மனோரமா ‘ஆச்சி’ யின் நினைவலைகள்…

 மனோரமா ‘ஆச்சி’ யின் நினைவலைகள்…

2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று மறைந்த பிரபல நடிகை மனோரமா வின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.

சென்னை தியாகராய நகரில் மனோரமாவின் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டிருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தின் மத்தியில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வாகனம் வந்தது.

அக்காலகட்டத்தில் பல மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த முதல்வர் ஜெயலலிதா மிகவும் மெதுவாக நடந்து சென்று வீட்டின் வரவேற்பு பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த மனோரமாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மிகவும் நெருங்கியவர்களின் திருமண மற்றும் துக்க நிகழ்வுகளில்கூட சில சமயங்களில் ஜெயலலிதா கலந்துகொள்வதில்லை என்ற நிலையில், உடல் நலம் குன்றியிருந்த சமயத்திலும் ஜெயலலிதா வந்தது மனோரமா ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

”நம்மளை போலவே காலமெல்லாம் தன்னந்தனியா போராடுனவங்கனுதான் மனோரமாவை அம்மாவுக்குப் பிடிக்கும். அதனால்தான் அவங்களுக்கு அம்மா அஞ்சலி செலுத்த வந்திருக்காங்க” என்று ஜெயலலிதா குறித்து அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தில் ஒருவர் கூறியது திரண்டிருந்த கூட்டத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

உண்மைதான். பல மேடைகளில் ஜெயலலிதாவை ஆரத்தழுவி, முத்தமிடும் உரிமை மனோரமாவுக்குத்தான் இருந்தது. ஜெயலலிதா மட்டுமில்லை முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராதிகா, சிவக்குமார் என பலரும் மனோரமாவின் அன்பு வளையத்திலிருந்தவர்கள்தான்.

ஒரு வருடம், இரண்டு வருடமா, 1958 முதல் அவர் இறக்கும்வரை மனோரமா நடித்து கொண்டுதான் இருந்தார்.

நாடகமோ, திரைப்படமோ, வானொலி அல்லது தொலைக்காட்சி தொடரோ. ஏதாவது ஒரு வடிவத்தில் மனோரமா நடித்துக் கொண்டிருந்தார். மனோரமா ஒரு ‘பெண் சிவாஜி’ என்று அவரின் நடிப்பை புகழ்ந்து ஒருமுறை நடிகரும், எழுத்தாளருமான சோ குறிப்பிட்டார்.

50க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நடிப்பைச் சுவாசித்து வாழ்ந்த மனோரமா மறைந்த நாளில், அவர் சார்ந்த கலையுலகமும் துக்கத்தில் ஆழ்ந்தது.

குடும்ப பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியுமில்லை – ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார், 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார் என்றால் அது மனோரமா மட்டுமே.

தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் ‘ஆச்சி’ என அழைக்கப்பட்ட மனோரமா, இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனை படைத்த நடிகை ஆவார்.

மன்னார்குடியில் பிறந்த மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. சிறுவயதில் அவரது குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது.

குடும்பச்சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்கிற பெயர் சூட்டப்பட்டது.

ஆரம்பத்தில் நாடக நடிகையாக இருந்த மனோரமாவை கவிஞர் கண்ணதாசன் திரையுலகில் அறிமுகம் செய்தார். கண்ணதாசன் தயாரித்து 1958 ஆம் ஆண்டு வெளியான “மாலையிட்ட மங்கை” திரைப்படத்தில் அறிமுகமானார் மனோரமா.

மனோரமா முதன்முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் “கொஞ்சும் குமரி”. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படம்.

1960களாக இருந்தாலும், 2000த்துக்கு பிறகான காலம் ஆனாலும் மனோரமா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் கதாபாத்திரங்கள்.

குறிப்பாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி மற்றும் பத்மினி இணைக்குச் சற்றும் குறைவில்லாத கதாபாத்திரமாக ‘ஜில் ஜில் ரமாமணி’ என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்து பாராட்டைப் பெற்றார் மனோரமா.

ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் நகைச்சுவை நடிகையாக மனோரமா புகழ் பதித்த பல திரையுலக பாத்திரங்களில் முக்கியமானதாக இன்றுவரை பேசப்படுகிறது.

கண்ணத்தாவாக சிரிக்கவைத்த பாட்டி சொல்லை தட்டாதே, கங்காபாய் கதாபாத்திரத்தில் நடித்த மைக்கேல் மதனகாமராஜன், தாயம்மாவாக கிச்சுகிச்சு மூட்டிய சிங்காரவேலன், அனுஷ்காவின் பாட்டியாக தோன்றிய சிங்கம், சிங்கம் 2 என எண்ணற்ற திரைப்படங்களில் மனோரமாவின் கதாபாத்திரங்கள் இன்றும் சிலாகிக்கப்படுகின்றன.

5 முதல்வர்களுடன் நடித்துள்ள மனோரமா

தமிழகத்தில் கடந்த 1967 முதல் 2016 வரையுள்ள காலகட்டத்தில் பெரும்பாலும் முதல்வராக இருந்த அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய நால்வருடனும் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் மனோரமா நடித்துள்ளார். இவர்கள் நால்வருடன் மட்டுமல்ல முன்னாள் ஆந்திரப்பிரதேச முதல்வர் என்டிஆர் உடனும் மனோரமா நடித்துள்ளார்.

தமிழ் தவிரத் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து மனோரமா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர் நடித்த நாடகங்களின் எண்ணிக்கை தனி.

மனோரமா நடிக்கத் துவங்கிய சமயத்தில் நகைச்சுவை நடிகைகள் ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு துணையாக ஓரிரு காட்சிகளில் படத்தில் தலைகாட்டிவிட்டு எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தனர்.

ஆனால், அந்த நிலையை மாற்றிக் காட்டியவர் மனோரமா. மனோரமாவுக்கு பிறகு இன்று நகைச்சுவை நடிகைகளுக்கு ஒரு தனி அடையாளம் உருவானது.

கலையுலக பின்புலம் எதுவும் இல்லாமல் வந்த மனோரமா நாடகங்கள் , திரைப்படங்கள், தொலைக்காட்சி என பல தளங்களிலும், நடிப்பு, பாடல் என பல அம்சங்களில் நீங்காத முத்திரை படைத்தார்.

திரைப்படங்களில் ஒரு பாடல் காட்சியின் இடைவெளியில் திடீர் பணக்காரர்கள் உருவாவது போல இது மாயமந்திரம் இல்லை. திரைத்துறையில் நடிகைகள் சந்திக்கும் எண்ணற்ற சவால்களை சந்தித்து, நாளும் போராடியே இந்த சாதனையை மனோரமா படைத்துள்ளார்.

மனோரமா ஒருமுறை தான் அளித்த பேட்டி ஒன்றில் இப்படிச் சொல்லியிருப்பார், ”கடைசி வரை நடிச்சிகிட்டே இருக்கணும்; சினிமா இல்லைனா நாடகம் அதுவும் இல்லைனா தெருக்கூத்தில் கூட நடிக்கத் தொடங்கிவிடுவேன். அது தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும்”

அதனால் தானோ என்னவோ கடைசி இரண்டு ஆண்டுகளில் உடல்நலமில்லாமல் பெரிதாக நடிக்கவோ, விழாக்களில் கலந்து கொள்ளவோ முடியாத மனோரமா, 2015 அக்டோபரில் காலமானார்.

கடைசி வரை நடிக்க முடியவில்லையென்றாலும், இறுதி மூச்சு வரை அவர் சினிமா மற்றும் நடிப்பு குறித்து மட்டும்தான் சிந்தித்துக் கொண்டிருந்தார் என்கிறார்கள் அவரது ரசிகர்களும், அவரை அறிந்தவர்களும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...