காலச்சக்கரம் சுழல்கிறது – 22 பொய்யாமொழியும் முகவை ராஜமாணிக்கமும்

 காலச்சக்கரம் சுழல்கிறது – 22 பொய்யாமொழியும் முகவை ராஜமாணிக்கமும்

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

காலச்சக்கரம் சுழன்றாலே காலம் மாறத்தானே செய்யும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்த ‘காலம் மாறிப்போச்சு’ எனும் பெயரில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. அந்தப் படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் முகவை ராஜமாணிக்கம்.

இவர் ராமநாதபுரத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர். ராமநாதபுரத்திற்கு மற்றும் ஒரு பெயர் இருக்கிறது. அதுதான் முகவை. இவர் ஒரு பக்கா இலக்கியவாதி, கவிஞர், கிராமியக் கலைகள் எல்லாவற்றையும் தெரிந்தவர். நமது இந்திய மேப்பில் ராமநாதபுரம் முகப்பில் இருப்பதால் அதற்கு இலக்கியவாதிகள் முகவை என்றும் சொல்வார்கள்.

ராஜமாணிக்கம் தன் பெயருக்கு முன் முகவை என்று சேர்த்து முகவை ராஜமாணிக்கம் என வைத்துக் கொண்டார்.

இவர் அந்தக் காலத்திலேயே பி.ஏ. படித்துப் பட்டம் பெற்றவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உடன்பாடு உடையவர். அந்தக் கட்சியில் இருந்து பிறகு பெயர் சொல்லும் அளவிற்கு எந்தக் கட்சியிலும் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல், மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்களை மதிக்கும் மனப்பான்மை கொண்டவர் என்பதால் காங்கிரஸ் இயக்கத்திற்கு மாறி, கடைசி காலம் வரை கதரையே அணிந்து வந்தார்.

ஐஸ் ஹவுஸில் உள்ள கரீம் சபேதார் என்ற வீதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தார். நான் ரேடியோ நாடகம் ஒன்றில் நடிக்கப் போயிருந்த போது பிரபல பின்னணிப் பாடகி ஆக இருந்த செல்வி ஏ.பி. கோமளா வானொலியில் இசைப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், முகவை ராஜமாணிக்கம் அவர்களை 1980ஆம் ஆண்டு எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அன்று முதல் நான் பல்வேறு விஷயங்கள் குறித்து முகவை அவர்களுடன் கலந்து பேசியது உண்டு. சுமார் 15 ஆண்டுகள் அவரோடு பழகி வந்த நான் ஒரு நாள் அவரிடம் “மிகப்பெரிய இலக்கியவாதியான நீங்கள், ஒரு இலக்கிய நாடகத்தை எழுதித் தந்தால் அதை நாங்கள் நல்ல முறையில் அரங்கேற்றி உங்களுக்கும், இலக்கிய உலகிற்கும் பெருமை சேர்ப்போமே” என்று சொன்னேன்.

சில வினாடிகள் கழித்து அவர் சொன்னார், “துரை கேட்பதால் ஒரு மாதத்திற்குள் நான் அந்த நாடகத்தை எழுதித் தருகிறேன்” என்றார். சொன்னபடி அவர் எழுதி வழங்கிய  நாடகம்தான் ‘பொய்யாமொழி’.

60 ஆண்டுகளுக்கு முன்பு எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்து வெளிவந்த ‘சிவகவி’ படத்தின் கதைதான் அது. அந்தப் படத்தைத் தயாரித்தவர்கள் ஆன்மீக பாணியில் மிக எளிமையாக எல்லோரும் புரிந்து ரசிக்கும் விதத்தில் தயாரித்து இருந்தார்கள். அது ஒரு வெற்றிப் படம் என்று சொல்லலாம்.

பாகவதரின் அனைத்துப் பாடல்களுமே படம் பார்ககும் மக்கள் அங்கேயே ஒன்ஸ்மோர் கேட்கும் அளவிற்கு இருந்தது. அதனால்தான் அது வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியது. முகவை அந்தக் கதையை ஹிஸ்டாரிக்கல் பாணியில் இலக்கிய நயமாகவே உரையாடல்களை எழுதி, மும்பை சண்முகானந்தா அரங்கில் ஹெரான் தியேட்டர்ஸ் சார்பில் அரங்கேற்றியபோது முகவை எழுதிய உரையாடல்களைக் கேட்டு ரசிகர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அந்தக் கரவொலி நாடகத்தின் கடைசி காட்சி வரை நீடித்தது. வாயில் பற்களே இல்லாதபோதும் தன் சொற்களில் தரமான இலக்கியத்தை விதைத்த வித்தியாசமான மனிதர்.

மும்பை சண்முகானந்தா சபாவில் தலைவர் ஆதி லக்ஷ்மணன் உள்பட அனைவருமே இலக்கியத்தை முழுவதுமாக அறிந்தவர்கள். நாடகம் முடிந்ததும் நாடகத்தில் பொய்யாமொழியாக நடித்த ஹெரானுக்கும், கதை, வசனம் எழுதிய முகவை அவர்களுக்கும் நூற்றுக்கணக்கான ரசிகப் பெருமக்கள் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்கள்.

முகவை ராஜமாணிக்கம் அவர்களின் இலக்கிய நாடகத்தை ரசித்த ரசிகப் பெருமக்கள் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் வழங்கி மகிழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முகவை ராஜமாணிக்கம் தன் வாழ்க்கையில் ஒரு காங்கிரஸ் தியாகியாகவே வாழ்ந்து இருக்கிறார். எஸ்.எம்.வேலு (INA), கல்கி கிருஷ்ணமூர்த்தி,
கே. பாவாடை பிள்ளை, அப்துல் மஜீத், எஸ்.ஆர். சம்பந்தம், பாது வடிவேல் பிள்ளை, லட்சுமி பாரதி, அ.பால்ராஜ், மைக்கேல், அகஸ்தீஸ்வரன் போன்ற தியாகிகள் வரிசையில்  நமது முகவை ராஜமாணிக்கமும் ஒருவர்.

புலவர் பொய்யாமொழி காளி அருள் பெற்றவர் என்பதால் அவர் சொல்லும் வாக்கு அப்படியே நடக்கும் என்பது இலக்கியம் தெரிந்தவர்களுக்குப் புரியும். இதோ அவர் எழுதிய இலக்கியங்கள், நாடக உரையாடல்கள் நீங்கள் படித்து மகிழ…

வயலைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த பொய்யாமொழி சற்று நேரம் கண் அயர்ந்துவிட, அறுவடை செய்யும் நிலையில் இருந்த கதிர்களை எல்லாம் ஒரு குதிரை வந்து தின்று நாசமாக்கியது.

கண் விழித்துப் பார்த்த பொய்யாமொழி கோபத்துடன் பாடுகிறார்.

“வாய்த்த வைரபுரி மாகாளி அம்மையே,

ஆய்த்த அருகாம் அணிவயலில்

காய்த்த கதிரை மாளத்தின்ற

காளிங்கன் ஏறும் குதிரை

மாளக் கொண்டு போ

என்று அவர் பாடியதும் குதிரை இறந்து விடுகிறது.

பொய்யாமொழிப் புலவரைச் சந்தித்த மன்னன் காளிங்கராயன் தன்  குதிரையை மீட்டுத் தர வேண்டும் என்று கெஞ்சுகிறான். உடனே காளிங்கனுக்காக மனம் இரங்கிய பொய்யாமொழி கடைசி வரியை மாற்றிப் பாடுகிறார்.

காளிங்கன் ஏறும் குதிரை மீளக்கொண்டு வா

என்று அவர் பாடியதும் குதிரை உயிர்ப் பெற்று எழுகிறது.

மன்னன் வணங்காமுடி பாண்டியனைச் சந்தித்த பொய்யாமொழி அவரை வாழ்த்திப் பாடுகிறார்.

“குழற்கால் அரவிந்தம் கூம்ப

குமுதம் பொதி அவிழ்ப்ப

நிழற்கால் மதியம் அன்றோ

நீதான் அவ்வந்தி அண்ணல் அழர்கால்

தொழுகுதியோ வணங்காமுடி கைத்தவனே

மன்னன் :– அமைச்சரே புலவருக்கு ஈற்றடியைச் சொல்லுங்கள்.

அமைச்சர் :- கொண்டுவந்து போட்டுக் கொளுத்து.

பொய்யாமொழி:- இவ்வளவு தானே இதோ பாடுகிறேன்.

“அந்தி வெடி முல்லை அரும்பெடுத்து -நான் வந்தேன்

விந்தையதாம் நாயகருக்கு மெல்லியலே

சுந்தரம் சேர் செண்டு கட்ட வேணும்

திருவிளக்கிலே திரியை கொண்டுவந்து

போட்டுக் கொளுத்து..”

மன்னர்:- புலவரே! அரண்மனைத் தூண்களில் சிலையாக இருக்கும் புலவர்கள் எல்லாம் தலையசைத்து ரசிக்கும்படி பாட உங்களால் முடியுமா?

பொய்யாமொழி:-  தாராளமாக.. புலவர்கள் தலையசைத்து ரசிப்பதற்குப் பெயர் சிரக் கம்பம். இதோ பாடுகிறேன் மன்னா. இலக்கிய முன்னோடிகளே, என்னை ஆசீர்வதியுங்கள்.

பாடல் :-   “உங்களிலே நான் ஒருவன் ஒவ்வுவனோ, ஒவ்வேனோ

திங்கள் குலன் அறிய செப்புங்கள், ஏடவிழ்தார்,

ஏழ் எழுவீர் இன்று பொய்யாமொழி பாடி முடித்ததும்

சிலைகள் எல்லாம் தலையசைத்து மகிழ்கிறது.”

வணங்காமுடி:-  பொய்யாமொழி அவர்களே, நீவீர் பெரும் புலவர்.

பொய்யா :- மன்னா, அறம் உரைத்தோனும் புலவன், திருக்குறளின் திறன் உரைத்தோனும் புலவன், தரணி பொறுக்குமோ நானும் புலவன் என்றால்!

சீனக்கனும், பொய்யாமொழியும் ஆத்மார்த்த நண்பர்கள். ஆனால் ஒருவரை ஒருவர் சந்தித்தது இல்லை. பொய்யாமொழி தன் நாட்டிற்கு வந்து சத்திரத்தில் தங்கி இருக்கிறார் என்ற விஷயம் சீனக்கருக்குது தெரிந்து பொய்யாமொழியைச் சந்திக்க சத்திரத்தில் சென்றவர், தான் யார் என்று சொல்லாமல் பொய்யாமொழியிடம்.

சீனக்கன்:- புலவரே, நான் இந்த ஊரில் உள்ள ஒரு புலவன். தங்களிடம் இலக்கியத்தைக் குறித்தும், தமிழ் மொழியைப் பற்றியும் விவாதம் செய்யலாம் என்று வந்துள்ளேன்.

பொய்யா:- மன்னிக்கவும். இந்த நாட்டில் மந்திரியாக இருக்கும் சீனக்கர் ஒரு மாபெரும் இலக்கிய மேதை. நான் அவரைத் தவிர யாரிடமும் விவாதம் செய்ய விரும்பவில்லை.

சீனக்கன்:- நல்லது. தங்களின் நல்லெண்ணப்படியே நடக்கட்டும். தங்கள் நண்பர் சீனக்கரைப் பார்த்தால் நீங்கள் அவரை வாழ்த்தி ஒரு பாடல் பாடுவீர்கள் அல்லவா, அதைப் பாடுங்கள். கேட்டுவிட்டு நான் செல்கிறேன்.

பொய்யா:- தாராளமாகப் பாடுகிறேன்.

“இலக்கியத்திலும் இதிகாசத்திலும் எனக்கு நிகரானவனே.

எப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் சீனக்கா!

பூலோகத்தில் உன் புகழ் பாடுபவர்கள் எல்லாம்

ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள். ஆனால்

வானுலகத்தில் இருக்கும் நல்ல இதயங்கள் எல்லாம்

உன் புகழ் பாடி உன்மேல் பூச்சொரிந்து பாராட்டுவார்கள்

என்று பாடியதும் நிஜமாகவே வந்த புலவரின் மேல் பூ கொட்டுகிறது.

பொய்யா:- என் வாக்கு பொய்க்காது. உங்கள் மேல் பூ கொட்டுகிறதே நீங்கள் சீனக்கர் தானே?

சீனக்கர் :- ஆமாம் நண்பரே… என்று சொல்ல இருவரும் கட்டிப்பிடித்து மகிழ்கிறார்கள்.

சீனக்கரின் விருந்தாளியாகச் சென்ற பொய்யாமொழி சில வாரங்கள் அவரது அரண்மனையிலேயே தங்கி இருக்கிறார். ஒரு நாள் சீனக்கருடன் அவரது இல்லத்திற்கு வந்த பொய்யாமொழி சீனக்கரின் அந்தப்புரத்தில் சீனக்கரின் மனைவி படுத்திருக்கிறார் என்பதை அறியாமல், தூக்கக் கலக்கத்தில் சீனக்கரின் மனைவி அருகில் படுத்து விடுகிறார். அங்கு வந்த சீனக்கர், பொய்யாமொழியைக் கூப்பிடுகிறார்.

“நண்பரே, செல்லக் கட” என்று சொல்ல, பொய்யாமொழி தள்ளிப் படுக்க, இடையில் சீனக்கரும் படுத்து விடுகிறார். இவ்வளவு பெருந்தன்மை உள்ள சீனக்கர் ஒரு நாள் உயிர் துறக்கிறார்.

சிதையில் உடலை வைத்து அதை எரிந்து கொண்டிருக்கும்போது பொய்யாமொழி ஓடோடி வந்து அதன்மேல் அழுது புலம்புகிறார். அன்று நான் அறியாமல் உன் துணைவியின் அருகில் படுத்திருந்தபோது ‘செல்லக் கட’ என்று கூறினாயே, இன்று நான் பொய்யாமொழி சொல்கிறேன் ‘செல்லக் கட’ என்று பொய்யாமொழி சொன்னதும் சிதை இரண்டாகப் பிரிகிறது. பொய்யாமொழியும் போய் சிதையில் படுத்து விடுகிறார். இப்படி ஒரு தரமான இலக்கிய நாடகத்தைப் படைத்து ஹெரான் ராமசாமியைப் பொய்யாமொழியாக உலா வரச் செய்து பெருமைப்படுத்திய முகவை ராஜமாணிக்கம் நான் கேட்டதற்காக இந்த நாடகத்தை எழுதி வழங்கினார்.

‘பொய்யாமொழி’ நாடகத்தில் நானும் நகைச்சுவை பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறேன்.

இவர் எனது மரியாதைக்கு உரியவர். நான் என்றென்றும் நேசிப்பது கவிஞர் முகவை ராஜமாணிக்கத்தைத்தான்.

(தொடரும்)

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...