இன்று கர்நாடகா – தமிழ்நாடு எல்லையில் பந்த்..!

 இன்று கர்நாடகா – தமிழ்நாடு எல்லையில் பந்த்..!

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகா-தமிழக எல்லையில் வாட்டாள் நாகராஜ் தரப்பினர் பந்த் போராட்டம் நடத்த உள்ளனர்.

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி விவகாரத்தில் தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய நீரைத் தராமல் கர்நாடகா தொடர்ந்து பிரச்சினை செய்தே வருகிறது. கர்நாடகாவில் அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் மட்டுமே நீரைத் திறந்துவிடுவதைக் கர்நாடக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. இந்தாண்டும் கூட நீரைத் தரக் கர்நாடகா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் நீரைத் தர முடியாது என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள டெல்டா விவசாயிகள் அச்சமடைந்தனர். இருப்பினும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்கி வருகிறது.

வரும் அக். 15ஆம் தேதி வரை காவிரி ஆறு மூலம் தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு இருக்கிறது. அதன்படி நீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், இதற்கு அங்குள்ள கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டிற்குத் தரப்படும் நீரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக்கூறி அங்குள்ள அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் கடந்த மாதம் ஏற்கனவே அவர்கள் இரண்டு முறை பந்த் கூட நடத்திவிட்டனர். இந்தச் சூழலில் இன்றைய தினம் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் பந்த் நடத்தப்பட உள்ளது.கர்நாடகா-தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் இந்த பந்த் நடத்தப்பட உள்ளதாக அங்குள்ள கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று எல்லை மாவட்டங்களில் பந்த் போராட்டம் நடைபெற உள்ளது. மேலும் அவர்கள் பெங்களூரு ஹோஸ்கோட் சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்தும் போராட்டம் நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கேஆர்எஸ் அணையை முற்றுகையிடவும் வாட்டாள் நாகராஜ் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...