தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் பிசாசு
மு(தல்)னைவர்
நிலவில் கால் பதித்தது முதலில் யார் என்றாலோ அல்லது
இமய மலை சிகரத்தை முதலில் அடைந்தது யார் என்றாலோ
நமக்கு விடை எளிதில் கிடைத்து விடும்.
ஆனால் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் யார்.. ??
பிசாசு என்று விடை வருகிறது
ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.
அவ்வாறு தான் இவரது பெயரத்தி திருமதி . சிவகாம சுந்தரி
இன்றும் தனது பாட்டனாரை அன்போடு குறிப்பிடுகின்றார்.
தமிழ் , சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை கொண்டவர்
இம்மொழிகளுக்கிடையே ஆன இலக்கணங்களை 1930 ம் ஆண்டு
ஒப்பீடு செய்து தமிழில் முதன் முறையாக
முனைவர் பட்டம் பெற்ற பெருமையை தாங்கி நிற்பவர்.
மொழிகள் மற்றும் அவற்றின் இலக்கணம் மீதான வேட்கை தீராமல்
மற்ற இரு மொழிகளிலும் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர்.
ரிக் , யஜுர் சாம வேதங்களை கற்றுத் தேர்ந்த வித்துவான்.
காஞ்சி பெரியவரே வேதங்கள் பற்றிய தமது ஐயங்களை தீர்த்துக் கொள்ள மடத்திலிருந்து ,
அவ்வப்போது ஆட்களை அனுப்பும் அளவிற்கு
வேதத்தின் மீதான ஞானம் ஓங்கி இருந்தது என்பது இவரது சிறப்பு.
தாம் அடைந்த ஞானம் அனைவரும் பெற வேண்டும் என்பதை
வாழ்நாள் குறிக்கோளாய் கொண்டிருந்தார்.
பணி ஓய்விற்கு பின்னர் துப்புரவு தொழிலாளர்கள் சிலருக்கு
அன்றாடம் இவர் திருக்குறள் கற்றுத் தந்ததே அதற்கு சான்று.
பல நூல்களை மும்மொழிகளுக்கிடையே மொழியாக்கம் செய்திருந்தாலும்
முதன் முதலாய் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த பெருமையையும் இவரே தட்டிச் செல்கிறார்.
மலர்மகள்கலைமகள்மகிழ்வொடுங்கூடி
நிலவுசோணாட்டில்நீள்தமிழ்அரசாய்
மன்னுருதொண்டைமான்திகழ்புதுவையிற்
பின்னங்குடியினிற்பிராம்மணகுலத்தில்
கௌசிகமுனிவன்கால்வழிவந்த
தோமிலாக் குணத்தினன்சாமிநாதனக்கும்
வாமமார்மங்களநம்மைதனக்கும்
மகவெனவந்தனை
என்று அண்ணாமலை பல்கலைக்கழகம் இவரைப் பற்றி பாடல் புனைந்து தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டது.
பணி ஓய்விற்கு பின் தமது பேத்தியே அனைத்தும் என்று
அவருடனே இறுதி மூச்சு வரை வசித்தார்.
87 ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்த மாமனிதர் ,
இறுதி வரை நோய் நொடி எதுவுமின்றி திடகாத்திரமாய் இருந்தார் ,
தம் பேத்தியை ஓட்டப் பந்தயத்திற்கு அழைக்கும் அளவிற்கு.
நண்பர்களே இந்த பிசாசு யார் தெரியுமா ..
பூர்விகம் பின்னங்குடி
தந்தையார் பெயர் சாமிநாதன்
பெற்றோர் இட்ட பெயர் சுப்ரமணியன்
சுருக்கமாய் பிசாசு .
சென்ற வாரம் அரபு நாட்டிலிருந்து தேசம் திரும்பியிருந்த என் கல்லூரி நண்பர் பாலாஜியை சந்திக்க திருவையாறு சென்றிருந்தேன்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது அன்னை திருமதி. சிவகாம சுந்தரி அவர்கள் வழங்கிய தேன் போன்ற இனிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நானும் மகிழ்ந்தேன்.
திருவையாறு மேலமட விளாகத்தில் பி . சா .சு அவர்கள் வாழ்ந்த இல்லம்
by
குமார் ராஜசேகர்
……
1 Comment
இந்த பிசாசு அற்புதமான சக்தி கொண்டது.