இமாலயச் சாதனையாளர் ஸ்ரீவத்சன்||காலச்சக்கரம் சூழல்கிறது-19

 இமாலயச் சாதனையாளர் ஸ்ரீவத்சன்||காலச்சக்கரம் சூழல்கிறது-19

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை. அவர் தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

“ஸ்ரீவத்சன் மிகப்பெரிய ஆடிட்டராகப் பதவி வகித்தாலும் அவரது சிந்தனை எல்லாம் இயல், இசை, நாடகத்தின் மேல்தான் சென்று கொண்டிருந்தது. நல்ல கருத்துள்ள நாடகங்களை எழுதவேண்டும் எனும் எண்ணமும், நாடகத்தின் மேலுள்ள அக்கறையினாலும்தான் ‘டம்மிஸ்’ என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை தொடங்கி அதன் ஸ்தாபகராகவும், தரமான ஒரு நாடக ஆசிரியராகவும், இயக்குநராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவர், நாடக உலகில் தற்போது ஒரு முற்போக்கு எழுத்தாளர்.

குழுவின் பெயர் ‘டம்மிஸ்’ என்று இருந்தாலும் படைக்கப்பட்ட அனைத்து நாடகங்களுமே Bright ஆனவை. இதில் வினோதய சித்தம், அதிதி, சியாமளம், பயணம், கனவு மெய்ப்பட போன்ற நாடகங்களே அதற்குச் சான்று.

கடந்த 25 ஆண்டுகளாக நாடக மேடையில் பயணித்து வரும் இவர், இதுவரை 50 நாடகங்களை எழுதி, இயக்கியிருப்பது இன்றைய நாடக மேடை சூழ்நிலையில் ஒரு இமாலய சாதனை.

ஸ்ரீவத்சன் உருவத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் உயர்ந்தவர். எனக்குத் தெரிந்தவரை இவரது குழுவிற்கு இது வெள்ளி விழா, நாடக எண்ணிக்கையிலும் இது பொன் விழா, வைர விழாவையும் நன்றாகவே நடத்தும் நெஞ்சுரம் படைத்தவர்.

மற்ற நாடகக் குழுவினர்கள் எல்லாம் ஒரு மாலைப்பொழுதை நன்கு பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டால் இவர்கள் எல்லாம் ஸ்ரீவத்சன் நாடகம் இருந்தால் அங்கு தான் செல்வார்கள். இவரது டம்மிஸ் நாடகக் குழுவின் கேப்டனாகவும், குணச்சித்திர நடிகராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்ரீதர் பாராட்டுக்குரியவர்.

நடிப்பிலும் சரி, அனுபவத்திலும் சரி, ஸ்ரீ வத்சனுக்கு நிகர் அவரே. குழுவில் உள்ள அனைத்து நடிகர்களுமே நடிப்பில் சளைத்தவர்கள் அல்ல.

‘பயணம்’ நாடகத்தைப் பார்த்தது முதல் நான் ஸ்ரீவத்சன் அவர்களின் ரசிகன் ஆனேன். ஒரு நாடகக் குழுவை வழி நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு நல்ல நாடகத்தை எழுதுவது என்பதும் எளிதல்ல. நல்லதொரு நாடகக் குழு என்று பெயர் எடுப்பதுதான் பெருமை. அந்தப் பெருமையை டம்மிஸ் பெற்றிருக்கிறது.

சிறந்த எழுத்தாளர் என்ற முறையில் நான் என்றென்றும் போற்றுவது ஸ்ரீவத்சனைத்தான்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...