பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கு! 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு..!
2008 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய பெண் பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் குற்றவாளிகள் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
இந்தியாவில் நிகழ்ந்த மறக்க முடியாத கொலை சம்பவங்களில் ஒன்றின் தீர்ப்பை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று நாட்டின் தலைநகரான டெல்லி ஒரு கொடூர கொலை சம்பவத்துடன் விடிந்தது. கொல்லப்பட்டவர் பெயர் சௌமியா விஸ்நாதன். பிரபல ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடேவில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த அவருக்கு அப்போது 25 வயது மட்டுமே.
பணி முடிந்து அதிகாலை 3.30 மணிக்கு வீட்டுக்கு சென்ற சௌமியாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாக கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். தெற்கு டெல்லியில் உள்ள கஞ்ச் பகுதியில் நிகழ்ந்த இந்த கொடூர கொலை சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேக்கிங் செய்திகள் அதிகம் இல்லாத அந்த காலத்திலேயே இளம் பத்திரிகையாளராக சௌமியாவின் மரணத்தை நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் பிளாஷ் நியூசாக வெளியிட்டன.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடக்கத்தில் கொள்ளையர்கள் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறினர். ஆனால், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், அமித் சுக்லா, அஜய்குமார், பல்ஜீத் மாலிக், ரவி கபூர் மற்றும் அஜய் சேதி ஆகிய ஐந்து பேரை அவர்கள் கைது செய்தனர். அவர்கள் மீது கடுமையான மோக்கா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கைதான ரவி கபூர் மற்றும் அமித் சுக்லா ஆகியோர் கால் செண்டர் ஊழியர் ஜிகிசா போஸ் என்பவரது கொலையிலும் தொடர்புடையவர்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
ஜிகிஷாவை கொல்ல பயன்படுத்திய ஆயுதங்களை சௌமியா கொலைக்கும் அவர்கள் பயன்படுத்தி இருப்பதை போலீசார் உறுதிபடுத்தினர். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஜிகிசா கொலை வழக்கில் ரவி கபூ, அமித் சுக்லா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் வழக்கும் நடந்து வந்தது.
கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்த நிலையில் இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே 15 ஆண்டுகளுக்கு பிறகு கொலை குற்றவாளிகளுக்கு தீர்ப்பு அளித்து உள்ளார். அதில் ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமார் ஆகியோர் குற்றவாளிகள் என அவர் தீர்ப்பளித்து உள்ளார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது.