ஊட்டி சிரபுஞ்சி: யாரும் அறியாத அற்புத ஸ்பாட்
ஊட்டியில் ஒளிந்துள்ள சிரபுஞ்சி: யாரும் அறியாத அற்புத ஸ்பாட்.
தமிழகத்தின் மிக பிரபலமான மலை பிரதேசமாக ஊட்டி உள்ளது. டூர் போக வேண்டும் என்றாலோ அல்லது ஒரு நாள் மட்டும் ஜாலியாக ரைடு போக வேண்டும் என்றாலோ சட்டென நினைவில் வரும் இடத்தில் ஊட்டி முக்கியத்துவம் பெறுகிறது. பசுமையான காடுகள், புல்வெளிகள், இதமாக வருடி செல்லும் காற்று, வெண்ணிற மேகக் கூட்டங்கள் என பல அழகியலை கொண்டுள்ளது.
கோடை காலத்தில் குடும்பங்கள் செல்ல முதலில் திட்டமிடும் சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்த ஊட்டி மலைக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. ஊட்டி ஏரி, குழந்தைகள் பூங்கா, தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, எமரால்டு ஏரி, அவலாஞ்சி, முதுமலை வனவிலங்கு காப்பகம், ரோஸ் கார்டன், பைகாரா அருவி, பைக்காரா படகு சவாரி என சுற்றிப் பார்க்க பல இடங்கள் இங்கு உண்டு.
ஊட்டியில் ஒளிந்துள்ள தேவாலா
ஊட்டி செல்லும் போது, எப்போதும் காணும் வழக்கமான இடங்களுக்கு சென்று உங்களுக்கு அலுத்து விட்டது என்றாலோ அல்லது புதுமையான ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்தாலோ இந்த தொகுப்பில் வரும் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு ஒருமுறை சென்று விட்டு வரலாம். ஊட்டியில் பொதுவாகவே இயற்கை எழில் கொட்டி கிடக்கும். ஆனால் பெரும்பாலானோரால் அதிகம் அறியப்படாத அழகிய இடம் ஒன்று ஊட்டியில் இருக்கிறது. அது தான் ‘தேவாலா’.
நீலகிரியில் அமைந்துள்ள தேவாலா கூடலூர் – பந்தலூர் சாலையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேவாலா கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் உள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் ஆகும். பசுமை காட்சிகள் நிறைந்த, கூட்ட நெரிசல் அதிகளவில் இல்லாத ஒரு சுற்றுலா தலம் இது. இங்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகளை நாம் பார்க்க முடியாது.
தென் இந்தியாவின் சிரபுஞ்சி
இந்தியாவில் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி அதிக மழை பெறும் இடமாக இருக்கிறது. அதே போல தேவாலா மலைபிரதேசத்திலும் 6 மாதங்களுக்கும் மேலாக மழை பொலிவு இருக்கும். அதனால் தென் இந்தியாவின் சிரபுஞ்சி எனவும் தேவாலா கூறப்படுகிறது. பருவமழையை ரசிக்கும் உள்ளங்களுக்கு இது ஏற்ற இடம். இங்குள்ள சாய்வான தேயிலை தோட்டங்களின் அழகு நம்மை மயக்குகிறது.