வேப்ப மரத்துப் பூக்கள்… 2 | ஜி.ஏ.பிரபா
அத்தியாயம் – 2
“நம்பிக்கை மிகப் பெரும் வலிமை உடையது.
நடக்காது என்பதையும் வெற்றியோடு நடக்கச்
செய்யும் சக்தி நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு.”
“கல்யாணி.”-குரல் எங்கிருந்தோ ஒலித்தது.
“மிசஸ் கல்யாணி ரகுராமன்.” மீண்டும் குரல் ஒலித்தது. கல்யாணி பதில் சொல்லவில்லை. அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இந்த வீட்டில் எனக்குன்னு என்ன மரியாதை இருக்கு? ஒருத்தி இப்படி கத்தறேன்”– மௌனிகா வந்து நின்றாள்.
இடுப்பில் கை வைத்தபடி கண்ணை உருட்டிப் பேசிய அவளைப் பார்த்ததும் சிரிப்பு வந்தாலும் தலை குனிந்து புடவைகளை அடுக்கி பீரோவில் வைத்தாள்.
“சே அவமானம்.”-மௌனிகா மீண்டும் கொந்தளித்தாள்.
‘என்னடி வேணும்? ஏன் இப்படிக் கத்தறே?”– கல்யாணி
“இதை அப்பவே கேட்டிருக்கலாம்ல?’
“பொறுமை இல்லாம கத்தினா யாருக்கு பதில் சொல்லத் தோணும். அப்படியே அத்தையைக் கொண்டு இருக்கே. பிரேமாவும் இப்படித்தான். கூப்பிட்டதும் உடனே என்னன்னு கேட்கணும்”
“அவங்களைப் பத்திப் பேசாதே”
“உறவுகளை விட்டு விலகி இருக்க முடியாது மௌனிகா. என்றைக்கிருந்தாலும் சந்தித்தே ஆகனும்”
“சந்திக்கத்தானே இப்போ டில்லியை விட்டுக் கிளம்பறே?”
“ஆமா, அவங்க முன்னாடி உன்னைக் கொண்டு போய் நிறுத்தனும். அவர் வாயால நீ அவர் பொண்ணுன்னு பலர் அறியச் சொல்லணும்.” வைராக்கியத்துடன் கறுவினாள் கல்யாணி.
“கூல்,கூல்” மௌனிகா அம்மாவை அமைதிப் படுத்தினாள்.
“தாயின் கண்ணீரைத் துடைப்பதே தவமாக நினைத்து நடப்பவள் இந்த மௌனிகா. சத்தியம். ஆணையிடுங்கள் தாயே”
“போதும்டி”-கல்யாணி சிரித்தாள். “நீயும் வந்து அடுக்கி வை. இன்னும் ஒருமணி நேரத்துல வண்டி வந்துடும். இதை எல்லாம் பார்சல் செஞ்சு அனுப்பிட்டு நாம மதியம் டிரெய்ன் ஏறனும்.”
“ஆஹா, எனதருமை டில்லி மாநகரே, உன் மடியில் தவழ்ந்து வளர்ந்த நான் இன்று உன்னைப் பிரிந்து செல்கிறேன். விடை கொடு என் தாயே.”
“என்னது, என்னவோ கவிதை எல்லாம் கிளப்புது?”
“மனத் துயரம்.”
“அதெல்லாம் கூடாதே. மனசுல எந்தத் துயரமும் கூடாது. எல்லாத்தையும் தூக்கி ஏறி. ஃப்ரெஷ்ஷா வண்டி ஏறு. புது இடம், புது மனிதர்கள், புது அனுபவங்கள். எல்லாத்துக்கும் தயார் ஆகிக்கோ.”
“ரிப்பீட்டு”
“ எதுக்கு ரிப்பீட்டு?’ கல்யாணி
“இதையே நான் உனக்குத் திருப்பிச் சொல்கிறேன். மனசுல வச்சுக்க.”
உண்மைதான். இப்போது புது கல்யாணியாக மனதில் ஒரு உறுதியுடன் சென்னைக்குச் செல்கிறாள். ரகுராமனையே சந்திக்கக் கூடாது என்றுதான் நினைத்தாள். ஆனால் மௌனிகா வளர, வளர அவள் படிப்பு, கல்யாணம் என்று வரும்போது அப்பா எங்கே, யாரு என்ன என்று கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அத்துடன் மனசில் கொந்தளிக்கும் உணர்வுகளுக்குப் பதில் தேட வேண்டியிருந்தது. மனசில் ரகசியமாய் உருகும் நினைவுகளின் சொந்தக்காரனைப் பார்க்க வேண்டும்.
“அப்படி பனிமலையாய் உருகிய நீ ஏன் அமைதியாய் நின்றாய்? உன் அன்பு, உருகும் வார்த்தைகள், கண்ணம்மா என்ற உன் அழைப்பு எல்லாம் பொய்யா?” அடுக்கடுக்காய் கேள்விகள் இருக்கிறது மனசில்.
எதிரில் நின்று கேள்விகளை வீச, வீச அந்த முகம் போகும் தோற்றத்தைப் பார்க்க வேண்டும். எப்படி, எங்கு எந்தச் சூழ்நிலையில் சந்திக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் சந்திக்க வேண்டும். மௌனிகாவை என் பெண் என்று அவர் வாயால் சொல்ல வேண்டும். அவள் கல்யாணத்தை ஒரு தகப்பனாக நின்று அவர் நடத்த வேண்டும். அதன் பின்,………
அதன் பின்? அதன்பின் எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை.
ஆனால் பிரேமா, ரகுராமன், கௌசல்யா என்று எல்லோரையும் கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. உங்களையே நம்பி வந்த ஒரு பெண்ணின் மேல் பழி சுமத்திணீர்களே, இன்று அதன் மூலம் சாதித்தது என்ன?
நிச்சயம் ரகுராமனுக்கு இரண்டாவது திருமணம் நடந்திருக்கும். அந்தப் பெண்ணின் வாழ்வை கல்யாணி கெடுக்க மாட்டாள். மௌனிகாவின் தகப்பன் தான்தான் என்று அவர் ஒத்துக் கொண்டாள் போதும்.
மனம் முழுதும் எதிர்பார்ப்புகள், திட்டங்களோடு சென்னை நோக்கிச் செல்கிறாள். எது நடக்க வேண்டும் என்பத அந்த பிரபஞ்ச சக்தி கவனித்துக் கொள்ளும். மனதில் ஒரு ஆசையை வளர்த்துக் கொண்டு அதையே அனுதினமும் எண்ணிக் கொண்டு அதை நோக்கியே நடந்தால் நிச்சயம் அது நடக்கும் என்று கல்யாணி நம்பினாள்.
அந்த நம்பிக்கைதான் அவளை இன்று வரை நடத்தி வந்திருக்கிறது.
வயிற்றில் ஆறு மாதக் கரு. ரகுராமனை விட்டு வரும்போது எங்கு போவது என்று தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து போய்விட வேண்டும் என்ற உணர்வு மட்டும் துடித்துக் கொண்டிருந்தது.
சென்னையிலிருந்து நேராக கோவை வந்தாள். அவளின் அத்தை ஒருத்தி அங்கு இருந்தாள். தனியாக ஒரு ஹோமில் இருந்தவளிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதாள். அத்தை ஆறுதல் சொல்லி பிரசவம் பார்த்து, தன்னுடன் அவர்களை ஆறு மாதம் வைத்திருந்தாள்.
ஆனால் தொடர்ந்து வைத்திருக்க அவளின் பொருளாதார நிலைமை ஒத்துழைக்க வில்லை. அதைக் கல்யாணியே புரிந்து கொண்டாள். அத்துடன் அத்தை அவளை ரகுராமனிடம் செல்லச் சொல்லி வற்புறுத்த ஆரம்பித்தாள்.
அந்த நேரத்தில்தான் அந்த ஹோமில் இருந்த ஒருவர் மூலம் பெங்களூரில் ஒரு ஹோமில் நிர்வாகப் பிரிவில் வேலை கிடைத்தது. அங்கிருந்து மும்பை அங்கிருந்து டில்லி என்று ஓடினாலும் மனசும் கூடவேதான் வந்தது. உள்ளத்தில் ஒரு வைராக்கியமாகவே.
என்றேனும் ஒருநாள் சந்திக்க வேண்டும் என்பது தீராத தகமாகவே இருந்தது.
வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தம். பெண் குழந்தை. அவளுக்கும் சிறு வயசு. சுற்றிலும் உள்ள கழுகுகளிடம் இருந்து தப்பித்து கௌரமாக வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம். மௌனிகா வளர்ந்த பிறகு அவளுக்குச் சில தொந்தரவுகள். ஆனால் தன்னைக் காத்துக் கொள்ளும் வழிமுறைகள் அவளிடம் அதிகம்.
கண்ணை உறுத்தும்படியான நவநாகரீக ஆடைகள் அணிய மாட்டாள். துப்பட்டா இல்லாமல் சுடிதார் அணிய மாட்டாள். எங்கு சென்றாலும் ஆறு மணிக்கு மேல் வெளியில் தங்க மாட்டாள். எந்த ஆண் நண்பர்கள் என்றாலும் அவர்கள் வீட்டில் அப்பா, அம்மா முன்போ, இல்லை இங்கு கல்யாணி இருக்கும்போதோதான் வரச் சொல்லி பேசுவாள்.
டில்லி போன்ற மாநகரங்களில், நாகரீகம் தலை விரித்தாடும் இடத்தில் நெருப்பு மேல் நடப்பது போல் சர்வ ஜாக்கிரதையாக இருவரும் நடந்தார்கள். ஆண் துணை இல்லாத வீடு என்று யாரிடம் பழகினாலும் ஒரு விலகளுடனேயே பழகினார்கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகுவாள். ஓடிப் போய் உதவுவார்கள். ஆனால் யாரையும் நம்பினது இல்லை.
கல்யாணி எந்த வேலையில் சேர்ந்தாலும் அதற்கான ஒரு டிப்ளமோ படித்து விடுவாள். பெங்களூரில் ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்த உடனேயே நிர்வாக இயல் படித்தாள். தோழி பத்மா மூலம் டில்லி போனதும், ஈவென்ட் மேனேஜ்மென்ட் முடித்தாள். கற்பனைத் திறன் அதிகம். கலா ரசனையோடு ஒவ்வொன்றும் செய்வதால் தனியாக ஆபீஸ் போட்டு வாடிக்கையாளர்கள் வரும் அளவுக்கு சிறப்பாகச் செய்தாள்.
இல்லை என்றால் மௌனிகாவை, இந்த அளவுக்குப் படிக்க வைத்திருக்க முடியாது. நெருப்பு ஆற்றில் பாதி கடந்தாகி விட்டது. இன்னும் சிறிது தூரம் இதே துணிவும் வைராக்கியமுமாய் சென்றால் போதும்.
போராடி சலித்து விட்டது. சாய்ந்து கொள்ள தோள் தேடுகிறது. ரகுராமன் தோளில் சாய்ந்து உலகை மறந்த கணங்களை மீண்டும் அனுபவிக்கத் துடிக்கிறது மனம்.
சிந்தித்தபடி அப்படியே அமர்ந்திருந்தாள் கல்யாணி.
“கல்யாணி எல்லாம் அடுக்கியாச்சா?”– பக்கத்து பிளாட் மங்களம். அவர் பேரன் சென்னையில் டாக்டராக இருக்கிறார். அவர் மூலம்தான் மௌனிகாவுக்கு அங்கு பிசியோதேரபிஸ்டாக வேலை கிடைத்திருக்கிறது. கல்யாணிக்கும் சில நிறுவனங்களில் தொடர்பு அவர் மூலம்தான் கிடைத்திருக்கிறது. சென்னை சென்ற பிறகு அவர்களைச் சந்தித்து தன் வேலையைத் தொடர வேண்டும்.
“இதை எல்லாம் எப்படி அனுப்பப் போறே?”
“இதை எல்லாம் அனுப்பற டிரெய்ன் இருக்கு மாமி. இப்போ கொஞ்ச நேரத்துல லாரி வந்துடும். அதுல ஏத்தி விட்டா அவங்க டிரெய்ன்ல அனுப்பி விட்ருவாங்க. நான் சென்னை போனாட்டு எடுத்துப்பேன்.”
“வீடெல்லாம் பாத்தாச்சா?”
அதுதான் சிறிது குழப்பம். உடன் பணிபுரிந்த ஒருவர் சென்னையில் என் உறவினர் வீடு ஒண்ணு காலியா இருக்கு என்று முகவரி தந்திருந்தார். பெருங்களத்தூரில் அபார்ட்மென்ட் வீடு. மௌனிகாவுக்கு ஹாஸ்பிடல் குரோம்பேட்டை. அது பரவாயில்லை. அவளிடம் டூ வீலர் இருக்கிறது.
கல்யாணிக்குத்தான் தன் தொழில் நிகழ்விடம் குறித்து இன்னும் தெளிவான வழி புரியவில்லை. வீடுமே எப்படி இருக்கும். அக்கம்பக்கம் எப்படி? என்று குழப்பம்.
“ஒண்ணும் கவலைப்படாதே. எல்லாம் நம்ம பெரியவா பாத்துப்பா. நீ போய் இறங்கு. உனக்கு எங்கிருந்தோ ஒரு ஆதரவுக் கரம் கிடைக்கும். நீ எதை நினைச்சுண்டு போறியோ அது நிச்சயம் நடக்கும்.”
மாமியின் ஆறுதலான வார்த்தைகள் கண்ணில் நீரை வரவழைத்தது.
அவளும் காஞ்சிப் பெரியவாளைதான் நம்பி வாழ்கிறாள். என்ன செய்வது என்று கலங்கித் தவித்த நேரங்களில் எதோ ஒன்று, யார் மூலமோ ஒரு உதவி கிடைக்கும்.
இதே போல்தான் சென்னையும். பெரியவா சரணம்.
“எல்லாம் நல்லதா நடக்கும். கவலைப் படாதே. மதியம் நான் உனக்கும் சேர்த்துதான் சமைச்சிருக்கேன். சாப்பிடு. ராத்திரி டிரெய்ன்ல சாப்பிட சப்பாத்தி செஞ்சு தரேன். சென்னைக்குப் போனதும் என் பேரனுக்கு போன் செய். என் பொண்ணு நல்ல டைப். அவ புருஷனுக்கு சென்னைல நிறைய பேரைத் தெரியும். உனக்கு என்ன ஹெல்ப் வேணுமோ செய்வார். நான் நிறைய உங்களைப் பத்தி சொல்லியிருக்கேன்.”
தேங்க்ஸ் மாமி.”
“இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ். மனுஷாளுக்கு, மனுஷா உதவி செய்யத்தான். இப்ப போற வீடு பிடிக்கலைன்னா சொல்லு. அவரே நல்ல வீடு பார்த்துத் தருவார். எத்தனை நாளா உன்னைப் பாக்கறேன். மௌனிகா அருமையான குழந்தை. இந்தப் பத்து வருஷமா நான் பார்த்து வளர்ந்த குழந்தை. நல்லா இருக்கணும்.”
நெகிழ்வாய் இருந்தது. இந்த மாதிரி சில மனிதர்கள்தான் வாழ்வின் மீது நம்பிக்கை தருகிறார்கள். இந்த அபார்ட்மென்ட் தான் முதலில் வந்தாள். வந்த அன்றே மங்களம் மாமி வந்து குசலம் விசாரித்து தங்கள் வீட்டில் சாப்பிடச் சொன்னார். எந்த ஒரு இக்கட்டான விஷயம் என்றாலும் அவரும், அவர் பையனும் முன் நின்று உதவுவார்கள்.
மொழி புரியாத ஊர், அந்நிய மொழி என்ற பயமே இல்லாமல் தன் சொந்த ஊராக நினைத்து இத்தனை நாள் இருந்தாகி விட்டது. சென்னைதான் அச்சுறுத்துகிறது. அவளின் கதை முழுதும் அறிந்தவள் மங்களம் மாமி.
“ரகுராமனைச் சந்தித்ததும் என்ன எதுன்னு சொல்லு. உடனே சண்டை போட்டுண்டு நிக்காதே. நாத்தனாரும் அன்னைக்கு இள வயசுல ஆடியிருக்கலாம். இப்போ ரத்தம் சுண்டிப் போய் இருப்பா. ரகுராமனுக்கு ரெண்டாம் கல்யாணம் செஞ்சிருப்பா. எல்லாத்தையும் யோசித்து செயல்படு. எங்க போனாலும் உனக்கு நான் இருக்கேன். கவலைப் படாம போ”
கண்கள் நிறைய அவரின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“பைத்தியமே, எதுக்கு இப்போ அழுகை. எல்லாம் நல்லதாவே நடக்கும். என்ன நினைச்சு நீ சென்னை போறியோ அதை எந்தக் குறைவும் இல்லாம பெரியவா நடத்தி வைப்பார். நம்பிக்கையோடு போ. அது ஆழமா இருந்தா எந்தப் புயல் காற்றும் நம்மை ஒண்ணும் செய்ய முடியாது.” மாமி முதுகைத் தட்டித் தந்தார்.
“லாரி வந்தாச்சு.”மௌனிகா குரல் கொடுத்தாள்.
“சரி நீ வேலையைப் பாரு. சாமானை எல்லாம் எத்தி விட்டுட்டு வா. சாப்டுட்டு சித்த ரெஸ்ட் எடு. “
மாமி கிளம்பிப் போனார்.
ஆள்காரர்கள் ஒவ்வொரு சாமானையும் எடுத்து வைக்க, வைக்க எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளியது. அந்தச் சந்தோஷமே நல்லது நடக்கும் என்று மனசுக்குத் தோணியது.
எந்த எண்ணத்தை மனதில் சுமந்து போகிறோமோ அது நிறைவேறினால் போதும். அவளின் ஒரே லட்சியம் மௌனிகாவின் திருமணம். என்றாலும் அடி மனதில் ஒரு ஆழமான உணர்வு.
ரகுராமன் இப்போது எப்படி இருப்பார்.
கல்யாணி ராமனா? இல்லை கல்யாண ராமனா?
யோசனையுடன் கிளம்பினாள் கல்யாணி…
– (ஏக்கங்கள் நீளும்…)