எஸ்.வி.ரங்காராவ்
எல்லோரையும் கவர்ந்த எஸ்.வி.ரங்காராவ் பிறந்த நாளின்று!
‘‘முத்துக்கு முத்தாக
அண்ணன் தம்பிபிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்கள்ஒண்ணாக”
-‘அன்புச் சகோதரர்கள்’ படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடலை பாடி நடித்த நடிகர் எஸ்.வி.ரங்காராவை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தளவிற்கு பாசமானஅண்ணனாக அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார்.
தெலுங்கு பேசும் கிழக்கு கோதாவரி மண்ணில், ராஜமுந்திரி அருகிலுள்ள தவுலேஸ்வரம் எனும் கிராமத்தில் 1918-ம் ஆண்டு, ஜூலை 3-ம் தேதி, சுங்கத்துறை ஆய்வாளர் சாமர்லா கோட்டீஸ்வர ராவ் – சாமர்லா லட்சுமி நரசாயியம்மா தம்பதியின் மகனாகப் பிறந்தார் எஸ்.வி.ரங்காராவ்.
தாயார் இட்ட பெயரும் குடும்பப் பெயருமாக இணைந்து ‘சாமர்லா வெங்கட ரங்காராவ்’ என அழைக்கப்பட்டார். இதன் சுருக்கப் பெயராக ‘எஸ்.வி.ரங்காராவ்’ எனும் பெயர் நிலைத்துவிட்டது. அவரது பள்ளிப் படிப்பு பிறந்த கிராமத்திலும் சென்னையிலும் கழிந்தது.
விசாகப்பட்டணம், காக்கிநாடாவில் கல்லூரி வாழ்க்கை. இளங்கலை அறிவியல் பட்டம் பெற்று தீயணைப்புத் துறையில் பணியில் சேர்ந்தார்.
பள்ளிக் கல்வியில் தொற்றியது நடிப்புக் கிறுக்கு. பள்ளி நாடகத்தில் அவர் போட்ட முதல் வேடம், பில்லி சூனிய மந்திரவாதி பாத்திரம். காக்கிநாடாவில் தொழில்முறையற்ற (அமெச்சூர்) நாடகக்குழு ஒன்றில் இணைந்து தன்னை வளர்த்துக் கொண்டார்.
இங்கு இவரது சம பங்காளிகளாக இருந்தவர்கள், பின்னாளில் புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான பி.எஸ்.சுப்பாராவ், அஞ்சலி தேவி, ஆதி நாராயணராவ் போன்றவர்கள். இந்த நாடகக்குழுதான் இவருக்கு நாடகப் பள்ளியாக அமைந்தது.எஸ்.வி.ரங்காராவின் உடல்மொழியும் குரல்மொழியும் ஒருங்கிணைந்து மாயாஜாலம் காட்டின. அதேசமயம் மிக இயல்பான நடிப்பு, அலட்டல், மிரட்டல்… இதற்கான தடயங்களை அவர் ஷேக்ஸ்பியரிடமிருந்து எடுத்துள்ளார்.
இவர் திரைப்படங்களில் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அத்தனையும் மனித வாழ்க்கையில் மறக்க முடியாத ஒதுக்க முடியாத உன்னத உறவுகளை கொண்டதாக இருக்கும். நல்லகணவன், பாசமான அண்ணன், அன்பான அப்பா, மறக்க முடியாத மாமனார், கம்பீரமான தாத்தா, கௌரவமான போலீஸ் அதிகாரி, ஊர் போற்றும் மனிதர், கொடூரமான வில்லன், மற்றும் மந்திரவாதி, புராண, இதிகாச கதாபாத்திரங்கள் என்று அத்தனை வேடங்களையும் ஏற்று சிறப்பாக நடித்தார்.
இவருக்காக பல கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. சில கதாபாத்திரங்கள் இவர் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என இவரைத் தேடி வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட உன்னத கலைஞர் சிறந்த குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ்.
இவர் தமிழ், தெலுங்கு என்று இருநூறுக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அத்ததனைப் படங்களும் பிரபலமான சூப்பர் ஹிட்டான படங்களாகும்.
விஜயா வாஹினி தயாரித்த ‘பாதாள பைரவி’ (1951) படம்தான் எஸ்.வி.ரங்காராவ் நடித்து அறிமுகமான முதல் தமிழ்ப் படம். இதில் மந்திரவாதியாக வேடமேற்று நடித்தார்.
‘மாயாபஜார்’ படத்தில் கடோத்கஜனாக காமெடி கலந்த வேடத்தில் நடித்தார். ‘சம்பூர்ண இராமாயணம்’ படத்தில் இராவணனாக நடித்தார். ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் வாடகைக்கு வருபவர்களிடமும் பாசம் காட்டும் வீட்டு உரிமையாளர் வேடத்தில் நடித்தார். ‘கற்பகம்’ படத்தில் அப்பாவாகவும், நல்ல மாமனாராகவும் இருமாறுபட்ட தோற்றத்தில் நடித்தார். நானும் ஒரு பெண் படத்தில் கருமைநிறம் கொண்ட மருமகளை வெறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் தவிக்கும் நல்ல மாமனாராக நடித்தார். ‘கைகொடுத்த தெய்வம்’ படத்தில் வெகுளிப்பெண் (சாவித்ரி)யை பெற்றெடுத்துவிட்டு அவஸ்தைப்படும் தந்தையாக நடித்திருந்தார். ‘அன்னை’ படத்தில் நடிப்பின் இலக்கணம் பி.பானுமதிக்கு ஜோடியாக நடித்தார். ‘எங்கள்வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆரின் மாமனாராக நடித்தார். ‘படிக்காத மேதை’ படத்தில் உலகம் தெரியாத ஒரு அப்பாவி மனிதனுக்கு அன்பைக் காட்டும் மாமாவாக நடித்தார். ‘நீதிக்குப்பின் பாசம்’ படத்தில் கௌரவமான உயர் போலீஸ் அதிகாரியாகவும், பிள்ளைகளுக்கு பிரியமான தந்தையாகவும், மனைவிக்கு அன்பான கணவனாகவும், வேறுபாடுகளைக் காட்டி நடித்தார். ‘கண் கண்ட தெய்வம்’ படத்தில் தன்னைச் சார்ந்து வாழும் அன்பான தம்பிக்கு நல்ல அண்ணனாகவும், அவரது குடும்பத்திற்கு பாதுகாவலராகவும் நடித்திருந்தார்.
‘அன்னை இல்லம்’ படத்தில் சிவாஜிக்கு தந்தையாகவும், மனைவி எம்.வி.ராஜம்மாவிற்கு நல்ல கணவராகவும் நடித்திருந்தார். விஜயா சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர்.நடித்த ‘நம்நாடு’ படத்தில் எம்.ஜி.ஆருடன் மோதும் வில்லனாகவும், ‘ராஜா’ படத்தில் கொடூரமான வில்லனாக சிவாஜியுடன் மோதுபவராகவும் நடித்திருந்தார். இப்படி பலபடங்களில் பல்வேறு விதமான வேடங்களை ஏற்று தனது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றார் எஸ்.வி.ரங்காராவ்.
இன்றுவரை இவரது குரலையும் பாவனையையும் பலகுரல் கலைஞர்களால் ‘மிமிக்ரி’ செய்ய முடியாதது ஒன்றேபோதும் இந்த மாபெரும் கலைஞனின் தனித்துவத்தைச் சொல்ல. ஒரே ஒருவர் என்ற பொருள்பட ‘ஒக்கே ஒக்கடு’ என விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருசேரப் பாராட்டும் ரங்கா ராவ், நடிப்புலகில் சாதிக்க நினைப்பவர்களுக்கு மிகச் சிறந்த பள்ளிக்கூடம். ஆறடிக்கும் மேலான தோற்றம், சரித்திர வேடங்களைத் தாங்கும் கம்பீரம், பேசும் கண்கள், யாரையும் பின்பற்றாத பாணி , நாடகத்திலிருந்தது வந்தாலும் இயல்பான நடிப்பு, நவரசங்களிலும் வெளிப்பட்ட திறமை என்பவை இவரின் சிறப்புகளை இன்று ஆந்தை சினிமா அப்டேட்ஸ் நினைவு கொள்கிறது
From The Desk of கட்டிங் கண்ணையா!