அவர்கள்……இவர்கள்…….நான்…….
மானுடம்
எப்போதும் மாற்றங்களைத் தேடிப் பயணிப்பதை வரைமுறை நிகழ்வாக்கி வைத்துள்ளது. முந்தியவை பிந்திய காலங்களில் நடைபெறும். பிந்தியவை முந்தைய காலங்களில் நடைபெற்றதாக இருக்கும். இந்தச் சூழலாட்டத்தில் சில பக்கங்கள் நினைவுகளை விட்டு நீங்காத வரலாறுகளை உருவாக்கி விடும்..
இத்தொடரில் நீங்காத பதிவுகளாக இருக்கைப் போட்ட சில வரலாற்றுப் பக்கங்களை நகலெடுத்து கொஞ்சம் நளினம் ஊட்டி களப் பொருளாக்கி உள்ளேன்.
அவர்கள் இவர்கள் நான் என்ற தலைப்பை நான் தேடி எடுத்த போது, குழப்ப ரேகைகள் வலைப் பின்னலை மனதிற்குள் உருவாக்கியது. எதனை முன்னிறுத்துவது ? எக்காலத்திலிருந்து தொடங்குவது என்ற வினா மேலோங்கியது.
காதலியிடம் காதலைச் சொல்லும் வரை இன்பத்தின் படபடப்பு இதயத்தின் ஓசையாக இருக்கும். காதலைச் சொல்லிய பின் காதலைத் தொடர்வது எப்படி என்பதில் கவனம் திரும்பிவிடும். அந்தச் சித்தாந்தக் கோட்பாடுதான் இங்கும் செயல்வினைக் காட்டியது.
இன்பப் படபடப்பு இன்று தொடரும் துடிதுடிப்பாக மாறிட, இதயச் சுவற்றில் பதிவான சில முகங்களைத் தேடி எடுத்து நிலவு என்ற வெள்ளிக் கிண்ணத்தில் முகம் அலசி, மேகத்தேரில் அவர்களை அமர வைத்து, விழிகளுக்கு ஊர்கோலம் கொண்டு வரும் முயற்சியினை எடுத்துள்ளேன்.
வாழ்ந்தவர்களையும் வீழ்ந்தவர்களையும் தேடிப்போய் தடயங்களைச் சேகரிப்பதில் கிடைக்கும் இன்பத்தைவிட, வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மாறுபட்ட பார்வைகளைக் கவர்ந்து வருவதில் ஒரு தனிச்சுகம், இங்கு நான் மயிலிறகால் தீண்டும் ஒவ்வொரு மனிதர்களும் என்னையும் அறியாமல் என் இதயத்திற்குள் இருக்கை போட்டவர்கள்.
சிறு வயதில் அம்மாவிடம் கதை சொல்லும்மா…. என்று அடம் பிடித்த போது, அவள் தவறியும் தனது துயரத்தின் பக்கங்களை கதையாகப் புனைந்ததில்லை, என் மனம் துள்ளல் கட்டும் நிகழ்வுகளை மட்டும் கருப்பொருளாக்கி கதை வடித்தாள். அந்த நேர்மையை இத் தொடரில் கடைபிடிக்க முயன்றிருக்கிறேன். அந்த பாசக் கிழவிக்கு நன்றிகள் பல !
வேனிற்காலத்தில் காதலனோடு இசைந்து இருக்க பெண்டிர் விரும்புவர். சின்னச் சிணுங்கல், செல்லக்கடி, குறும்புப் பேச்சு என காதலின் சீண்டல் அவர்களை ஆட்கொள்ளும்.
வானவீதிக்கு இயற்கை மின்னஞ்சலில் தூது அனுப்பிக் கொண்டிருக்கும் தென்னகத்துக் கிளியோபட்ரா, மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்றலோடு கலவி நடத்திக் கொண்டிருக்கும் சந்தன மரத்தின் ஈர்ப்பு மணத்தை வஞ்சியர் மேனி காணும் பூக்களில் தவழ்ந்து விளையாடும் நறுமணம் இடம் மாறி பெண்களின் கூந்தலில் வாடகைப் பந்தல் கட்டும். காமத்தின் போதையை உடற்கூறுகள் பளைசாற்றும் வேளையில், காதலன் கதாநாயகனாகக் காதலிக்குத் தெரிவான். முதல் புள்ளியாகக் கோலமிடுகிறேன்.
மாதவி….!
இந்தப் பெயரை அறியாதவர்கள் தமிழகத்தில் தடம் பதித்ததில்லை, சிறியவர் முதல் பெரியவர் வரை இலக்கியம் தெரியாவிட்டாலும், மாதவி என்ற பெயரைத் தெரிந்து வைத்திருப்பவர்.
காதலியாய் மனதிற்குள் இருக்கை கொண்டவளைத்தான் கற்பனையில் வர்ணித்து மகிழ்ந்து கொள்ள முடியும். சிலப்பதிகாரம் தந்த இளங்கோ அடிகளின் கருத்துகள் மாதவியின் மீது இளங்கோவிற்கு இருந்த காதலைப் பறை சாற்றுகின்றன. யாருக்கும் தெரியாமல் மாதவியை ஒரு தலையாய் அவர் காதலித்திருக்க வேண்டும்.
கோவலன் கட்டில் விளையாட்டின் சுகம் தேடி மாதவியிடம் சென்றான். இளங்கோ அடிகள் தனத எழுத்தின் உயிர் மாதவி என்று அவளிடம் சென்றான். மாதவியை அங்குலம் அங்குலமாகக் களித்தவன் இளங்கோ அடிகள்.
அவளின் கால்நகம் தொடங்கி கூந்தல் வரை இளங்கோ அடிகளின் விழிப்பாட்டில் மதியை மயக்கியது. கோவலனை விட மாதவியை நேசித்த பெருங்கள்ளன் அவன். அந்தக் கள்வனின் வழியில் மாதவியை நானும் தேடுகிறேன்.
………………….தொடரும்