அண்ணா எனும் கோகினூர் வைரம் ||காலச்சக்கரம் சுழல்கிறது – 27

 அண்ணா எனும் கோகினூர் வைரம் ||காலச்சக்கரம் சுழல்கிறது – 27

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் தமிழ் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

காஞ்சிபுரத்தில் 1909இல் செப்டம்பர் 15ஆம் தேதி நடராஜன், பங்காரு தம்பதக்கு மகனாகப் பிறந்தவர் தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா. அவரது பெற்றோர் உண்மையிலேயே ஒரு பெரும் பாக்கியசாலிகள்தான்.

தங்கள் பிள்ளையை எல்லோரும் பேரறிஞர் என்று அழைக்கப்படுவது பெற்றவர்களுக்குப் பெருமை தானே. அண்ணா தனது எழுத்துக்களையும், கருத்துக்களையும் மக்களிடையே மிக நேர்த்தியாக எடுத்துச் சென்றவர். பள்ளி இறுதிப் படிப்பை முடித்ததும் மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.
1928ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றார். அதன் பிறகு எம்.ஏ., 1935ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் பெத்துநாயக்கன்பேட்டையில் போட்டியிட்டு அவர் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

நீதிக்கட்சி, அதன் பிறகு திராவிடர் கழகம் என்று பயணித்த அண்ணா அவர்கள் 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி அன்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு அமைப்பை அறிவித்து, ராபின்சன் பூங்காவில் முதல் கூட்டத்தைத் தொடங்கி மிக விமரிசையாக நடத்தினார்.

அன்று அவர் நடத்திய அந்தப் பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்ட, ஒரு அரசியல் இயக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தை தலைமை ஏற்று நடத்திய மாவீரர் ஆனார்.

அண்ணா அவர்கள் மெம்பர் ஆப் பார்லிமென்ட் ஆனதும், அவர் அந்த அவையிலே பேசியபோது அவரது ஆங்கில உச்சரிப்பைக் கேட்டு மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் அண்ணாவை ஆர்வமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். நேரமானதும் சபாநாயகர் மணி அடிக்க முற்பட்டபோது அன்றைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், “அண்ணா தொடர்ந்து பேசட்டும்” என்றாராம். அப்படி என்றால் அண்ணாவின் ஆங்கிலச் சொற்பொழிவை அவரும் ரசித்திருக்கிறார் என்று தானே அர்த்தம்.

அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைத் தன் இதயக்கனி என்றும், கலைஞரைத் தன் அருமைத் தம்பி என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்த குணம் படைத்தவர் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

காங்கிரஸ் இயக்கத்தை எதிர்த்துப் போட்டியிட்டு பெரும்பான்மையோடு 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை அமைத்து அண்ணா முதலமைச்சர் ஆனார். அதன் பின் சிறப்பான முறையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை நடத்திவந்த அண்ணா எழுத்தை மிகவும் நேசித்தவர்.

இயல் துறையில் அவர் ஒரு விடிவெள்ளி என்றுதான் சொல்ல வேண்டும். நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதிய அவர் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம், சொர்க்கவாசல், ஓர் இரவு, ரங்கோன் ராதா, சந்திரோதயம், வேலைக்காரி, வண்டிக்காரன் மகன் போன்ற படைப்புகள் எல்லாம் நாடகமாகவும், திரைப்படமாகவும் வந்து ரசிகப் பெருமக்களுக்கு அது விருந்தாகி இருக்கிறது.

சினிமா மூலம் சீர்த்திருத்தக் கருத்துக்களை சொன்ன அண்ணா நிலச்சுவாந்தார்கள் அதிகம் இடம்பெற்றிருந்ததால் நிலச்சுவாந்தார்கள் கட்சி என காங்கிரஸ் அடையாளம் காட்டப்பட்டது. ஒருபுறம் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸுக்கு எதிராக விவசாயிகளை விழிப்புணர்வு ஏற்படுத்த அதைத் திரைத்துறை மூலம் எளிதாக கையகப்படுத்தினார் அண்ணா.

ஓர் இரவு (1951), வேலைக்காரி (1949), நல்ல தம்பி (1949) போன்ற திரைப்படங்களின் வெற்றி தி.மு.க. தலைவர்களை உற்சாகப்படுத்தியது. திரைப்படத் துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

அறிஞர் அண்ணாவின் எண்ணற்ற படைப்புகளில் ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் ‘பணத்தோட்டம்.’ சுதந்திர இந்தியாவில் தென்னாடு மட்டும் எப்படிச் சுதந்திரம் பெறாமலிருக்கிறது என்பதையும் அண்ணா அம்பலப்படுத்துகிறார். அவரைப் போன்ற தலைவர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை நாம் இன்று இழந்து கொண்டிருக்கிறோம்.

இந்தத் தருணத்தில், இந்த நூலை மீண்டும் படிக்கவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.

அண்ணாவின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் அனுதாபியாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அண்ணாவின் ‘பணத்தோட்டம்’ நாவலைப் படித்து அண்ணா மீது மிகுந்த அபிமானம் கொண்டார். அது மட்டுமா? கண்ணதாசன் உள்ளிட்ட மிகப்பெரிய கவிஞர்கள் அண்ணாவால் தி.மு.க.வுக்குள் ஈர்க்கப்பட்டனர்.

சித்திரை மாதத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திற்கு அறிஞர் அண்ணா பத்தரை மணியளவில் சென்றபோது, அநேகம் பேர் உறக்கத்தில் இருந்தனர்.

அவர்களை எழுப்ப ஒரு உத்தியைக் கையாண்டார் அண்ணா, ‘மாதமோ சித்திரை, நேரமோ பத்தரை, நீங்களோ நித்திரை!’ என்று முழங்கினார். நித்திரை கலைந்து மக்கள் அனைவரும் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் தங்களது முத்திரையைப் பதித்தார்கள். இது அண்ணாவின் தமிழுக்கு ஒரு சான்று!

முக்கிய குறிப்பு:- இலக்கிய மேதை வாரா அவர்களைப் பற்றி அண்ணா ‘அக்ரகாரத்தில் ஒரு அதிசய மனிதர்’ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இதைப் படித்தால் அறிஞர் அண்ணா நம் நெஞ்சில் என்றும் நிறைந்திருப்பார். குணத்தில் அண்ணா ஓர் கோஹினூர் வைரம்.

1969ஆம் ஆண்டு அகால மரணம் அடைந்த அண்ணாவைப் பார்க்க கோடிக்கணக்கான மக்கள் திரண்டார்கள். அண்ணாவிற்கு கலைஞர் எழுதிய இரங்கல் கவிதையைக் கேட்டு அனைவருமே கண்ணீர் சிந்தினர். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் கலைஞரின் இரங்கல் கவிதை மக்களின் செவிகளில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும்.

1958ஆம் ஆண்டு நான் நடித்த பாட்டாளி பெற்ற பைங்கிளி என்ற நாடகத்திற்கு அண்ணா அவர்கள் தலைமை தாங்கி சொற்பொழிவு ஆற்றிய போது, அதில் நான் நடித்த ஒரு காட்சியில் “Paper…. Paper…” என்று ஒருவன் சத்தமிட்டுக்கொண்டே போகும்போது நான் அவனை நிறுத்தி “என்னென்ன Paperலாம் இருக்கு?” என்று கேட்டபோது, “Hindu, தினமணி, சுதேசமித்திரன்” என்று அவன் சொல்ல, நான் “அண்ணாவின் திராவிடநாடு இல்லையா?” என்று கேட்டதும் மக்கள் எழுப்பிய கைத்தட்டல் அடங்க ஐந்து நிமிடம் ஆகியது. அந்த கைத்தட்டல் எனக்கல்ல! அது அண்ணாவிற்குக் கிடைத்த கைத்தட்டல்.

அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்த அண்ணா பிராமணச் சிறுவனாக நடித்த என் நடிப்பைப் பாராட்டியது எனக்கு முதன்முதலில் அண்ணாவிடம் இருந்து கிடைத்த அங்கீகாரம்.

நான் என்றென்றும் போற்றி புகழ்வது பேரறிஞர் அண்ணா அவர்களைத்தான்.

(தொடரும்)

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...