ரூ.100 கொடுத்து ஜேசிபி, ட்ராக்டரில் பயணிக்கும் மணலி மக்கள்..! | நா.சதீஸ்குமார்

 ரூ.100 கொடுத்து ஜேசிபி, ட்ராக்டரில் பயணிக்கும் மணலி மக்கள்..! | நா.சதீஸ்குமார்

மிக்ஜாம் புயல் பாதிப்பால், மணலியில் 100 ரூபாய் கொடுத்து ஜேசிபி மற்றும் ட்ராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் பயணிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் மணலி, புதுநகர், மாதவரம், ஆண்டார்குப்பம், சடையங்குப்பம் உள்ளிட்ட பல ஊர்கள் தீவுகளாக மாறிய நிலையில், வடசென்னைக்கு உட்பட்ட மணலி பகுதியில் 3 திசைகளிளும் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.

எந்த ஒரு வாகனங்களும் செல்ல முடியாமல் இருந்த நிலையில், முக்கிய நிறுவனங்களாக எரிவாயு சிலிண்டர் உற்பத்தி செய்யும் சிபிசிஎல் உரத் தொழிற்சாலை, எம்.எஃப்.எல் உள்ளிட்ட நிறுவனங்கள் மழை நீரால் சூழ்ந்து ஊழியர்கள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மணலிக்கு செல்வதற்கு சிரமம் ஏற்பட்ட நிலையில், நேற்று ஜேசிபி எந்திரம், ட்ராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் 100 ரூபாய் கொடுத்து பொதுமக்கள் பயணம் செய்தனர்.

இதேபோன்று வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்ததால், திருமண மண்டபம், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஒரு சிலர் அத்தியாவசிய தேவைக்காக திருவொற்றியூர் வரவேண்டிய இருந்ததால், அவர்கள் 100 ரூபாய் கொடுத்து ட்ராக்டர்களில் பயணம் செய்தனர்.

ஒவ்வொரு முறையும் புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடும்போதெல்லாம் மணலி சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த பாதிப்படைந்து, தங்கள் உடமைகளை தொடர்ந்து இழந்து வருவதாகவும், தமிழக அரசு உடனடியாக உபரிநீர் கால்வாய்களை முறையாக கையாள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பேரிடர் காலங்களில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கட்டில், மெத்தை, பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை இழந்து வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...