வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா

 வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா

காலச்சக்கரத்தில் சுழல்கிறது – 17

நாடகம் சினிமா என பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் காலச்சக்கரம் சுழல்கிறது என்கிற தொடர் மூலம் இங்கே பதிவு செய்கிறார்.

வீர சாவர்கர் எழுதியிருந்த ஒரு சம்பவத்தை மிக அருமையான சிறுகதையாக எழுதியிருந்தார் மணிக்கொடி ஆசிரியராக இருந்த பி.எஸ். ராமையா அவர்கள்.

தற்போது அவர் இந்த உலகில் இல்லை என்றாலும் அவரது புகழ் இன்றும் பட்டொளி வீசிப் பறக்கிறது என்பதுதான் உண்மை.

பாரதியார் அவர்களின் பாஞ்சாலி சபதத்தை நாடகமாக்கம் செய்து நல்லதொரு தாக்கத்தை எழுத்தாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியவர் அல்லவா..  நாடகமாகவும் பிறகு திரைப்படமாகவும் வெளியிடப்பட்ட போலீஸ்காரன் மகள் இவர் எழுதிய படைப்புதான்!

நம் நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலக் களம் அமைத்த காலம். 1857ஆம் ஆண்டு இந்திய வரலாற்றின் முக்கியமான காலகட்டம். வெள்ளையர் வரலாற்று ஆசிரியர்களால் (The Soldier Mutiny), சிப்பாய் கலகம் என்று கொச்சைப்படுத்தப்பட்ட The first war  Independence என்று இந்தப் போராட்டத்தைப் பற்றி வீர சாவர்க்கர் தன் எண்ணத்தைப் பல வரிகளில் எழுதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் உன்னதப்படுத்திய வீர வரிகள் பல உள்ளன. இவைகளை எல்லாம் மையப்படுத்தி பி.எஸ்.ராமையா அவர்களால் எழுதப்பட்ட ஒரு சிறுகதைதான்  ‘வீராச்சாமி கௌஷிக்’. இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவென்றால் காசிக்குச் செல்லும் ஒரு வயதான தம்பதிக்கு உதவியாகச் செல்கிறான் அவர்களது பக்கத்து வீட்டு பையன் வீராச்சாமி. அது யுத்தம் வந்த சமயம்.

அந்த யுத்தத்தில் வீராச்சாமி பலரையும் காப்பாற்றியதில் அந்த வடநாட்டு பிரதேசத்தில் அவன் பெயர் மிகவும் புகழ்ந்து பேசப்படுகிறது.

ஒருநாள் வெள்ளையர்களின் துப்பாக்கிக்கு வீராச்சாமியும்  பலியாகிறான். அவன் செய்த தியாகத்திற்கு கைமாறாக அவனது நினைவைப் போற்றும் வகையில் பல அங்காடிகளில் உள்ள எல்லா கடைகளுக்குமே வீராச்சாமி கெளசிக் கடை என்று பெயர் சூட்டி மகிழுந்து இருக்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

வானொலியில் தயாரான இந்த நாடகத்தைத் தயாரிப்பாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றிய T.K. அஷ்வினிகுமார் அவர்களின் முயற்சியில் ‘கதைக் களஞ்சியம்’ எனும் தலைப்பில் தயாரான இந்த நாடகத்தில் திருமதி. M.N. ராஜம், V.S. ராகவன், P.R. துரை போன்ற பலரும் நடித்து B.S. ராமைய்யாவின் கதைக்குத் தங்கள் நடிப்பால் உயிரூட்டினார்கள். இந்த நாடகத்தை மட்டும் அல்லாமல் சுமார் 70 நாடகங்களை ஒலிபரப்பிய பெருமை சென்னை வானொலிக்கு உண்டு.

அதில் Dr. லஷ்மி, சிவசங்கரி, ஜெயகாந்தன், பேரறிஞர் அண்ணா, கலைஞர், மூதறிஞர் ராஜாஜி, தி. ஜானகிராமன், அனுராதா ரமணன் போன்ற பலரது சிறுகதைகளும் பல எழுத்தாளர்களால் நாடகமாக்கம் செய்யப்பட்டு ஒலிபரப்பாகிய அக்காலம் – ஆம் அது ஒரு பொற்காலம்.

சுமார் 70 எழுத்தாளர்கள் இந்தச் சிறுகதைகளை நாடகமாக்கம் செய்து உரையாடலை எழுதியுள்ளார்கள்.

(தொடரும்)

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...