் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை மூலம் ஏற்படுகிறது.
பயிர்களுக்கு நன்மை செய்யும் சிலந்திகள், குளவிகள், பொறிவண்டுகள், தரை வண்டுகள், தேனீக்கள் பூக்களில் தேன் எடுக்க ஒவ்வொரு பூவாக செல்லும்போது மகரந்தத்தை எடுத்துச் அயல் மகரந்த சேர்க்கை செய்கிறது. மகரந்த சேர்க்கைக்காக மட்டுமல்லாமல் தீமை செய்யும் பூச்சிகளையும் இவை உண்டு வாழ்ந்து நன்மை தருகின்றன.
உலக அளவில் வெப்பநிலை 60 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் 0.2 முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. பூச்சிகள் குளிர் ரத்த உயிரினங்கள். அவைகளின் உடல் வெப்பநிலையும் சுற்றுச்சூழலில் இருக்கும் வெப்பமும் ஒரே அளவில் இருக்கும்.
கார்பன்-டை-ஆக்சைடு காரணமாக வெப்பநில அளவு அதிகரிக்கும்போது பயிர்கள் சத்துக்களை எடுத்து வளர்வதில் பிரச்சனை வருகிறது. அந்த பயிர்களை பூச்சிகள் உட்கொள்ளும்போது பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியில் பாதிப்பு வருகிறது.
சில பூச்சிகள் அதிகமாகவும், சில பூச்சிகள் உண்ண முடியாமலும், சில பூச்சிகள் சாப்பிடும் நேரம் அதிகமாகவும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள் பூச்சிகளுக்கு வருகின்றன. பூச்சிகளின் புழுப் பருவம் பத்து நாட்கள் வரை அதிகமாகிவிட்டதால் அவைகள் பூச்சிகள் ஆவதற்கு முன்பாகவே தீமை செய்யும் பூச்சிகள் அவற்றை தின்றுவிடுகின்றன.
கார்பன்-டை-ஆக்சைடு அதிகமானதால் பயிர்களின் இலைகள் கடினமாகி விட்டன, இதனால் சரிவர உணவு எடுத்துக் கொள்ள முடியாமலும் பாதிக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக பறவையினங்கள் பூச்சிகளை உண்ணும் பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால் பறவைகள் முட்டை போடுவதில் மாற்றம் வருகிறது. டென்மார்க்கில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 28% பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சியினங்கள் அழிந்தால் பழம் காய்கறிகள் உற்பத்தியில் பெருமளவு சரிவு ஏற்படும். இயற்கை சூழலில் ஏற்பட்ட மாற்றமும் சாகுபடியை அதிகரிப்பதற்காக தெளிக்கப்படும் அதிகமான ரசாயன உரங்களும் மருந்துகளும் விவசாயத்தை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டு போகின்றன. நவீன விவசாயம் என்பது செயற்கை உரங்களை பயன்படுத்துவது அல்ல. மாறாக, இயற்கையான தாவர வளர்ச்சி என்ன என்பதை புரிந்து நவீன அறிவியல் முறையில் உற்பத்தி செய்வதே ஆகும் !