பிரபாகரன் எனும் பேராளுமை ||காலச்சக்கரம் சுழல்கிறது-16

 பிரபாகரன் எனும் பேராளுமை ||காலச்சக்கரம் சுழல்கிறது-16

நாடகம் சினிமா என பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் காலச்சக்கரம் சுழல்கிறது என்கிற தொடர் மூலம் இங்கே பதிவு செய்கிறார்.

பல வருடங்களுக்கு முன் புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் பல புதுமுகங்கள் அறிமுகமானார்கள். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இந்தப் படம் நகைச்சுவை திரைப்படங்களுக்கு ஒரு புதிய பரிணாமமாக ஒளி வீசியது. அதற்காக உழைத்த ஸ்ரீதர் அவர்களையும், சித்ராலயா கோபு அவர்களையும் நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அந்தப் படத்தில் “யோவ் படம் எடுக்கிறேன்! படம் எடுக்கிறேன்னு சொன்னியே என் பொண்ணை போட்டோவாது எடுத்தியா?” எனும் உரையாடல் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தவர்தான் நகைச்சுவை நடிகர் S.பிரபாகர் அவர்கள்.

இவரது நடிப்புத் திறமையைப் பார்த்து வியந்த பாரதி கலைஞர் எஸ்.வி.சகஸ்ரநாமம், “தொழில் முறை நடிகராக உனக்கு விருப்பம் இருந்தால், நீ எனது சேவா ஸ்டேஜ் தயாரிக்கும் நாடகங்களில் நடிக்கலாம்” என்று நாடகமேதை எஸ்.வி.சகஸ்ரநாமம் சொன்ன உடனே பிரபாகர் அவர்கள் சேவா ஸ்டேஜ் நாடக குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார்.

அவரது நகைச்சுவை நடிப்பு ‘போலீஸ்காரன் மகள்’ நாடகத்திற்கு கதை, வசனம், எழுதிய பி.எஸ்.ராமைய்யா அவர்களையே வியக்க வைத்தது.

தி.ஜானகிராமனின் ‘வடிவேல் வாத்தியார்’ நாடகத்தின் மூலமாக பிரபாகர் மேடையில் பிரபலமானார். அதில் அவர் ஒரு ஆங்கிலோ இந்தியர் ஆக கேப்ரியல் எனும் பாத்திரத்தில் நடித்து எல்லோரது பாராட்டையும் பெற்றார்.

அது சமயம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கதை, வசனம் எழுதி இயக்கிய ‘உன்னைப் போல்  ஒருவன்’ திரைப்படத்தில் கிளி ஜோசியக்காரர் வேடத்தில் கதாநாயகனாக பிரபாகர் நடிக்க, அவருக்கு ஜோடியாக காந்திமதி நடித்தார். A.K.வீராச்சாமி, மணிநாதன், M.G.முருகன் போன்ற சேவா ஸ்டேஜ் நாடக மன்றத்தின் நடிகர்களே முழுக்க முழுக்க நடித்த அந்தப் படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

முன்னாள் நீதி அரசர் அமரர் K.S.பக்தவச்சலம் அவர்கள் பிரபாகருக்காகப் அவரது முன்னேற்றத்தைக் கருதி இந்திரா தியேட்டர்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு நாடகக் குழுவை தொடங்கி, அதில் முதல் நாடகமாக தாமரை மணாளன் எழுதி பிரபாகர் இயக்கி நடிக்க ‘தட் மேன் ஃபிரம் பூந்தமல்லி’ என்ற நாடகம் அரங்கேறியது.

அதில் ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்தார். பிரபாகர் ரவிச்சந்திரனுடன் இணைந்து அன்றைய நகைச்சுவைக்கு உயிரூட்டினார் என்பது நாடக வரலாறு.

அதற்குப் பிறகு ஆங்கில நடிகர் Jerry Lewis நடித்த  THE NUTTY PROFESSOR எனும் படத்தின்  கதையை மையமாக வைத்து ‘பார்த்த ஞாபகம் இல்லியோ?’ என்ற நாடகத்தை அரங்கேற்றிய பிரபாகர், ஒரு Professor கண்டுபிடித்த மருந்தைக் குடித்தால் அதன் விளைவு என்ன என்பதை மிகவும் துல்லியமாகக்  காட்சிகளை அமைத்து, உரையாடலையும் எழுதியிருந்தார்.

அந்த சயன்டிஸ்ட் கண்டுபிடித்த மருந்தைக் குடிக்க ஒரு ஆளைக் கண்டுபிடித்து அது சக்சஸ் ஆகிறதா என்று பார்க்க வேண்டுமே அதற்காக அழைத்து வரும் நபர்தான் பார்க்க அகோரமாக இருக்கும் ரவிச்சந்திரன்.

அந்த மருந்தைக் குடிக்கும்போதுதான் அழகாக மாறவேண்டும் என்று எண்ணியபடியே மருந்தை குடிக்கிறான். அழகாக ஒரு ஹீரோ போல் மாறுகிறான், அதுதான் ரவிச்சந்திரன்.

அடுத்து அந்த மருந்தைக் குடிக்க வேறு ஒருவரை அழைத்து வருகிறார்கள். அவன் நாய் வளர்ப்பதில் மிகவும் விருப்பமானவன். அந்த மருந்தை அவன் குடிக்கும்போது நல்லதை நினைக்காமல் நாயை நினைத்துக்கொண்டே குடிக்கிறான். அவசரத்தில் அந்த Scientist ஒரு மருந்தை கலக்க மறந்து விடுவதால் அந்த மருந்தைக் குடித்த பிரபாகர் நாயாக மாறுகிறார். உருவம் மட்டும் மாறவில்லை. மனித உருவமாகவே இருக்கிறது. நாயின் குணங்கள் எல்லாம் அப்படியே பிரபாகரருக்கு வந்துவிடுகிறது.

கடைசிவரை நாயாகவே நடிக்கிறார். நாய் பிரபாகர் என்று சொல்லும் அளவிற்கு அவர் நடிப்பு அமர்க்களமாக இருந்தது.

எல்லாவற்றிற்கும் சிகரமாக 1968ஆம் ஆண்டு சினிமா நாடகங்களைக் கிண்டல் செய்து ‘லட்சங்காலத்துப் பயிர்’ என்ற நாடகத்தை எழுதி, இயக்கி அதில் கதாநாயகியாகவும் (ஹீரோயின்) நடித்த பிரபாகர் ஒரு Veteran Artist தான். அந்த நாடகத்தைப் பார்த்த சோ அவர்கள்  “பிரபாகர் நீ ஒரு கிரேட் ஆர்டிஸ்டா” என்று சொல்லியது பிரபாகருக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டு தான். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்பது இதுதானோ!

‘லட்சங்காலத்துப் பயிர்’ நாடகத்தில் பல புதுமைகள் (Experimental) கையாளப்பட்டன. அதில் எழுதிய புதுமைகள் என்னவென்றால் கதாநாயகன்

இடைவேளையில் இறந்துவிடுகிறான். இது யாரும் செய்யாத ஒரு புதுமை.

கதாநாயகன் இல்லாமல் எந்த ஒரு கதாபாத்திரமும் இயங்க முடியாது என்பதை அந்த ஆசிரியர் உணர்ந்து ஒரு புதுமை செய்கிறார். அது என்னவென்றால் நாடகத்தை Reverse-ல் கொண்டுசெல்கிறார்.

Hero உயிர்ப்பெற்று எழுகிறான், நாடகம் தொடர்ந்து நடக்கிறது. இதில் பிரபாகர் கதாநாயகியாகவும், A.K. வீராச்சாமி தந்தையாகவும், கம்பர் ஜெயராமன் கதாநாயகனாகவும், சண்முகசுந்தரம் வில்லனாகவும், T. வெங்கட்ராமன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சந்திரமோகன் போன்ற பலரும் நடித்த இந்த நாடகத்தில் இந்தக் கட்டுரையை எழுதும் P.R துரை ஒண்ணரை வயது குழந்தையாகவும் நடித்த ஒரு கிண்டலான (சட்டையர்) நாடகம். அதே சமயத்தில் பல புதுமைகளையும் கையாண்டது.

பிரபாகர் பல படங்களில் நடித்துள்ளார். V.S.ராகவன் நாடகக் குழுவில் ‘இரு வீடுகள்’ என்ற நாடகத்தில் பிரபாகர்தான் கதாநாயகனாக நடித்தார். பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய படம் K. பாலச்சந்தரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’. உண்மையிலேயே  அவருடைய மரணம் கலையுலகிற்கு ஒரு பெரிய இழப்புதான்.

NB :- Nutty Professor எனும் படத்தை எழுதி, இயக்கி ஹீரோவாகவும் நடித்தவர் Jerry Lewis என்பதை இதில் பதிவு செய்வதில் எனக்கு பெருமையே. நான் என்றென்றும் போற்றிப் புகழ்வது கதாசிரியர் பிரபாகர் அவர்களைத்தான். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Online ல் உள்ள என்னுடைய அங்கீகாரம் எனும் நூலைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

கலைமாமணி P.R. துரை

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...