ஜப்பான் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! | நா.சதீஸ்குமார்
ஜப்பான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸ் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜுமுருகன். அவர் கார்த்தியை வைத்து ஜப்பான் படத்தை இயக்கினார். படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் பத்தாம் தேதி ரிலீஸானது. ராஜுமுருகன் இயக்கம் என்பதாலும்; ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்ததாலும் கண்டிப்பாக ஜப்பான் தீபாவளி ரேஸில் பந்தயம் அடிக்கும் என கார்த்தி ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
முக்கியமாக இது அவருக்கு 25ஆவது படம் ஆகும். அவரது அண்ணனான சூர்யாவுக்கு 25ஆவது படமாக சிங்கம் வெளியாகி எப்படி மெகா ஹிட்டானதோ அதேபோல் ஜப்பான் படமும் மெகா ஹிட்டாகும் என்றும் நம்பிக்கொண்டிருந்தனர் ரசிகர்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காதவகையில் படம் அட்டர் ஃப்ளாப் ஆனது. இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்துக்கு சென்றனர்.
படத்தை பார்த்த ரசிகர்கள் ஜப்பானில் ஒரு அம்சம்கூட நன்றாக இல்லை. மேக்கிங், கதைக்களம், திரைக்கதை என அத்தனையிலும் இயக்குநர் சொதப்பிவிட்டார். கார்த்தியும் தன்னுடைய நடிப்பை ஒழுங்காக செய்யவில்லை என குற்றஞ்சாட்டினர். மேலும் பொன்னியின் செல்வன், சர்தார் கொடுத்த வெற்றி Vibeஐ இதில் கார்த்தி தவறவிட்டிருக்கக்கூடாது என்றும் நொந்துகொண்டனர்.
அதேசமயம் ஜப்பான் படத்தோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் எட்டாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. தியேட்டரில் செய்த சாதனை போலவே ஓடிடியிலும் ஜிகர்தண்டா 2 சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் ஜப்பான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
அதன்படி ஜப்பான் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் டிசம்பர் 11ஆம் தேதி ரிலீஸாகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தியேட்டரில் ஜிகர்தண்டா 2விடம் ஜப்பான் பலத்த அடி வாங்கி சேதாரமடைந்துவிட்டது. எனவே ஓடிடியிலும் அந்தப் படத்தோடு வெளியிட்டால் இங்கும் சேதாரம் நிச்சயம் என்பதை உணர்ந்துதான் ஓடிடியில் ஜிகர்தண்டா 2 ரிலீஸிலிருந்து மூன்று நாட்கள் தள்ளி வைத்திருக்கிறார்களோ என சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர் ரசிகர்கள்.