நீ என் மழைக்காலம் – 4 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 4
மழைக்கால மேகமாய், அவனைப் பற்றிய நினைவுகளே மனதில் வந்து குவிந்துக் கிடந்தன. மழை வருவதை முன்கூட்டியே ஊருக்குச் சொல்லும் தும்பிகள் போல், அவனைப் பற்றிய சிந்தனைகளே மனம் முழுக்க சிறகசைத்துக் கொண்டிருந்தன.
வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம், பேசுகிறோம், பழகுகிறோம். அவர்கள் எல்லாருமே நம் மனதில் நிற்பதும் இல்லை. பாதிப்பை உண்டாக்குவதும் இல்லை. யாரோ ஒருவர் தான் நம் வாழ்க்கையே புரட்டிப் போட்டு விடுகிறார்கள். மறக்க முடியாத நபர்களாக மாறிவிடுகிறார்கள். கடைசி வரை உடன் வருபவர்களாக இருந்துவிடுகிறார்கள். அப்படித்தான் கார்த்தி அவள் மறக்க முடியாத முகமாய் வந்து நின்றான்.
‘‘நான் உன்னை காதலிக்கிறேன்’’என்று அவன் சொன்னதும், மனதுக்குள் வந்து அலை அடித்ததுப் போனது. மேகம் பன்னீர் பூக்களை தூவியது. வானவில் வண்ணத்தோரணம் கட்டியது. தேவதைகள் இவள் வானத்தில் நட்சத்திரப் பூக்களால் மாலைகளைத் தொடுத்தார்கள்.
அவள் என்ன நினைத்திருந்தாளோ அதையேத் தான் அவன் சொல்லி இருக்கிறான். அவளின் விருப்பத்தை அவனது விருப்பமாக வந்து சொல்லி இருக்கிறான்.
ஆனால் இவளால் மகிழ்ச்சியுடன், அவன் காதலுக்கு தலையசைக்க முடியவில்லை. சம்மதம் என்று கூற முடியவில்லை. உன்னை எனக்கும் பிடிக்கும்டா என்று பதிலுக்கு காதலை சொல்ல முடியவில்லை. காரணம் அவளுடைய வீடு.
ஒன்று அவளுக்கு முன்பாக அக்கா கயல்விழி இருக்கிறாள்.
இரண்டாவது வீட்டில் காதலை ஏற்க மாட்டார்கள். இப்படித்தான் பெரியம்மா பெண் ரேவதி, தான் ஒருவனை காதலிப்பதாக வீட்டில் வந்து சொன்னாள்.
‘‘பையன் என்ன ஜாதி?’’ என்றார் அப்பா.
‘‘ நம்ம ஜாதி இல்லை. வேறு ஜாதி’’ என்றாள் அவள்.
‘‘வேணாம் . இது சரிபட்டு வராது. இது கிராமம். நகரம் இல்லை. ஊர் பலதும் பேசும். நம் இஷ்டம் போல் வாழ முடியாது. ஊரோடு தான் ஒட்டி வாழ வேண்டும். உனக்கு அடுத்து இந்த வீட்டில் இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள்… நீ அந்தப் பையனை மறந்துடு’’ என்றார் அப்பா.
அவள் எதிர்த்துப் பேசவில்லை. எதுவும் கேட்கவில்லை. மவுனமாக இருந்தாள். ஒரு வாரம் போனது. திடீரென்று ஒருநாள், மாலையும் கழுத்துமாக அந்தப் பையனுடன் வந்து நின்றாள் ரேவதி, பெரியம்மாவின் பெண். அம்மாவிற்கு அக்கா பெண். அவள் அப்பா இறந்து போனதால் அவர்களைப் பார்ப்பதற்கு யாரும் இல்லை என்று அம்மா தான் அவளை வீட்டோடுக் கூட்டி வந்து வைத்திருந்தாள். பெரியப்பா ராணுவத்தில் இருந்ததால் அவரின் பென்ஷன் பணம் வந்தது. அதனால் அவர்கள் செலவுக்கு அதுபோது மானதாக இருந்தது.
கல்யாணம் பண்ணி வந்தவர்களை அப்பா ஆசிர்வதிக்கக்கூட இல்லை. வெளியே தள்ளிக் கதவை சாத்தி விட்டார். பெற்றப் பாசத்தில் பெரியம்மா ரேவதி கூடவே போய் விட்டாள். இனி யாரும் அவர்களுடன்ப் பேசக் கூடாது என்று உத்தரவும் போட்டு விட்டார் அப்பா. அவர்கள் வேறு ஊருக்கும் இடம் மாறி போய் விட்டார்கள். இன்று வரை அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. சேலம் பக்கத்தில் எங்கேயோ நன்றாக இருப்பதாக மட்டும் சொந்தக்காரர்கள் சொன்னார்கள்.
அப்படிப்பட்ட பெற்றோரிடம் போய் காதல், அது இது என்றால் ஏற்றுக்கொள்வார்களா? அவள் யோசித்தாள். அப்போது ரேவதி மீது கோபம் வந்தது நிவேதிதாவுக்கு. வளர்த்த சித்தப்பாவை விட, யாரோ ஒருவனின் விருப்பம் மட்டுமே முக்கியம் என்று போன அவள் மீது கோபம் எழுந்தது. இப்போது நினைத்துப் பார்த்தால் அவள் செய்தது தான் சரி என்று பட்டது.
அப்பாவுக்காக அவள் ஏன் தன் விருப்பத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்? வாழப் போவதும் அவள் தானே ஒழிய அப்பா அல்ல.
அவளுக்கு முக்கியம் அம்மா. அவரே ஏற்றுக் கொண்டப் பிறகு அப்பா, அம்மா எதிர்ப்பதிலோ தொடர்ந்து காழ்ப்புணர்வு காட்டுவதிலோ நியாயம் இருப்பதாகவே படவில்லை நிவேதிதாவுக்கு.
அத்துடன் அப்பா வைத்த சொற்ப காரணம் ஏற்றுக் கொள்ளும் படியாகவும் இல்லை. ஜாதியை மட்டுமே காரணம் காட்டி ஒரு காதலை புதைக்குழியில் தள்ளுவது எத்தனைக் கேவலம்? ஜாதி பார்த்து காதல் வருவதில்லை என்பது அப்பாக்கள் உணரும் காலம் வெகு விரையில் வரவேண்டும் என்று நினைத்தாள் நிவேதிதா.
‘அப்பாவை சமாளிக்க முடியுமா? அவரை சம்மதிக்க வைத்துவிட முடியுமா? கார்த்திக்கு சரி என்று சொல்லி விடலாமா? எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு டா ராஸ்கல் என்று கூறி விடலாமா?’
‘பிறகுப் பிரச்சனையாகி விட்டால்? அக்காவுக்கு முன் அவசரப்படறியா என்று கேட்டு விட்டால்? ஜாதியைக் காட்டி மறுத்து விட்டால்?’
‘என்ன செய்வது? எதிர்த்து கல்யாணம் பண்ண முடியுமா? இத்தனை நாள் கண்ணின் மணிபோல் வளர்த்து ஆளாக்கியவர்களை எப்படி ஒரேநாளில் உதறிவிட்டு என் விருப்பம் மட்டுமே முக்கியம் என்று போய்விட முடியும்? உயிர்க் கொடுத்தவர்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இல்லையா? அதுதானே சரி?’
‘வெறும் பெண்ணாக மட்டுமே இருந்து கொண்டு பெற்றோரின் மனதை மண்ணில் போட்டு புதைத்துவிடக் கூடாது இல்லையா?’
‘இந்தக் காதலை ஏற்றுக் கொண்டால் தானே பெற்றோருக்கும் பிரச்சனை, கார்த்திக்கும் பிரச்சனை.’
‘பேசாமல் வேண்டாம் என்று மறுத்து விட்டால்?’
‘அப்படி மறுக்க மனம் வரவில்லையே ஏன்?’
‘காரணம் எனக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. நான் உள்ளுக்குள்ளேயே வைத்திருக்கிறேன். அவன் அப்படி வைத்திருக்க இயலாமல் வார்த்தைகளில் வெளிப்படுத்தி விட்டான்.’
‘காதலித்தால் எந்த பெற்றோரும்,` அப்படியா செல்லம்? சந்தோஷம் நீ காதலி ‘ என்று சொல்லவே மாட்டார்கள். அப்படி இருக்க, நான் ஏன் கார்த்தி காதலுக்கு மறுப்பு சொல்ல வேண்டும்?’
‘ஐயோ வேண்டாம். பெரிய பிரச்சனை ஆச்சுன்னா பிறகு அவஸ்தைப் படப்போவது நான் மட்டும் அல்ல, இன்னொரு உயிரான கார்த்தியும் தான்.’
‘அப்பா அம்மா வாழ்ந்து முடித்தவர்கள். அவர்கள் இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தான் இருக்கப் போகிறார்கள். அவர்களுக்காக உன்னுடைய வாழ்க்கையை நீ ஏன் கெடுத்துக் கொள்கிறாய்? அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்யலாமே’
`வேண்டாம் கார்த்தி, நாம் நண்பர்களாகவே இருப்போம்’ என்று கூறினால் என்ன செய்வான்?
இனிமேல் பேசாமல் போவானா? நிராகரிப்பானா? அவள் மனசு உள்ளேயும், வெளியேயுமாக நின்று ஊஞ்சல் கட்டி ஆட ஆரம்பித்தது. அந்த ஆட்டத்தில் தலை கிண்ணென்று வலிக்க ஆரம்பித்தது.
-(சாரல் அடிக்கும்)