மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்

 மனைவியைச்  சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்

மனைவி ஊருக்குப் போனாலே பெரிய விடுதலை கிடைத்த மாதிரி கணவன் புலகாங்கிதமடையும் இந்நாளில் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து மறைந்தாலும் மனைவியின் நினைவை மறக்கமுடியாமல் அவரை சிலையாக வடித்து வைத்து மனமகிழும் கணவன்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக இங்கே பல கணவன்மார்கள் உள்ளனர். அவற்றில் சில இங்கே.

ஷாஜஹான் அன்று காதலிக்காக நினைவுச்சின்னம் எழுப்பினார். நாராயணன் என்பார் இன்று மனைவிக்காக 9 லட்சத்தில் சிலிகான் சிலை வடித்துள்ளார் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

சிவகாசி நேஷனல் காலனியைச் சேர்ந்த தொழிலதிபர் 70 வயது நாராயணன்.  இவரின் மனைவி ஈஸ்வரி எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தனிமையில் இருந்த நாராயணன் மனைவியின் நினைவாகவே இருந்துள்ளார். இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

அவர்கள் தன் தாயின் மறைவின் ஏக்கம் தந்தைக்கு வராமல் இருக்க சிலிக்கானில் சிலை செய்ய பெங்களூரு தனியார் நிறுவனத்திடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரியைப் போல் சிலை செய்ய ஆர்டர் கொடுத்தார்கள். அது செய்யப்பட்டு அவரது நினைவு நாளான மே 23 அன்று வீட்டில் அமைத்து விழா எடுத்தார் நாராயணன்.

இந்த விழால் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.  எளிதில் தூக்கிச் செல்லும் வகையிலான அந்தச் சிலையை வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் வாசலில் 2 லட்ச ரூபாய் செலவில் மனைவி ஈஸ்வரியின் வெங்கலச் சிலையையும் செய்து வைத்துள்ளார்.
“என் மனைவி எப்போதும் என்னுடனே இருக்கிறார் என்கிற எண்ணம் தோன்றுவதற்காகவும் எங்கள் வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களிலும் மனைவி நேரில் பங்கேற்கிறார் என்கிற எண்ணம் வரவேண்டும் என்பதற்காகவும் இந்த எண்ணம் தோன்றியது. அதனால் இந்தச் சிலைகளைச் செய்து வைத்துள்ளேன். இப்போதுதான் எனக்கு மன நிம்மதியாக இருக்கிறது” என்கிறார் 70 வயது நாராயணன்.

நாராயணனின் மனைவி பாசத்தைப் பார்த்து இணையவாசிகளால் நவீன கால ஷாஜஹான் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார் நாராயணன்.

இதேபோல் மனைவிக்காக சிலிக்கான் சிலை வடித்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீநிவாச குப்தா.

கொல்கத்தாவில் துசார்ட் பகுதியில் வசித்து வருபவர் 65 வயதாகும்  தாபஸ். இவருடைய மனைவி இந்திராணி. இவர்  ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். தம்பதிகள் இருவரும் இஸ்கான் கோவிலில் தரிசனத்திற்கு சென்றபோது ஒருவேளை தான் உயிரிழந்தால் இந்த கிருஷ்ணர் சிலை போல் தன்னை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து 2021ல்  கொரோனாவால் உயிரிழந்தார்.  மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சிலை சிலிக்கானால் வடிவமைக்க வேண்டும் என கேட்டார். இதில் சுபிமல் தாஸ் என்ற சிற்பி சிலிக்கான் சிலையை செய்ய ஒப்புக்கொண்டார்.

இறுதியில் மனைவியின் ஆசைப்படியே 30 கிலோ எடையில் ரூ.2.50 லட்சம் செலவில் இந்திராணியின் சிலிக்கான் சிலை உருவாக்கப்பட்டது. இந்திராணியின் சிலை தாபஸ் வீட்டு வராண்டாவில் சோபாவில் உட்கார்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேல பொன்னநகரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சேதுராமன் (வயது 74) என்பவர், தனது மனைவி இறந்த 30-வது நாளில் அவருக்காக வீட்டிலே தத்ரூபமாக சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார்.
சேதுராமன் மனைவி பிச்சைமணி அம்மாள் (வயது 68) கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கணவன், மனைவியாக இருவரும் 48 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டார்.

சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியை அடுத்த கிளாக்காடு என்னும் இடத்தைச் சேர்ந்தவர் இருசன். இவருக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் நீலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவரது மனைவி நீலாவை இரவு நேரத்தில் பாம்பு ஒன்று கடித்து அதன் மூலம் அவர் உயிரிழந்து போயுள்ளார். மனைவியின் பிரிவால் அதிக மன உளைச்சலிலும் இருசன் இருந்து வந்துள்ளார். இதனால் வீடு ஒன்றைக் கட்டிய இருசன் வீட்டின் வரவேற்பு அறையில் தனது அன்பான மனைவிக்கு சிலை ஒன்றையும் வைத்துள்ளார்.

இறந்த மனைவியை மறக்காமல் இருக்க சிலை வைத்துப் போற்றும் கணவன்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...