ஒளி ஒவியர் தங்கர் பச்சான்….!

மாறுபட்ட அருமையான படைப்புகளை தமிழ் மக்களுக்கு விருந்தளித்த இயக்குனர் தங்கர் பச்சான், 80’ஸ், 90’ஸ் கடந்து இன்று 2கே காலத்திலும் தன்னுடைய கருமேகங்கள் கலைகின்றன என்ற திரைக்காவியத்தின் மூலம், இன்றைய இளம் இயக்குனர்களுக்கு நிகராக, தன்னுடைய திரை மொழியின் மூலம் படைப்புகளை தந்துக்கொண்டிருக்கிறார் தங்கர் பச்சான். தமிழ் சினிமா பேசாத, பேசத் தயங்கிய புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்க ஆரம்பித்தார் தங்கர் பச்சான்.

தன்னுடைய எண்ணற்ற படைப்புகள் மூலம் சினிமாவில் கோலோச்சிய தங்கர் பச்சன், ஒரு இலக்கியவாதியாகவும் பரிணமித்தார். உலக சினிமாவை பொருத்தவரை, இலக்கியங்களை மூலமாக கொண்ட படைப்புகளிலிருந்தே, பல தரமான படங்கள் உருவாகியிருக்கின்றன. அதேபோல், இந்திய சினிமாவில் இலக்கிய படைப்புகளிலிருந்து, திரைப்படங்கள் உருவாக்குவதில் முதன்மையாக விளங்குபவர் தங்கர் பச்சன்.

இன்று, ஒளி ஓவியர் , டைரக்டர் தங்கர்பச்சான் பிறந்தநாள்
இதை ஒட்டி அவரை பற்றிய ‘ஷோ ரீல்’ இன்று வெளியிடப்பட்டது .

1961 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை கிராமத்தில் பிறந்தார். இயற்கை தீட்டிய திரைகாவியன், தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற ஒளி ஒவியன்.

தங்கர் பச்சான்…

வட தமிழ்நாட்டின் செம்மண் வாழ்வியலையும் எளிய மனிதர்களின் உணர்வுகளையும் திரைமொழியாக வடித்த இயக்குனர்களில் தனித்துவம் பெறுபவர் தங்கர் பச்சான்.

ஒரு இயக்குனராக, எழுத்தாளராக, ஒளிப்பதிவாளராக, நடிகராக, தமிழ் மரபின் இழையை சிதைக்காமல், தமிழ் சினிமாவில் கவனிக்க மறந்த பல களங்களை காவியங்களாக்கியதோடு மட்டுமில்லாமல், எளிய மனிதர்களை தன்னுடைய புதினங்கள் மூலம் கதாநாயகர்களாக்கி, இவர் நிகழ்த்திய அற்புதங்கள் படைப்பின் உச்சங்கள்.

தெருகூத்து மரபு கொண்ட ஒரு பாரம்பரிய குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, சிறுவயதிலிருந்தே கலைகள் மீதும், சினிமா மீதும் அதீத காதல் கொண்டவராக இருந்தார் தங்கர் பச்சான்.

இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, ஆட்டோமொபைல் உதிரி பாகம் செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்துக்கொண்டிருந்த தருணம், எம்ஜிஆரின் தீவிர ரசிகரான தங்கர்பச்சான் ஒரு சினிமா இதழை எம்ஜிஆரின் புகைப்படத்திற்காக வாங்கினார். அவ்விதழின் பின் அட்டையில் வெளியாகியிருந்த திரைப்பட கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரம்தான் அவரின் வாழ்க்கையின் போக்கை மாற்றியது. திரைப்பட கல்லூரியில் படித்தால்தான் திரைத்துறைக்குள் நுழைய முடியும் என்ற எண்ணத்தில், அவரது அண்ணனின் உதவியால் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து ஒளிப்பதிவின் நுணுக்கங்களை பயில ஆரம்பித்தார். 5ஆம் வகுப்பு படித்தபோது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம், முதல் முதல் கல்லூரிக்கு போகும் போது எடுக்கப்பட்ட படம் ஆகிய இரண்டு மட்டுமே, அதுவரையில் இவருக்கும் கேமராவிற்குமான தொடர்பாக இருந்தது.

மூன்று ஆண்டுக்கால படிப்பில் முதல் ஆண்டு வெற்று பெருமையிலேயே கழிந்தது. இரண்டாம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு சிறு பயிற்சிப் படம்தான், அவருக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுத்தந்தது. இவர் முதன் முறையாக ஒளிப்பதிவு செய்த அந்த படம் எந்த உருவமும் பதிவாகாமல் திரை முழுக்க வெறும் வெள்ளையாக தெரிந்தது. தன்னுடைய முதல் படமே, சக மாணவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானதை கண்ட தங்கர் பச்சான், அதற்காக துவளாமல், அதையே படிப்பினையாக கொண்டு தொடர்ந்து இரவு, பகலாக ஒளிப்பதிவை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும் போது, உருவாக்கப்படும் குறும்படத்திற்காக, எழுத்தாளர் சுஜாதாவின் “வந்தவன்” எனும் சிறுகதையை திரைக்கதையாக்கிய படத்தில், ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்படத்தில் ஒரே ஒரு விளக்கில் படமாக்கியது போன்று ஒளியமைத்து, காட்சியமைக்கப்பட்டதை கண்ட இயக்குனர் பாலுமகேந்திரா, தங்கர்பச்சானை வெகுவாக பாராட்டி, அவரது ஒளிப்பதிவு திறனை கண்டு வியந்து, ஊக்குவித்தார். முதல் பயிற்சி படத்தில் இவர் பெற்ற தோல்வியும், அவமானமும், விடா முயற்சியுந்தான், இவரை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றது.

மற்ற மாணவர்களை போல் அல்லாமல் திரைப்பட கல்லூரியில் பயிலும் பொழுதிலிருந்தே, திரைப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணிப்புரிந்த அனுபவம் இவருக்கு, மேலும் தொழிற்நுட்பங்களை கற்றுத்தேற உதவியாக இருந்தது. படிப்பை முடித்தப்பின் நாற்பது திரைப்படங்களுக்கு மேலாக உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பசி, உறக்கம், கேளிக்கை என அனைத்தையும் துறந்து, சினிமாவை மட்டும் உயிர் மூச்சாக கொண்டு, ஒளிப்பதிவாளராக அறிமுகமான முதல் படம் மலைச்சாரல் (1990). தொடர்ந்து மோகமுள், காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி, பாரதி, பெரியார் என தமிழ் சினிமாவில் வரலாறு படைத்த பல திரைப்படங்களின் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கினார். வாழ்க்கை தேவைக்காக வணிக சினிமாவில் பணியாற்றிக்கொண்டே, கலை நோக்கில் உருவாக்கப்படும் படங்களிலும், ஊதியத்தை எதிர்ப்பார்க்காமல் பணியாற்றி, தன்னுடைய கலைத்தாகத்தை தீர்த்துக்கொண்டார். தமிழ் மொழி மட்டுமல்லாமல், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் பணியாற்றினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்ட போதும், தன்னுடைய சிந்தனைகளையும், சமுதாயம், அரசியல் சார்ந்த கருத்துகளையும் தன்னிச்சையாக வெளிப்படுத்த, ஒளிப்பதிவாளர் என்ற அடையாளம் மட்டும் போதுமானதில்லை என்று புரிந்துக்கொண்டார். 2002 ஆம் ஆண்டு அழகி திரைப்படம் மூலம் ஒரு இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.

முன்னாள் காதலியின் தற்போதைய அவல நிலையைக் கண்டு வருந்தும் காதலனின் தவிப்பை சொல்லும் அழகி.

தன்னுடைய சொல்ல மறந்த கதை திரைப்படத்தின் வாயிலாக, வீட்டுடன் மாப்பிள்ளையாக இருக்கும் சிவதானு, பெற்றோர்களையும், உடன் பிறந்தவர்களையும் விட்டு, தன்மானத்தை இழந்து வாழப்பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய பின், அவன் குடும்பத்துடன் நடக்கும் பாசப்போராட்டத்தை திரையில் கொண்டு வந்ததோடு, இனம் புரியாத காதலால், எழுந்தாளர் நலங்கிள்ளியினால் கருவுற்று, தாயாகும் ஏழைப்பெண் தாமரையின், திசை மாறிப்போகும் வாழ்க்கையையும் தென்றல் என்ற திரைக்காவியத்தின் வாயிலாக, நுட்பமாக படம்பிடித்தார் இயக்குனர் தங்கர் பச்சான்.

தன்னுடைய மகிழ்ச்சியை மட்டுமே பிரதானமாக்கி, குடும்பத்தை கண்டு கொள்ளாமல் பொறுப்பில்லாமல் வாழும் இளங்கோ, எப்படி மனைவி மற்றும் சமுகத்திலிருந்து பெறும் படிப்பினைகளால் மனமாற்றம் அடைகிறார் என்பதை சொன்ன சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.

தான் இந்த சமூகத்தில் உயராமல் போனாலும், மற்றவர்களையும் வளர்த்துவிட்ட பள்ளிக்கூடம் மூடப்படுவதை கண்டு வருந்தும் அய்யோடி குமாரசாமி, எவ்வாறு நண்பர்கள் உதவியுடன் அதனை மீட்டெடுக்கிறார் என்பதை திரைமொழியாக வடித்து, நமது பள்ளி பருவ நினைவுகளை துளிர்த்தெழ செய்த பள்ளிக்கூடம்.

தன் தவறினால், தன் கோபத்தால் தன் குடும்பமே வறுமையில் உழல்வதையும், தலைமுறையே வீதிக்கு வந்து விட்டதையும் எண்ணி கலங்கி உயிர்விடும், மாதவ படையாட்சியின் வாழ்க்கையின் மூலம் குடும்ப வாழ்வின் உன்னதத்தை சொன்ன ஒன்பது ரூபாய் நோட்டு

குற்றவுணர்ச்சியில் தவிக்கும் ஒரு கொலையாளி, தன் தவறை எண்ணி மனமாற்றம் அடைவதை உணர்வுபூர்வமாக சொன்ன அம்மாவின் கைப்பேசி.

நிறைவேறாத காதலை சுமந்துகொண்டு பிரிய மனமின்றிப் பிரியும் இரண்டு காதலர்களின் வாழ்க்கையை கண்ணியமாக படம்பிடித்த களவாடிய பொழுதுகள் என எண்ணற்ற படைப்புகளுக்கு சொந்தக்காரர் தங்கர் பச்சான்.

இயக்குனர் தங்கர் பச்சான் பத்திரக்கோட்டையிலிருந்து தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கி, ஒரு ஒளிப்பதிவாளராக, எழுத்தாளராக, இயக்குனராக பரிணமித்து, தமிழ் மக்களின் இதயக்கோட்டையில் வசிகரித்துக்கொண்டிருக்கும் தங்கர் பச்சான்…ஒரு சகாப்தம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!