ஷங்கர் “30”….!
ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகி 30 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் இயக்குநர் மணிரத்னம் தலையில் தமிழின் முன்னணி இயக்குநர்கள் பலரும் ஒன்றுகூடி ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, கார்த்திக் சுப்பராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், சசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளதாவது: “இந்த சிறப்பான மாலைப் பொழுதை வழங்கிய மணி சாருக்கு நன்றி. புகழ்பெற்ற இந்த இயக்குநர்களை சந்தித்து, அவர்களுடன் நினைவுகளை பகிர்ந்து கொண்டது, இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் எவர்க்ரீன் பாடல்களுக்கு வைப் செய்தது என இந்த தருணங்கள்தான் நாம் சம்பாதித்த உண்மையான சொத்து. உங்கள் உபசரிப்புக்கு நன்றி சுஹாசினி” என்று ஷங்கர் கூறியுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் முதன் முதலாக இயக்குநராக அறிமுகமான படம் ‘ஜென்டில்மேன்’. அர்ஜூன் நடிப்பில் 1993-ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் வெளியாகி சமீபத்தில் 30 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகன்றனர்.