“அன்னை தெரசா”

 “அன்னை தெரசா”

“வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருக்கட்டும்” என்பது உலகப் புகழ்பெற்ற அன்னை தெரசாவின் வரிகளாகும்.

இன்றைய நவீன உலகில் நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ⸴ தொழில்நுட்பமோ⸴ இராணுவ பலமோ கிடையாது. அன்பும்⸴ நேசமும்⸴ பாசமும்⸴ கருணையும் தான் இவை அனைத்திற்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்து இன்று கோடிக்கணக்காணோர் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பின் உருவம் அன்னை தெரேசா என்றால் அதுமிகையாகாது. பிரார்த்திக்கும் உதடுகளை விட பணிவிடை செய்யும் விரல்களே சிறந்தவையாகும். அத்தகைய பணிவிடைகளைச் செய்து மேன்மை பெற்றவரே அன்னை தெரேசா.

“அடுத்தவருக்கு காட்டும் பரிவு ஆண்டவனுக்கு செய்யும் உதவிˮ என்கின்றது வேதம். கண்ணீரைத் துடைக்கும் விரல்கள்⸴ ஆறுதல் தரும் அன்பு⸴ அரவணைக்கும் நேசம் இவை எல்லாம் உலகின் உன்னதங்கள் ஆகும்.
இந்த உன்னதங்களை அர்த்தமுள்ள வாழ்க்கையாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய அற்புத மனிதர்களின் வரிசையில் அன்னை தெரேசா முதல் இடம் பெறுகின்றார்.

ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா என்னும் இயற்பெயரைக் கொண்ட அன்னை தெரேசா 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி தந்தை நிக்கல் நிகோலா மற்றும் தாய் பொயாஜியூ திரானி பெர்னாயின் என்போருக்கு மூன்றாவது குழந்தையாக தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் பிறந்தார். இவரது சகோதரி அகா மற்றும் சகோதரர் லாகஸ் ஆவர். இவர் ஆகஸ்ட் 27 ஆம் திகதி திருமுழுக்குப் பெற்ற நாளையே தனது பிறந்த நாளாகக் கருதினார். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவரது தந்தை தெரேசாவின் எட்டாவது வயதில் இறக்கவே தாயாரால் நற்குணங்கள் கூறி வளர்க்கப்பட்டார். தனது பள்ளிப் படிப்பில் மிகவும் திறமையானவராகவும்⸴ நகைச்சுவை உணர்வால் அனைவரையும் கவர்ந்து வசீகரிக்கும் திறமை உடையவராகவும் இருந்தார்.

சிறுவயதிலிருந்தே கிறிஸ்தவ மறைபணியாளர்களாலும்⸴ அவர்களது சேவைகளாலும் கவரப்பட்ட அன்னை தெரேசா தனது 12வது வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். இதன் மூலம் அவர் துறவரம் புக முடிவு செய்துகொண்டார்.

தனது பதினெட்டாவது வயதின் போது வீட்டை விட்டு வெளியேறிய தெரேசா ‘Sodality of children of Mary’ என்ற அமைப்பை சேர்ந்த லொரேட்டோ சகோதரிகளின் சபையில் தன்னை பணியாளராக இணைத்துக் கொண்டார்.

இவர் இந்தியாவின் ஜாஸ்மின் நகருக்கு ரயில் பயணம் மேற்கொண்டிருந்த போதுதான் அவரது வாழ்க்கை பல்லாயிரக்கணக்கானோர் வாழ்க்கையை மாற்றி அமைக்கப் போகும் தெய்வீக அழைப்பை உணர்ந்தார்.

கல்கத்தாவிலுள்ள வறுமை நிறைந்த சேரியில் அவர் நுழையும் போது கைகளில் ஐந்து ரூபாய் பணமும்⸴ மூன்று சேலைகளும்⸴ நிறைய அன்பும் மட்டுமே அவரிடம் இருந்தது.

கடுமையான நிலையில் இருந்த ஆதரவற்றோர் மத்தியிலே தனது பணியைத் தொடங்கினார். ஏழைகளோடு ஏழைகளாக வாழ்ந்து அவர்களது கண்ணீர் துடைத்து காயத்திற்கு மருந்திட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியேற்றும் வழியை அமைப்பதற்கான பாதையாகத் தன்னை மாற்றிக்கொண்ட அன்னை தெரேசா 1942-1943 ஆண்டு காலப் பகுதிகளில் இரண்டாம் உலகப் போரும்⸴ விடுதலைப் போரும் உச்ச கட்டத்தில் இருந்தது.

இதனால் மக்கள் பஞ்சத்தில் தவிர்ப்பதைக் கண்ட அன்னை திரேசா அவர்களுக்கு அதிக நேரம் தன் சேவைகளை வழங்க நினைத்தார். எனினும் லொரேட்டாவின் விதிமுறைகள் அதற்கு ஒத்துழைக்காததால் கல்விப் பணியிலிருந்து விலகி அன்று முதல் முழு நேரப் பணியினைத் தொடர்ந்தார்.

பலவித சிகிர்ச்சைகளை அளிக்க மருத்துவப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார். 1950 ஆம் ஆண்டு “பிறர் அன்பின் பணியாளர்ˮ என்ற சபையைத் துவங்கி பசியால் வாடும்⸴ வீடின்றித் தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும்⸴ சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவளித்தார்.

அதுமட்டுமன்றி அரசின் உதவியுன் காளிகாட் என்ற இல்லத்தைத் துவங்கி சேவை செய்தார். அதே ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி என்ற தொண்டு அமைப்பைத் தொடங்கினார்.

தீண்டாமை⸴ தொழுநோய் என்பன மக்கள் வாழ்வை கடுமையாகியது. ஆனால் தொழுகை நோயாளர்களை தொட்டு தூக்கி மறுக்கப்பட்டவர்களை அன்போடு அரவணைத்தார். சிறைக் கைதிகளுக்கும் போதைப் பழக்கத்திற்கும் அடிமையானவர்களுக்கும் போதிய உதவிகளைச் செய்து வந்தார்.

இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் “பிறர் அன்பின் பணியாளர்கள்ˮ சேவையை விரிவுபடுத்தினார். இதன் விளைவாகப் பல நாடுகளிலும் சேவை மையங்களை நிறுவி உதவினார்.

அன்னை தெரசா பெற்ற விருதுகள்

1962 – பத்மஸ்ரீ விருது

1972 – பன்னாட்டு புரிந்துணர்வுக்கான விருது

1979 – அமைதிக்கான நோபல் பரிசு

1980 – இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னாˮ விருது

1996- அமெரிக்காவின் கெளரவ பிரஜை

2002 – அருளாளர் பட்டம்.

‘புனிதர்’ பட்டம், போப் பிரான்சிஸ் வழங்கியது

உள்ளிட்ட விருதுகளும், தவிர வேறு நாடுகளில் பல உயரிய விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

அன்பின் இலக்கணமான அன்னை தெரேசாவிற்கு முதல் முறை மாரடைப்பாக 1983ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ரோம் நகரில் சந்தித்தபோது ஏற்பட்டது. பின் 1989 ஆம் ஆண்டு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து கால்முறிவு⸴ இதய நோய்க் கோளாறுப் பிரச்சினைகளையும் அடிக்கடி சந்தித்து வந்தார். உடல்நலம் மோசமாகியது இதன் காரணமாக 1997களில் தனது அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.

அன்பினால் அரவணைத்த அன்னை திரேசா 1997 இல் இவ்வுலகை விட்டு நீங்கினார். இவரது இழப்பைக் கண்டு கலங்காத கண்களும் கலங்கின. மறைந்தும் மறையாமல் வாழும் புனிதர் அன்னை தெரேசா என்றால் அது மிகையாகாது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...