“ஏழைகள் ஏழைகளாகவே தொடரும் போது பொருளாதார வளர்ச்சி என்பது வரமல்ல, சாபம்” – கனிமொழி என்.வி.என்.சோமு..! | நா.சதீஸ்குமார்
ஏழைகள் ஏழைகளாகவே தொடரும் போது பொருளாதார வளர்ச்சி என்பது வரமல்ல, சாபம் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து மாநிலங்களவையில் டிசம்பர் 5ம் தேதி நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டது. ஜப்பான் மற்றும் ஜெர்மனியை நாம் பின்னால் தள்ளி பொருளாதாரத்தில் இந்த உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறோம். இந்தியப் பொருளாதாரம் உயர்ந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை. ஜி.எஸ்.டி. வரி வருவாய் உச்சத்தைத் தொட்டிருப்பதாக மத்திய அரசு சொல்கிறது. மகிழ்ச்சி.
ஆனால் இதன் பலன்கள் ஏழைகளுக்கும் பொருளதாரத்தில் கீழ் நிலையிலுள்ள மக்களுக்கும் போய்ச் சேர்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. அமெரிக்க பொருளாதாரத்தைவிட வேகமாக உயர்ந்து, 7.6 சதவிகித ஜி.டி.பி. வளர்ச்சியை நாம் அடைந்திருக்கிறோம். ஆனால் இந்தியாவில் 80 சதவிகித மக்கள் ஏழ்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை மாறவில்லை என்ற உண்மையை இன்னொரு பக்கம் பார்த்தால் இந்தப் பொருளாதார வளர்ச்சி வரமல்ல… சாபம்!
வருமானத்திலும், சொத்துக்களை வாங்கும் தன்மையிலும் இந்தியாவில் சமநிலையற்ற போக்கு சமீப ஆண்டுகளாக உயர்ந்துவருவது கவலை அளிக்கிறது. 1980 ல் தேசிய வருவாயில் 36 சதவிகிதத்தை, வருமானம் ஈட்டுவதில் உச்சத்திலுள்ள பத்து சதவீதம் பேரே பங்கிட்ட நிலையில், தற்போது அதே பத்து சதவீதம் பேர், நாட்டின் வருவாயில் 56 சதவிகிதத்தை வருமானமாகப் பெறுகிறார்கள். மீதமுள்ள 90 சதவிகிதத்தினரின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் என்பது இல்லை. மாறாக அவர்களின் நிலை கீழ் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
இன்னொரு கோணத்தில் சொன்னால், 2000ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த சொத்தில் 66 சதவீதத்தை முதல் பத்து பணக்காரர்கள்தான் வைத்திருந்தார்கள். இப்போது அதே முதல் பத்து பணக்காரர்கள் இந்தியாவின் 77 சதவீத சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இந்த சமநிலையற்ற போக்கு தொடர்ந்தால் சமூக அமைதி கெட்டு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போவதுடன், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் குறையும் நிலை ஏற்படும்.
வேலைவாய்ப்பின்மை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 18 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. மிக குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கே அரசு மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்பு அதிர்ஷ்ட வசமாக அமைகிறது.
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாக இந்த அரசு சொன்னது. ஆனால் ஆண்டுக்கு பத்து லட்சம் வேலை வாய்ப்புகளைக் கூட ஏற்படுத்தவில்லை. மத்திய அரசுப்பணிகளில் 40 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கிறது. அதை நிரப்பவும் இந்த மத்திய அரசு தயாராக இல்லை.
சமூக நீதியை நிலைநாட்ட இடஒதுக்கீடு அவசியம். தனியார் துறைகள், நிறுவநங்கள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில்லை. இடஒதுக்கீட்டுக்கு வாய்ப்பளித்து நாட்டின் சமூகக் கட்டமைப்புக்கு வழிவகுப்பது அரசுத் துறைகளும் பொதுத்துறை நிறுவனங்களும்தான். ஆனால், அந்த பொதுத்துறை நிறுவனங்களையும் இந்த அரசு அசுர வேகத்தில் தனியார் மயமாக்கி வருகிறது. இதன்மூலம் பொருளாதார சமநிலையற்ற தன்மை உண்டாக அரசே காரணமாக இருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாகத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முன்பாக தனியார் துறையில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் சட்ட மசோதாவை இந்த அரசு கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமெரிக்க டாலரை அடிப்படையக வைத்து வர்த்தகம் நடைபெறுவது தவிர்க்க முடியாத நிலையில், அந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ந்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. ரூபாயின் மதிப்பை இப்படி குறையச் செய்யலாமா என்று கேட்டு இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் கடந்த 2013-14ம் ஆண்டுகளில் அப்போதைய அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுத்து ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 40 என்ற நிலையை உருவாக்குவோம் என்று சொன்னீர்கள். ஆனால் என்ன நடந்தது என்பதை இன்றைய வீழ்ச்சியே சொல்லிவிடும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் தோல்வியை நிதி அமைச்சரே பொதுவெளியில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் அடுத்த அபாயமாக மக்களின் முன்னால் வந்து நிற்கிறது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்ரம் பெண்களை வெகுவாக பாதிப்பதாக உலக பொருளாதார அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தினரையும் கடுமையாக பாதிக்கிறது. மாதாந்திர பட்ஜெட் போட முடியாமல் ஒவ்வொரு குடும்பமும் தவிக்கிறது.
ஆட்டோ ஓட்டுனர் தொடங்கி மீன் விற்பனை செய்பவர் வரை, பால் விற்பவர் தொடங்கி ஓய்வூதியதாரர்கள் வரை என எல்லா தனி நபர்களையும் இந்த விலையேற்றங்கள் பாதிக்கிறது. ஆனாலும் இதைப்பற்றி இந்த அரசு கண்டுகொள்ளாமல், கண்மூடி வேடிக்கை பார்க்கிறது. எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து செலவு உயர்கிறது. இது காய்கறி விலை உயர்வுக்கு காரணமாக அமைகிறது.
வாகனங்களுக்கான எரிவாயு விலை ஒரு கிலோ 69 ரூபாய இருக்கிறது. இதற்கு மானியம் அளித்து ஒரு கிலோ எரிவாயு 35 ரூபாய்க்கு கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் ஓரளவாவது விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்தப் போவதாக இந்த அரசு சொன்னது. ஆனால் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைதான் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இது ஒரு தேசிய அவமானம். நாட்டின் 70 சதவிகித மக்கள் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களை நம்பியுள்ள நிலையில் அவர்களின் தேவை மற்றும் கோரிக்கைகளுக்கு இந்த அரசு முன்னிரிமை அளிக்க வேண்டும்
இந்திய மாநிலங்களில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஏற்றுமதியில் மூன்றாமிடம் வகிக்கிறது. எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திறன்மிக்க தலைமைத்துவத்தால், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தங்கள் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.
மோட்டார் வாகனத் தொழிலின் இந்தியத் தலைநகராக தமிழகம் விளங்குகிறது. 1300 மோட்டார் வாகனம் மற்றும் அதன் தொடர்புடைய உதிரிபாகத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உள்ளன. தமிழ்நாட்டுடன் தொடர்புடைய, 8.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 179 தொழிற் திட்டங்கள் தேசிய உட்கட்டமைப்பு வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் பின்னணியில் தமிழகத்தில் தொழிற் துறை மேலும் வளர்ச்சியடையச் செய்து, வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில் போதுமான நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என்.சோமு பேசினார்.