75 ஆசிரியர்களுக்கு ‘நல்லாசிரியர் விருதை’ வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசியர்களுக்கு, ‘தேசிய நல்லாசிரியர் விருதை’ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது. அன்று நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்.
ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையின் மூலம், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதும்தான் இந்த விருதின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. மேலும், மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய ஆசிரியர்களை கௌரவிப்பதும் இந்த விருதின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது. நல்லாசிரியருக்கான சான்று, ரூ.50,0000 ரொக்கம் ஆகியவை விருதுடன் வழங்கப்படும். இந்த விருதை பெற்றவர்கள் பிரதமருடன் உரையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைதான் இந்த விருதுக்கு யார் தகுதியானவர்கள் என்பதை தேர்வு செய்கிறது. முதல் முறையாக இந்த ஆண்டு முதல், தேசிய நல்லாசிரியர் விருது, உயர்கல்வித் துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்த அளவில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர், வீரகேரளம்புதூர், அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் மாலதி ஆகியோரும், உயர்கல்வித் துறையில் கோயம்புத்தூரின் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் ஆசிரியர் டாக்டர் எஸ்.பிருந்தா, ஆகியோரும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்திடமிருந்து, திண்டுக்கல் மாவட்டம் குள்ளம்பட்டி, நத்தம் ரோடு மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் உதவி பயிற்சி அலுவலர் எஸ்.சித்திரகுமார் ஆகியோரும் நல்லாசிரியர் விருதை பெறுகின்றனர்.