இவர்களால் இப்பிரபஞ்சம்
இவர்களால் இப்பிரபஞ்சம்
—————————————–
வணக்கத்துடன்
கொட்டுகின்ற மழைத் தூறலில் நனைந்தவேளையில், அருகே வரும் அம்மாவின் முந்தானையில் முகம் புதைத்து ஆனந்தம் காண்பது போன்ற சுகம். சன்னல் ஓரத்தில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்யும் வேளையில், சில் லென்ற தென்றல் முகத்தைத் தீண்டி விளையாடும் சிலிர்ப்பு
பெண் என்ற அதிசயத்திற்குள் எட்டிப் பார்த்து, இப்பிரபஞ்சத்தின் குறும்புகளைத் தேடிகொண்டு வரும் இத்தொடர் ஓர் இன்ப சுகமே… இது ஒரு வித்தியாசமான முயற்சி அல்ல, இரவில் தூங்கும்போது தாயின் மார்பகம் தேடி, பாலை குடிப்பதாக நினைத்துக்கொண்டு, கைப்பெருவிரலை சூப்பிக்கொள்ளும் குழந்தையைப் போல இது ஒரு மழலைத்தேடல்… கொஞ்சம் வர்ணம் தீட்டி பார்க்க வைக்க முயல்கிறேன்…
“இவர்களால் இப்பிரபஞ்சம் ” என்ற இந்தத் தொடர் ஒரு காதல் சிணுங்கல் மட்டுமே, சாதனைகள் அனைத்தும் காதலில் இருந்துதான் பிறக்கின்றன என்ற தத்துவ நியதி இத்தொடரில் மெய்யாகி சிரிக்கும்…
ஆதாம் எந்தத் தனிமனிதன் காட்டுக்குள்ளே விலங்கினம் போல வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தபோது ஏவாள் என்ற பெண்மையின் முத்தம்தான் அவனிடம் உணர்ச்சியைப் பிரசவித்து. இங்கிருந்துதான் அறிவியல் தன் கட்டமைப்பை தொடங்கியது.
அறிவியலையும், ஆன்மிகத்தையும், நிலமகளுக்குக் கொண்டு வந்து படைப்பின் மூலமந்திரத்தை அறிவித்த பெண்ணை, ஆணின் தோளில் சாய்ந்தது ஆனந்தம் கொள்ளும் சாதாரண மெல்லினம் எனக் தவறாகக் கருதி பெண்ணை ஆற்றலற்றதாகக் கணக்கிட்ட சமுதாயம், மெல்லினம் வல்லினத்தைவிட வலுவானது என்பதைக் காலம் அறிந்து உணர்ந்து கொண்டது. ஆணை ஆண் என்று உணர்த்திய பெருமை பெண்ணுக்குத்தானே இருந்தது.
விலங்குகளுக்கிடையே ஐயோ பாவமெனத் தனியாகப் படுத்துக் கிடந்த மனிதனை, படைப்பு இலக்கணம் உள்ளவன் என அடையாளம் காட்டிய பெண்ணை, காமம் தணிக்கும் கருவியெனக் கருதி, திமிர்கொண்ட ஆண்வர்க்கம், பாலியல் வன்புணர்ச்சிக்குப் பெண்ணை அடிமைப்படுத்திக் கொண்டது… பெண் அடிமைப்பொருள் அல்ல, ஆணை ஆண்மையுள்ளவன் என இசசமுதாயச் சந்தையில் காட்சியாக்கியவள். அவள் உருவாக்கிய அறிவியல் தான் மனித இனத்தின் தொடர்ச்சி. பெண் என்ற பிறப்பு இல்லை என்றால், ஆதாமோடு மனித இனம் ஆமென் என்று ஆகியிருக்கும்… அறிவியலும், ஆன்மீகமும், நமக்கு உலகில் என்ன வேலையென்ற கேள்வியோடு ஓரமாய்ச் சுருண்டு இருக்கும்..
உலகம் என்ற பிருந்தாவன கண்ணனுக்குப் பெண்தான் காதலி, அந்தக் காதலிக்கு முதன்மை கொடுப்பதும், அவளை முகவரியாக்குவதும்தான் இசசமுதாயம் வளர நாம் செய்யும் வேள்வி.
இத்தொடரில் பெண் என்ற பிரபஞ்சக் காதலி பூப்பல்லக்கில் பவனி வருகிறாள். சாதனை படைத்தவர்களும், சாதனைக்காகக் ஓடுபவர்களும், இங்கு முக்கியமான விடயம் அல்ல. மறுமலர்ச்சிக்குப் பெண் இனத்தைக் திசைக் காட்டிய கைகளும், திசைக் காட்டிகளும், இங்கு அடையாளம்.
பெண் என்கிறான், காதல் என்கிறான், இவனும் காமத்துப்பாலைக் கொண்டு வர முயற்சிக்கிறானோ ? என்ற ஐயம் உங்களுக்கு வரலாம். அது ஆண் மனதில் ஊறிய வக்கிரத்தின் வெளிப்பாடு. ..அதற்கு என் எழுத்துக்கள் பலியாக…
இச்சமுதாயக் களத்தில் நிராயுதபாணியாக நின்ற பெண்கள், எப்படி ஆளுமைக்குள் தங்களைப் பெயரை பச்சைக் குத்திக் கொண்டார்கள் என்பது மட்டுமே என் பேனாவின் இலக்கு… ஆணுக்கு எதிரான போரும் அல்ல, பெண்களைத் தூக்கி காக்க பிடிக்கும் யுக்தியும் அல்ல, உண்மையை உண்மையைப் பேசுவோம்…
பெண் என்பவள் இச் சமுதாயச் சந்தையில் என்ன நிலையில் உள்ளாள் என்பதை அறிந்துக் கொண்டால், என் பயணம் சரியான ஐக்ளக்கை நோக்கித்தான் எனபது புரியும். .
அவசர பயணம்,
எட்டுமணிக்குள்
இருக்கையில் அமர வேண்டும்…
இல்லையெனில்
தண்டை என்ற பெயரில்
மேலதிகாரியின்
இரட்டை பார்வை
ஆபாச பேச்சுக்கள்…
பேருந்து
நமது அவசரத்தை
அறியாத
அரசாங்கத்தின் ஆமை…
கூட்டத்துக்குள்
முண்டியடித்து
ஏறிவிடலாம் என்றால்
நிறுத்தம் தாண்டி நிறுத்தி
மங்கையர் ஓட்டத்தை
ரசிக்கும் ஓட்டுநர்….
எல்லாம் தாண்டி
பேருந்தில் ஏற.
ஏதோ உரச
ஒரு வன்மத்தின்
நீண்ட உரசல்…
செ வெறுத்துப் போகிறது
பெண் நிலை…
பாலியலுக்கு மட்டும் சொந்தமானவன் பெண் என்று நினைக்கும் சில முளை கெட்ட மாந்தர்களை என் பேனா திருத்தினால், இத்தொடரில் நான் வென்று விட்டேன் என்று அர்த்தம் பெண் சுவாசம் இன்றி வாழும் ஒருவனுக்குக் கிடைக்கும் காற்று போல, எனக்கும்…
காத்திருங்கள் பேனா மூடி திறந்தே இருக்கிறது… அம்பாகப் பாய…
மு.ஞா.செ. இன்பா