வேப்ப மரத்துப் பூக்கள் – 6 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 6
எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செலுத்தப் பழகுங்கள்.
விட்டுக் கொடுப்பதாக இருந்தால் மனதார விட்டுக்
கொடுங்கள். மனதில் அசூயை, கர்வம் இல்லாமல்
எதையும் செய்யப் பழகுங்கள். நேசம் என்பது மட்டுமே உங்கள்
இயல்பாக இருக்கட்டும்.
“வாவ்” விசில் அடித்தான் பாலு.
அவனால் மௌனிகாவை விட்டு பார்வையை நகர்த்த முடியவில்லை. எழிலான சிற்பம் போல் பாட்டியிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண் புதிதாகத் தெரிந்தாள்.
“யாரும்மா இது?” பிரேமாவிடம் கேட்டான்.
“பிசியோதெரபி கொடுக்க வந்திருக்கா.” பட்டும் படாமலும் பதில் சொன்னாள் பிரேமா. ஏனோ அவளுக்குப் பார்த்த முதல் பார்வையிலேயே மௌனிகாவைப் பிடிக்கவில்லை.
அவள் கல்யாணியை ஞாபகப் படுத்தினாள்.
முதலில் பிரேமாவுக்கு தன்னை விட அழகான பெண்களைக் கண்டால் பிடிக்காது. பிரேமா சுமார்தான். அவள் அப்பா ஜாடை. கௌசல்யா அம்மாவைப் போல் நிறம், அழகு கூந்தல் என்று பளிச் என்று இருப்பாள். ரகுராமனும், கௌசல்யாவும் ஒரே ஜாடை.
தன் ஜாடை என்று அப்பாவுக்கு பிரேமா செல்லம். அப்பா கொஞ்சம் அதிகார வர்க்கம். தான் வைத்ததுதான் சட்டம். தன் சொல் பேச்சுதான் அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைப்பார். அதனாலேயே சாதாரண குடும்பத்திலிருந்து அம்மாவைப் பெண் எடுத்தார். அப்பாவுக்கு பயந்து பயந்து வாழ்ந்த அம்மா, எல்லோருக்கும் பயந்து, அவர்கள் சொல் கேட்டு அப்படியே வாழ்ந்து பழகி விட்டாள்.
ஏதானும் பேசினால் தப்பாகி விடுமோ, திட்டுவார்களோ என்று பயம். யார் என்ன சொன்னாலும் நம்பி விடுவாள். அப்பா இறந்தபோது பிரேமாதான் கூட இருந்தாள். கௌசல்யாவிற்கு எந்தப் பொருளும் போகாமல், அவளை முழுவதுமாக ஒதுக்கி தானே முழுதாக அம்மாவை ஆக்கிரமித்துக் கொண்டாள்.
அம்மா மனம் வெதும்பி இருந்த நாட்கள் அது. பிரேமாவின் ஆதிக்கத்தில் அடங்கி விட்டாள். அப்போதே பிரேமா தன் ஆதிக்கத்தில் வீட்டை கொண்டு வர முடிவு செய்து பத்மாவை ரகுராமனுக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்தாள்.
ஆனால் ரகுராமனுக்கு பத்மாவின் நடவடிக்கை பிடிக்கவில்லை. ஒரு திருமணத்தில் கல்யாணியை, அவளைப் பற்றி மற்றவர்கள் நல்லபடியாகச் சொன்னது, பழக்கங்கள் பார்த்து அவர் மாமாவிடம் சொல்ல அவர் ஏற்பாடு செய்து விட்டார்.
அப்போதே பிரேமா மனதுக்குள் வஞ்சம் வைத்து விட்டாள்.
அம்மாவிடம் சொல்லி கல்யாணியை வேண்டாம் என்று சொல்லச் சொன்னாள்.
ஆனால் ரகுராமன் பிடிவாதமாக நின்று விட்டார். கௌசல்யா அவருக்குத் துணை நின்றாள். கௌசல்யாவின் கணவர் பக்கமும் கல்யாணி உறவு.
அம்மா மகளை எதிர்க்க முடியாமல் திணற, ரகுராமன் கோவிலில் அவளைக் கல்யாணம் செய்து கொண்டார். நகை இல்லை, சீர் இல்லை என்று பிரேமா சொல்கேட்டு அம்மா முணுமுணுத்தாலும், கல்யாணியின் அன்பான கவனிப்பில் நெகிழ்ந்து அவளைக் கொண்டாட ஆரம்பித்து விட்டாள்.
அப்போதே அம்மாவுக்கு பிபி, சுகர் என்று வந்து விட்டது.
கல்யாணி பார்த்துப் பார்த்து கவனித்ததில் எல்லாமே அடங்கி இருந்தது.
அவளையும் வீட்டை விட்டு துரத்தி விட்ட பிறகு பிரேமாவின் நச்சரிப்பு, கோபம் என்று பார்த்து, பயந்து சரியான ஆகாரம், கவனிப்பு என்று இல்லாமல் நோய் தலை தூக்கி விட்டது. உட்கார்ந்தே இருப்பாள் அம்மா.
பிரேமா காலை ஒன்பது மணிக்குத்தான் எழுந்திருப்பாள். பத்து மணிக்குத்தான் டிபன் வரும். அதன் பிறகு சீரியல் பார்த்து விட்டு அக்கம் பக்கம் வீடுகளில் அரட்டை அடித்து விட்டு, மதியம் இரண்டு மணிக்கு சமையல் செய்து அம்மா சாப்பிட மூன்று மணியாகி விடும். பிறகு தூக்கம். மாலை சீரியல். இரவு டிபன் ஒன்பது, பத்து மணிக்கு.
அப்போது ரகுராமன் வெளிநாட்டில் இருந்தார்.
ஒருநாள் கௌசல்யா வந்தவள் அம்மாவுக்கு நேரத்துக்கு சாப்பாடு தரக் கூடாதா என்று கேட்க வீட்டில் பூகம்பம் வெடித்தது.
“எனக்கு மட்டும்தான் கடமையா. நீயும் பொண்ணுதானே?”- – – பிரேமா.
“நீதானே இங்கியே உட்கார்ந்து அண்ணாவோட சொத்தை எல்லாம் கரைச்சிட்டு இருக்கே.” கௌசல்யா சொன்னதும் பிரேமா வீட்டிலிருந்த பொருட்களை தூக்கி எறிந்தாள். வீட்டை விட்டுப் போய் விட்டாள். அம்மா தவித்து விட்டாள். கௌசல்யாவை மிரட்டி சண்டை அதிகமாகி கௌசல்யாவை இனி வீட்டுக்கு வராதே என்று சொல்லி அவள் போய் விட்டாள்.
‘அவ இருந்தா நான் வர மாட்டேன் “ என்று பிரேமா சொல்லி விட கௌசல்யாவின் புருஷன் அவளை அழைத்து அவள் மேலும், மேலும் அம்மாவுக்கு என்று சொல்லிக் கொண்டு போய் விட்டான்.
அதன் பிறகு பிரேமா வந்து பார்த்து, சுகர் அதிகமாகி மயங்கிக் கிடந்த அம்மாவை பக்கத்து வீட்டில் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போய் அவர்களே ரகுராமனுக்கு தகவல் சொன்னார்கள்.
ரகுராமன் அலறி அடித்து ஓடி வந்தார். பிரேமாவிடம் எதவும் கேட்கவில்லை. ஒரு நர்ஸ் போட்டு அவளிடம் சொல்லி விட்டுப் போனார். பிரேமாவும், அந்த நர்ஸ்சும் சேர்ந்து பணத்தை வாங்கிக் கொண்டு அம்மாவைக் கவனிக்கவில்லை. அந்த விஷயத்தையும் கௌசல்யா சொல்லி விட. நிரந்தரமாக இந்தியாவிற்கு வந்தார் ரகுராமன்.
இவர் வெளி நாட்டிலிருந்து அனுப்பிய பணத்தில் பாதிக்கு மேல் பிரேமா அழுத்தியிருந்தாள். இவர் கணக்கில் கம்மியாகத்தான் இருந்தது. அம்மாவுக்கு இவர் அனுப்பிய பணத்தையும் வாங்கிக் கொண்டு இன்னும் வேண்டும் என்று கேட்டாள்.
தான் வெளிநாட்டில் இருந்த போது அம்மாவை பார்த்துக் கொண்டாள் என்ற நன்றியில் அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் மீண்டும் பத்மாவைக் கொண்டு வந்து நிறுத்திய அன்று மிகப் பெரிய சண்டை வந்து அன்றுதான் அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்தது.
வைத்தியம், நர்ஸ் என்று போட்டு எழுப்பி உட்கார வைத்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகிறது. இன்னும் அம்மா உறுதியாக எழுந்து நிற்கவில்லை. வீல் சேரே கதி என்று நினைக்கிறாள். ரகுராமன் வந்து விட்டதால் பிரேமா இப்போது அம்மாவை கவனிக்கிறாள்.
என்றாலும் ரகுராமன் அம்மாவை அவளை நம்பி விடாமல் தானே கவனித்துக் கொள்கிறார். அம்மா எழுந்து நடக்காமல் இருப்பதே அவரை மிகவும் கவலைக்கு ஆளாக்கியது. மருத்துவமனை ஒப்பந்தம் கிடைத்ததும் கேசவ் கிட்டே சொல்லியிருந்தார்.
மௌனிகாவைப் பார்த்ததும் அம்மாவுக்குப் பிடித்து விட்டது.
“அவள் வந்த உடனே “ ஹாய் பாட்டிம்மா, உங்களுக்கு ஒண்ணுமில்லை. நீங்களும் நானும் ஏரோபிக்ஸ் செய்யலாம்.” என்று ஒரு ஆயில் போட்டு நீவி விட்டாள். உங்களுக்கு எந்த நடிகரைப் பிடிக்கும் என்று கேட்டு அம்மா வாத்தியார் என்றதும், சூப்பர் என்று சொல்லி அவர் படங்கள், பாட்டுக்கள் பற்றிப் பேசியபடி அவருக்கு சின்னச் சின்ன பயிற்சிகள் செய்து காட்டி அவரையும் செய்ய வைத்தாள்.
“அந்த நர்ஸ் செய்தப்போ வலிச்சது. இப்போ நீ செய்யறப்போ வலி இல்லையே?”
“பாட்டி அப்போ உங்களுக்கு ஸ்ட்ரோக் வந்த புதிது. இப்போ நாள் ஆகிருச்சில்ல. அதுவும் சிகிச்சை எல்லாம் தந்து க்யூர் ஆயிருச்சி. இனி எல்லாம் உங்க மனசுல இருக்கு. ஆனா நீங்க பயந்துக்கறீங்க. துணிஞ்சு நடங்க. என் கையைப் பிடிச்சுகிட்டு நடங்க. வீல் சேரை விட்டு எழுந்து நில்லுங்க.”
மௌனிகாவின் குரலில் ஒரு ஆகர்ஷண சக்தி இருந்தது.
அம்மா அவள் கையைப் பிடித்து எழுந்து நின்றால். மெல்ல ஹால் வாசல் வரை நடந்தாள்.
“வாவ். கை தட்டினான் பாலு. ரகுராமன் முகம் மலர அம்மாவிடம் ஓடி வந்தார்.
“இன்னும் கொஞ்சம் நடம்மா.”
“வேண்டாம் சார்.” மௌனிகா தடுத்தாள். ‘ஒரு வருஷமா நடக்காம மூவ்மேன்ட்டே இல்லாம இருந்திருக்காங்க. உடனே அதிகமா நடக்கச் சொல்ல வேண்டாம். முதல்ல ஸ்ட்ரோக் வந்து டிரீட்மென்ட் தந்த போதே டெய்லி பயிற்சி செஞ்சிருந்தா இப்போ இவங்க ஓடவே செஞ்சிருக்கலாம்.”
“ நீ சொல்லிட்டே, அவங்களை அப்போ காப்பாத்த நான் பட்ட பாடு எனக்குத்தானே தெரியும். நான் ஒத்தையா நின்னு அத்தனையும் சமாளிச்சேன்.”
பிரேமாவை புன்னகையோடு ஏறிட்டாள் மௌனிகா.
“அத்தனை அவஸ்தையே வேண்டியதில்லை. தினசரி இவங்களை இந்த ஹால்ல நடக்க வச்சிருந்தா போதும். தினசரி பிசியோதெரபி செஞ்சிருந்தா இத்தனை நாள் இவங்க அவஸ்தைபட வேண்டியிருக்காது.”
அம்மா பதில் சொல்லவில்லை. முகத்தையே பார்த்தபடி இருந்தாள். அவளின் வலது கை மௌனிகாவின் விரல்களைப் பிடித்தபடி இருந்தது. அம்மாவின் மனம் அவள் பால் ஈர்த்திருந்தது.
பாலு அவள் பேசுவதையே ஆர்வத்துடன் கவனிப்பதை பிரேமா ஒரு எரிச்சலுடன் கவனித்தாள்.
“ ஏண்டா நீ எங்க வாயைப் பார்த்துகிட்டே நின்னுட்டே. காபி குடி.போ பிலாச்குல போட்டு வச்சிருக்கேன்.”
“போம்மா, பாட்டிக்கு என்ன டிரீட் மெண்ட் தராங்கன்னு பாக்கறேன்.”
“பாக்கறது பெரிசில்லை சார். தினசரி பாட்டியை செய்ய வைக்கணும்.”
“சொல்லுங்க. செய்யறேன்.” பாலு உற்சாகத்துடன் முன் வந்தான்.
“ நீ ஆபீசுக்குப் போவியா? இந்த வேலையைச் செய்வியா?” பிரேமா
“அவரால முடியாதுன்னா நீங்க செய்ங்க. நீங்க வீட்டுலதானே இருக்கீங்க?”
“அதை நீ சொல்ல வேண்டியதில்லை. எங்கம்மா அவங்க.”
“ஒகே, தோள் குலுக்கினாள் மௌனிகா. “ உங்கம்மா நல்லா இருக்கணும்னு உங்களுக்கே எண்ணமில்லை. பிறகு நான் என்ன சொல்றது. பிறந்த வீட்டிலிருந்து சீர், காசு பணம் வாங்கிக்கறது மட்டுமில்லை, அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமையும் பெண்களுக்கு உண்டு. சரி, சரி இது உங்க பிரச்சினை. ஆனா என் பெஷன்ட்டுன்னு நான் இவங்களை விட்ற முடியாது. ரகு சார் என்ன முடிவு எடுக்கறீங்க?”
“நீயே வந்துட முடியுமாம்மா?” அம்மா மெல்லிய குரலில் கேட்டாள்.
அவள் பிரேமாவை நம்பவில்லை என்பது அம்மாவிடம் தெரிந்தது. அதில் பிரேமா அடி பட்டாள்.
“ஏம்மா, இத்தனை நாளா உன்னை யார் கவனிச்சா? இன்னைக்கு தளுக்கி கிட்டு ஒருத்தி வந்தா என்னை ஒதுக்கறியே?” அம்மாவிடம் பாய்ந்தாள்.
ரகுராமன் அவளை சமாதானம் செய்யும் முன் மௌனிகா புன்சிரிப்புடன் பேசினாள்.
“ இது அவங்க என் மேல் வச்ச நம்பிக்கையைக் குறிக்கிறது. நன்றி பாட்டிம்மா. நானே வரேன். மாலை ஓ.பி முடிஞ்சதும் இப்படி வந்துட்டுப் போறேன். ஆனா ஒரு வாரம்தான். நீங்களும் ஒத்துழைக்கனும். நடக்கணும். நீங்களும் நானும் சேர்ந்து வாத்தியார் படம் பாக்கறோம்.” என்றவள் பிரேமாவிடம் திரும்பினாள்.
“உங்க உடம்புல அனாவசியச் சதைகள் இருக்கு. அதை எடுத்துட்டா நீங்களும் ஸ்லீம் பியூட்டிதான். சொல்லித் தரவா?” என்று கேட்க பிரேமா உடனே உற்சாகமானாள்.
“ஓ! வா,வா. நாம மேலே போலாம்” என்று அழைத்தாள்.
“எனக்கு இப்போ சூடா ஒரு காபி வேணும்.”
“ஜம்முனு நான் போட்டுத் தரேன். பிரேமா உற்சாகமாக அழைத்தாள்.
“டன்,” மௌனிகா கட்டை விரல் உயர்த்தினாள்.
பிரேமா மாடிக்குப் போக பாலு அங்கேயே நின்றான்.
“நீ ஏண்டா நிக்கறே. நீயும் மேல போயேன்.” ஏனோ ரகுராமனுக்கு பாலு மேல் எரிச்சல் வந்தது.
“இல்லை மாமா, அவங்களுக்கு வழி தெரியலைன்னா. நான் நின்னு கூட்டிட்டுப் போறேன்.”
“நோ பிராப்ளம்.”- மௌனிகா அவனை மேலே அனுப்பி விட்டு பாட்டியிடம் திரும்பினாள்.
“பாட்டி உங்களுக்கு எழுபத்தி அஞ்சு வயசாறது. இன்னமும் நீங்க இப்படி பிறர் பேச்சை கேட்டுகிட்டு, சோம்பேறியா உட்கார்ந்திருக்கக் கூடாது. நான் நாளை ஒரு வீடியோ கொண்டு வரேன். அதுல என்பது வயசு பாட்டி ஒண்ணு எப்படி ஜிம்னாஸ்டிக் பண்ணுதுன்னு பாருங்க. ஆரோக்கியம்தான் உண்மையான சொத்து. உங்களுக்கு எவ்வளவு அருமையான பையன் பாருங்க. அம்மான்னு எத்தனை அன்பு. அவங்களுக்கு நீங்க வேண்டாமா?”
அவளின் பேச்சில் அம்மா உருகி கண்கள் கலங்கினாள்.
“அவன்தானே என் உலகம் மௌனிகா. ஒரு தப்பு பண்ணிட்டேன். அவன் இன்னைக்கு இப்படி ஒத்தையா நிக்கறப்போ என் வயிறு குமுறுது. போனவ எங்க இருக்காளோ, அவளையே நினைச்சுகிட்டு இவன் தனிமைல நிக்கறப்போ பெத்த வயிறு கொதிக்குது.”
மௌனிகா பூரிப்போடு அம்மாவை அனைத்துக் கொண்டாள்.
“அம்மா உங்க குடும்ப விஷயம் எனக்குத் தெரியாது. ஆனா தப்பு செஞ்சுட்டேன்னு நீங்க நினைச்சா கண்டிப்பா சாரோட மனைவி குழந்தையோடு வருவாங்க. நீங்க கவலைப் படாதீங்க.”
“கல்யாணி நல்ல பொண்ணும்மா.”
“அந்த உணர்வு உங்களுக்கு இருந்தாப் போதும். நிச்சயம் வருவாங்க.”
உற்சாகம் கொப்பளிக்க கூறினாள் மௌனிகா.
-(ஏக்கங்கள் அகலும்…)