தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது..!| நா.சதீஸ்குமார்
தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. சாமானிய மக்கள் முதல் விஐபிக்கள் வரை அனைவரும் காலை முதலே வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளில் 75 ஆயிரம் போலீஸாரும், 375 கம்பனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானா தனி மாநிலம் உருவான பிறகு நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் பிஆர்எஸ் கட்சியின் தலைவரான கே சந்திரசேகர ராவ்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார். ஆனால் தெலங்கானாவை தனி மாநிலமாக அறிவித்த காங்கிரஸ் கட்சி பின்னடைவைதான் சந்தித்து வருகிறது. இந்நிலையில் இம்முறை எப்படியாவது தெலங்கானாவில் ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது.
இதனால் மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளது. இதேபோல் மத்தியில் ஆளும் பாஜகவும், சந்திரசேகர ராவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. போட்டி தீவிரமாக உள்ளதால் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் 2,290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 35,655 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அவற்றில் 4000 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் சிரஞ்சீவி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். இதேபோன்று ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, எம்.எல்.சி கவிதா ஆகியோரும் வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 9 மணி நிலவரப்படி மாநிலத்தில் 9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி தெலங்கானா மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல் அரசியல் பிரமுகர்களும் சினிமா நட்சத்திரங்களும் மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.