பிளாக் பஸ்டர்’ என்கிற டைட்டிலைத்தான் “கிக்” என மாற்றினோம்!

சந்தானம் நடித்து செப்-1ஆம் தேதி ‘கிக்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முதல் சந்திப்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு விழாவாக நடந்தது. இதில் நடித்த ப்ரபலங்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் நவீன்ராஜ் பேசும்போது, “2008ல் தயாரிப்பு நிறுவனம் துவங்கியபோது தமிழில் எப்போது படம் தயாரிப்போம் என்பது ஒரு கனவாகவே இருந்தது. சரியான கதைக்காகவும் சரியான நேரத்திற்காகவும் காத்திருந்தேன். அது #கிக் படம் மூலமாக தேடி வந்துள்ளது. சந்தானம் இந்த படத்திற்குள் வந்ததும் ஒரு மேஜிக் ஆரம்பமானது. தமிழ் படங்கள் என்றாலே எனக்கு கிரேஸ் அதிகம். சிறுவயதில் நான் முதலில் பார்த்த படம் தளபதி தான். ஜெயிலர், டிடி ரிட்டன்ஸ் என எல்லா படங்களையும் முதல் தான் முதல் காட்சி பார்த்து விடுவேன். இந்த படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி நான்கு மாதத்தில் முடித்தோம். ஒரு நாள் 300 கலைஞர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்தியபோது சந்தானத்திற்கு காய்ச்சல் என மருத்துவமனைக்கு சென்றார். இதனை கேள்விப்பட்டு படப்பிடிப்பை ரத்து செய்ய சொன்னேன்.

ஆனால் கொஞ்ச நேரத்திலேயே சந்தானம் போன் செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நான் தற்போது படப்பிடிப்பிற்கு வந்து கொண்டிருக்கிறேன். ரத்து செய்ய வேண்டாம் என கூறினார். அந்த அளவிற்கு இதில் அவர் முழு ஈடுபாடு காட்டினார்” என்றார்.

நடிகர் முத்துக்காளை பேசும்போது..,
“சந்தானத்துடன் நான் இணைந்து நடித்த நான்காவது படம் இது. சிவாஜி படத்தில் நடித்தபோது கிடைத்த மரியாதையை சந்தோஷத்தை இதில் மீண்டும் உணர்ந்தேன்” என்றார்.

நகைச்சுவை நடிகர் கிங்காங் பேசும்போது..,
“நடிகர் சந்தானத்துடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என அழைத்து கிட்டத்தட்ட எனக்கு 175 மிஸ்டு கால்கள் வந்தன.

இதுவரை 8000 மேடைகளை பார்த்து விட்டேன். இன்று நான் பேசும் இந்த மேடையில் தான் சந்தோசமாக உணர்கிறேன். ஹிந்தி, தெலுங்கு, கன்னடத்தில் எல்லாம் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் தமிழில் தான் வருவதில்லை” என்று ஆதங்கப்பட்டார்.

நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது..,
“சந்தானம் சும்மா ஒரு ஹீரோவாக உருவாகவில்லை. உடலை வருத்திக்கொண்டு, அதற்காக தன்னை தயார்படுத்தி கொண்டவர். நாங்கள் எல்லாம் படப்பிடிப்பில் விதவிதமாக சாப்பிடும்போது தயிர் சாதம் மட்டும்தான் சாப்பிடுவார் சந்தானம். டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை சொல்லி அடித்தார். அதேபோல இந்த கிக் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும்.. நாளுக்கு நாள் சந்தானத்திற்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது” என்று கூறினார்

நாயகி தான்யா ஹோப் பேசும்போது..,
“தமிழ் சினிமாவில் எனது முதல் காமெடி படமாக இது உருவாகியுள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை படம் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.. காமெடி பண்ண வேண்டும் என ஆசை இருக்கிறது.. காமெடியாக நடிப்பது கஷ்டமாகவும் இருக்கு.. அந்த வகையில் சந்தானம் ஒரு காமெடி கிங்” என்று கூறினார்.

நடிகர் தம்பி ராமையா பேசும்போது, “ஒருமுறை முடிவை எடுத்து விட்டால் அதிலிருந்து மாறக்கூடாது என கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல தான் எடுத்த முடிவில் மாறாமல் இருக்கிறார் சந்தானம். சிலபேர் எப்போதும் தோற்கவே கூடாது என மக்கள் நினைப்பார்கள். அப்படி ஒருவர் தான் சந்தானம். டிடி ரிட்டன்ஸ் கொடுத்த வெற்றி இங்கே அனைவரின் முகத்திலும் தெரிகிறது. இயக்குநர் பிரசாந்த் ராஜ் நகைச்சுவை காட்சிகளை பிரமாதமாக வடிவமைத்துள்ளார். இந்த படத்தில் ஆணழகன் போல சந்தானம் காட்சியளிக்கிறார். ஹிந்தி படம் போல ஒரு தமிழ் படமாக இந்த கிக் உருவாகி இருக்கிறது. சந்தானம் தான் மட்டும் ஸ்கோர் செய்ய வேண்டும் என விரும்பாமல் தன்னை சுற்றியுள்ள அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பவர்” என்றார்.

நடிகை ராகினி திவிவேதி பேசும்போது..,
“இந்த படத்தில் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தமிழில் இப்படி ஒரு படம் பண்ணுவேன் என நான் நினைக்கவே இல்லை. இவ்வளவு நட்சத்திர பட்டாளத்துடன் எனக்கும் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. சந்தானம் பாடல், சண்டை, காமெடி என எல்லாவற்றிலும் அசத்தியுள்ளார். கன்னட திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறேன் உங்கள் ஆதரவு தேவை” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் ராஜ் பேசும்போது..,
“2009ல் நான் முதலில் இயக்கிய ‘லவ் குரு’ படத்தின் இசைப் பணிகளுக்காக ஏ.ஆர் ரகுமான் ஸ்டுடியோவில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்து செல்லும் தமிழ் பிரபலங்களை பார்த்தேன். அப்போதிருந்தே தமிழில் படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு எப்போது கிடைக்கும் என காத்திருக்க ஆரம்பித்தேன். கோவிட் காலகட்டத்தில் கிடைத்த அந்த ரெண்டு வருடத்தை சரியாக பயன்படுத்தி ஸ்கிரிப்ட் தயார் செய்து அதில் சந்தானம் தான் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அவரை சந்தித்து பேச சில முறை முயற்சித்தும் சரியாக அமையாததால் அதிரடியாக பாண்டிச்சேரிக்கு சென்று திடீரென அவரை சந்தித்து கதையை கூறி சம்மதம் பெற்றேன்.

சென்னையில் ஆரம்பித்து பாங்காங்கில் வரை ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்றது. இடையில் நடைபெற்ற தனது அப்பாவின் சடங்குகளுக்கு கூட சென்னை வராமல் அங்கேயே அவற்றை செய்து முடித்தார் சந்தானம். படம் துவங்குவதற்கு முன்பே அவர் போட்ட கண்டிஷன்களில் ஒன்று இரவு நேர படப்பிடிப்பு வேண்டாம் என்பது தான். ஆனால் படப்பிடிப்பு துவங்கிய முதல் நான்கு நாட்கள் இரவு நேரத்தில் அதுவும் சண்டை காட்சிகள் தான் படமாக்கப்பட்டன.

படத்தில் சந்தானம் செய்யும் காமெடிகளுக்கு சக நடிகர்கள் காட்டும் உணர்வுகளை மேட்ச் பண்ணுவது தான் கஷ்டம். ஆனாலும் நாயகி தான்யா அதை மிகச்சரியாக செய்து விட்டார். இந்த படத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தை நடிக்க வைக்க முடிவு செய்த போது அவரை நம்மால் கையாள முடியுமா என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் இந்த படத்தில் அவர் டான்ஸ், ஃபைட் எல்லாமே பண்ணி இருக்கிறார்.

மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகராக தம்பி ராமையா நடித்துள்ளார். அதனால் அவர் நடிப்பு, டான்ஸ் என இரண்டையுமே செய்தாக வேண்டும். அற்புதமாக அதை பேலன்ஸ் செய்துள்ளார். நடிகர் செந்தில் இந்த படத்தில் கேசியோ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிளாமரான 50 பெண்கள் சுற்றி இருக்கும் விதமாக அவரது காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு பெரிய வில்லன் வேண்டும், அதே சமயம் காமெடியும் இருக்க வேண்டும் என நினைத்தபோது மன்சூர் அலிகான் தவிர யாரையும் யோசிக்க முடியவில்லை. பல நேரங்களில் சந்தானத்தின் காட்சிகளை படமாக்கும்போது கட் சொல்ல மறந்து விடுவேன்.. அந்த அளவிற்கு சந்தானத்தின் ரசிகன் நான்.. ஒரு தீவிர ரசிகனுக்கு அவரது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி பண்ணுவார்களோ அதே போலத்தான் இந்த படத்தை இயக்கியுள்ளேன். பொழுதுபோக்கு தவிர வேறு எதையும் இதில் யோசிக்கவே இல்லை.

இந்த படத்தில் பிளாக் பஸ்டர் என்கிற ஒரு இனிப்பு வகையை உள்ளே அறிமுகப்படுத்தி உள்ளோம். அது எதற்காக என்கிற ஆச்சர்யம் படம் பார்க்கும்போது உங்களுக்கு விளங்கும். சொல்லப்போனால் ‘பிளாக் பஸ்டர்’ என்கிற டைட்டிலைத்தான் முதலில் இந்த படத்திற்கு வைக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் அந்த டைட்டில் எங்களுக்கு கிடைக்காததால் அனைவருக்குமே நன்கு தெரிந்த ‘கிக்’ என்கிற டைட்டிலை வைத்தோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!