இன்று (டிசம்பர் 2-ந்தேதி) சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
இன்று (டிசம்பர் 2-ந்தேதி) சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்!
மனித குலம் தோன்றியபோது அது பொதுவுடமை சமூகமாகதான் இருந்திருக்கும். இயற்கையில் கிடைத்த காய் கனிகளையும், வேட்டையாடிய விலங்குகளையும் பகிர்ந்து உண்டான். அடுத்தகட்டமாக குழுகுழுவாகப் பிரிந்து வாழத்துவங்கினான். இந்தக் குழு ஆடு, மாடு போன்றவற்றை வளர்க்கத் துவங்கியது. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போக அவர்களுக்கான உணவின் தேவையும் அளவும் அதிகரித்தது. உணவுக்காக இந்தக் குழுக்கள் மோதிக்கொள்ளத் துவங்கின. இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. போட்டியில் தோற்ற ஆண்கள் கொல்லப்பட்டனர். அவர்களைச் சார்ந்த பெண்களை வெற்றி பெற்ற குழுவினர் கொண்டு சென்றனர். இதற்குப்பின் தோற்றுப்போன ஆண்களையும் அவர்கள் கொல்லவில்லை. தங்களுக்கு வேலை செய்யும் அடிமைகளாக்கிக்கொண்டனர். அப்போது தான் அடிமை சமுதாயம் உருவானது.
“நாகரிங்களின் தொட்டில்” என வர்ணிக்கப்படும் தொன்மை நாகரிக நாடுகளான கிரேக்கம், எகிப்து, ரோம், அரேபியா, சீனாவிலும் அடிமைகளை வைத்திருப்பதும் பரிசளிப்பதும் சமூகத் தகுதியாகக் கருதப்பட்டது. பிற நாடுகள் அல்லது இனங்களின் மீது தங்கள் கலாசாரத்தைத் திணித்தல், அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தல் போன்ற நிகழ்வுகளில் பூர்வகுடி மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததால் அவர்களைக் கொள்ளைக்காரர்கள் கொன்று குவித்தனர். தப்பித்தவர்களை அடிமைகளாக்கினர். அதிகார ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அடிமைகள் உருவாக்கப்பட்டனர்.
தொடர்ந்து ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் நிறம் மற்றும் கலாசார அடிப்படையில் மனித இனத்தைப் பாகுபடுத்தி பெரும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி அடிமை முறையை வளர்த்து உலகமெங்கும் வீரியம் பெறச் செய்தனர். இதனடிப்படையில் கருப்பின மக்கள் தாழ்வானவர்களாக, விலங்குகளை விடக் கேவலமானவர்களாக நடத்தப்பட்டனர். வசதி படைத்தவர்கள் அடிமைகளை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டனர். அடிமை வர்த்தகம் உலக அளவில் பிரபலமான தொழிலாக உருவானது. அடிமைகளை வாங்கவும் விற்கவும் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் “மனிதனை மனிதனே” விற்கும் மாபெரும் அவலம் அரங்கேறியது. இந்த இழி நிலையை முற்றிலும் தடுத்திடும் நோக்கில் 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அடிமை ஒழிப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. பிரெஞ்சுப் புரட்சி அடிமை முறையைத் தடை செய்ய வழிவகுத்தது. மாவீரன் நெப்போலியன் தலைவரானவுடன் அடிமைத் தனத்தின் பல தடைகளை நீக்கினான். தொடர்ந்து பல நாடுகள் அடிமை முறையை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
உலக வல்லரசாக அறியப்படும் அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கனும் மார்டின்லூதர் கிங்கும் அமெரிக்க அடிமை ஒழிப்பு வரலாற்றில் மறக்க முடியாதவர்களாவர். உலக நாடுகள் அனைத்திலும் அடிமை முறை அல்லது அடிமைத் தனம் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டு நின்றது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
தற்போதைய புள்ளி விவரப்படி இந்தியாவில் 1.8 கோடிப் பேர் எந்தவொரு சிறு கேள்வியும் கேட்க முடியாமல் நவீன அடிமைகளாக வாழ்ந்து வருவதை உலக அடிமைத்தன அறிக்கை தெரிவிக்கிறது. உலகளவில் வெளியிடப்படும் அடிமைத்தனக் குறியீட்டு நாடுகளில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. நவீன அடிமைத்தனம் கொத்தடிமை, கட்டாயம் பிச்சையெடுக்க வைக்கப்படுபவர்கள், வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தப்படுபவர்கள், பாலியல் தொழிலில் தள்ளப்படுபவர்கள் எனப் பலவாறாக வெளிப்பட்டு நிற்கிறது.
சுதந்திர நாட்டில் மனிதர்களின் சம உரிமை நசுக்கப்பட்டு போராட்டக்களமாக்கப்படும் வெட்கக்கேடு. அழு என்றால் அழுவதற்கும், சிரி என்றால் சிரிப்பதற்கும், விழு என்றால் விழுந்து சாவதற்கும் அவர்கள் ஒன்றும் திக்கற்றவர்கள் அல்ல. அடிமைகளாயினும் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக எல்லாத் தகுதிக்கும் உரிய மனிதர்கள்அவர்கள்.எனவே அவர்களை மீட்டுப் புதிய சமூகம் படைப்பதில் நாம் ஒவ்வொருவரும் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செலுத்துவோம் எனச் சூளுரைப்போம்.