மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை  வழங்கும் பள்ளி 

 மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை  வழங்கும் பள்ளி 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பயின்றுவரும் இளம் வயது மாணவர்களுக்குக் கல்வியை அனுபவத்தோடு கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

கற்றலை அனுபவத்தோடு கற்கும்போது வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் மறக்காது. வாழ்க்கையில் என்றுமே மறக்கக் கூடாது என்ற நோக்கில்தான் வாழ்க்கைக்குத் தேவையான இடங்களுக்குக் களப்பயணம் அழைத்துச் செல்கின்றனர்.
களப்பயணம் அழைத்துச் செல்வது தொடர்பாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் கூறியதாவது:

கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு களப்பயணம் செல்லுதல் :

“மாணவர்கள்  களப்பயணம் செல்லும்போது  நேரடியாக வாழ்க்கைக்கான கற்றலைத் தெரிந்து கொள்கின்றனர். எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து முடித்துச் செல்லும் மாணவர்கள் அதன் பிறகு குடும்பம் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகப் படிக்கக்கூடிய சூழ்நிலை இல்லாததால் 10ம் வகுப்பு, 12ம் வகுப்புக்குப் பின்னர் படிப்பார்களா என்று தெரியாத நிலை இருந்தது.

இதனைக் கருத்தில்கொண்டு தேவகோட்டையில் உள்ள ஆனந்தா  கலை மற்றும் அறிவியல் கல்லுரிக்கு மாணவர்களை அழைத்துச் சென்று இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நூலகம் என அனைத்தையும் நேரில் பார்த்த பிறகு அவர்கள் நிச்சயமாக  இந்தக் கல்லூரியில் படிப்பேன் என்கிற நோக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் கல்லுரிப் படிப்பு படிப்போம் என்கிற குறிக்கோளை ஏற்படுத்திக்கொள்ள களப்பயணம் உதவியாக உள்ளது.

கல்லூரிக் களப்பயணத்தில் பேராசிரியர்களிடம் மாணவர்கள் தொடர்ந்து கேள்விகள் கேட்டு பதில்கள் பெறும்போது அவர்களது கல்வி அறிவு மேம்படுகிறது. பள்ளியில் புத்தகத்தை மட்டுமே படிக்கும் மாணவர்களுக்கு இது புதிய அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் பொருளாதாரத்தில் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் இது போன்று கல்லூரிகளுக்கு அழைத்து வரும்போது அவர்கள் பிற்காலத்தில் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஒரு குறிக்கோளாக உண்டு பண்ண வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.”

காவல் நிலையம் – களப்பயணம் செல்லுதல் :

 காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காவல் நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் விரிவாக விளக்கப்பட்டது.

அஞ்சல் அலுவலகத்துக்கு களப்பயணம் :
“அஞ்சல் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுவந்த பிறகு மாணவி ஜெயஸ்ரீயின்  தாயார்  பள்ளிக்கு நேரில் வந்து “சார் அஞ்சல் அலுவலகத்தில் என் மகள் என்னை அழைத்துச் சென்று படிவங்கள் பூர்த்தி செய்து மேலாளர் இவர்தான் என்று கூறி அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்து கணக்கு துவக்கி கொடுத்தார்” என்று சொன்னபோதுதான் களப்பயணத்தின் நன்மை தெரிந்தது.”

SBI வங்கிக்கு களப்பயணம் :
“வங்கிக்கு அழைத்துச் சென்று நேரில் விளக்கியபோது கல்லுரிப் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு கூட வங்கிப் படிவம் பூர்த்தி செய்ய தெரியாத நிலையில் உள்ள போக்கை மாற்றி மாணவர்களுக்கு  வங்கி தொடர்பான கிரீன் கார்டு பெறுதல், ATM மெஷினைப் பயன்படுத்தி பணம் எடுத்தல், ஸ்வைப் மெஷின் பயன்படுத்துதல் என்பது உட்பட எளிதாகப் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறோம்.”

அரசு தோட்டக்கலை பண்ணைக்கு களப்பயணம் சென்று விவசாயம் அறிந்து கொள்ளுதல் :

“அரசு தோட்டக்கலை பண்ணைக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்துச் சென்று பதியம் இடுதல், டிராக்டர் ஓட்டுதல், வேளாண்மை தொடர்பான அடிப்படை அறிவை தொடர்ந்து பண்ணை சுற்றுலா மூலம் வளர்த்து வருகின்றோம்.”

பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு களப்பயணம் செல்லுதல் :

“பாஸ்போர்ட் அலுவலத்துக்கு மாணவர்களை அழைத்துச் சென்று பாஸ்போர்ட் எடுப்பது தொடர்பான அடிப்படை அறிவை விரிவாக விளக்கி நேரடி கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தி வருகின்றோம்.”

ரேடியோ நிலையம் அழைத்துச் செல்லுதல் :

“அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலி நிலையத்துக்கு மாணவர்களைத் தொடர்ந்து அழைத்துச் சென்று நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.”                                          

இது போன்று இன்னும் பல இடங்களுக்குத் தொடர்ந்து அழைத்துச் செல்கிறோம். இவ்வாறு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தெரிவித்தார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...