பயராமனும் பாட்டில் பூதமும் | 10 | பாலகணேஷ்

 பயராமனும் பாட்டில் பூதமும் | 10 | பாலகணேஷ்

ஜீனி திகைத்தது. ‘ழே’யென்று விழித்தது. அதற்குள் இங்கே விபரீதம் அரங்கேறத் தொடங்கியிருந்தது.

“அப்பா… எனக்கு என்னாச்சு..? இந்தத் தடியன் உடம்புக்குள்ள நான் எப்டி வந்தேன்..?” என்று அலறியபடி சங்கரனிடம் ஓடினாள் குமார்.

“ராஸ்கல், தடியன் கிடியன்னு சொன்னே பிச்சுப்புடுவேன். மரியாதை கெட்டவளே..” என்றபடி அவனைத் துரத்தினான் நிஷா.

“சரி, மரியாதையாவே சொல்றேன். அப்பா, இந்தத் தடியர்ர்ர் உடம்புக்குள்ள நான் எப்டி வந்தேன்னு சுத்தமாப் புரியல. காப்பாத்துங்க..” என்றபடி சங்கரனிடம் அண்டினாள் குமார்.

“யோவ் மாப்ள… என்ன வேலையய்யா பண்ணி வெச்சிருக்க..? ஏதோ சாமியாராயி ஊர் ஜனங்களோட விளையாடுவேன்னு பாத்தா, என்கிட்டயேவா..? என் மகளை மறுபடி சரியாக்கிக் குடு. இல்லன்னா, பிச்சுப்பிடுவேன் பிச்சு..” என்று அலறினான் சங்கரன்.

“இதப்பாரு கிங்கரா… ச்சே, சங்கரா… நான் ஒண்ணுமே செய்யலை. உன்னைய மாதிரித்தான் நானும் குழம்பிட்ருக்கேன். டேய் பிரதாபா… என்னடா இது.?” என்று ஜீனியைப் பார்த்துக் கத்தினான் ஜெயராமன்.

சலாமடித்தது ஜீனி. “மன்ச்சுக்க வாத்யாரே… நான் எதுவும் செய்யலை. தோ, இந்த மோகினிப் பிசாசோட கைங்கர்யம்..” என்று அருகில் கை காட்டியது.

‘கிக்கிக்கி’யென்று சிரித்தது மோகினி. “இந்தப் பிரதாபனை என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம்னு சொல்ல வெய்யிங்கய்யா. உடனே சரி பண்ணிடறேன்” என்றது.

“அட, சரின்னு சொல்லித் தொலையேன்டா” என்று கத்தினான் ஜெ.

“அதுசெரி… உனக்கென்ன, நீ பாட்டுக்குச் சொல்லிடுவ. நான்ல்ல மாட்டிக்கிட்டு அவஸ்தைப்படணும்..? வேற ஏதாச்சும் கேளு தலீவா, தர்றேன்”

பரிதாபமாக சங்கரனைப் பார்த்தான் ஜெ. அவன் முகத்தில் கோபம் டாஸ்மார்க்கின் சேல்ஸ் போல வினாடிக்கு வினாடி ஏறிக் கொண்டிருந்தது.

“யோவ் மாப்ள, என்னய்யா நீயாப் பேசிக்கற.? மேல பாத்து ஏசிக்கற. என்னதான்யா நடக்குது..?”

“ஸ்வாமிகள் ஏதோ புதுசாத் திருவிளையாடலை ஆரமிச்சிருக்கார். சுவாரஸ்யமா இருக்கில்லடி..” என்றாள் வேடிக்கை பார்க்க வந்திருந்த ஒருத்தி.

“இருக்கும், இருக்கும். உன் பொண்ணைக் கூட்டிட்டு வா. ஸ்வாமிகள் விளையாடட்டும் அவளோட. அப்ப பேசறியான்னு பாக்கறேன்..” என்று அவள்மீது பாய்ந்தான் சங்கரன்.

“சங்கரா, இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லடா. நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்ருக்க..” என்று ஏதோ சொல்ல வந்த ஜெயராமனைத் தடுத்தான் சங்கரன். “ஓகோ… உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா மாப்ள..? ரைட்டு. இதை எப்டி டீல் பண்ணிக்கணுமோ, அப்டி நான் டீல் பண்றேன், இருங்க..” என்றவன், நிஷாவிடம் திரும்பி, “நீ கொஞ்சம் அமைதியா இரும்மா. நான் பாத்துக்கறேன்.” என்றான்.

“என்னத்தைப் பாத்துக்கப் போறீங்க அங்க்கிள்..?” என்றான் நிஷா.

“ஓ… மறந்துட்டேன்..” லேசாக அசடுவழிந்தபடி குமாரின் பக்கம் திரும்பினான். “நீ கவலைப்படாம இரும்மா. நான் என்ன செய்யறேன்னு மட்டும் பாரு…” என்று ஆறுதல் சொன்னவன், சட்டென்று வீட்டைவிட்டு வெளியேறினான்.

“ஐயையோ… எங்கண்ணன் கோவிச்சுக்கிட்டுப் போய்ட்டாரே.. என்னங்க, உங்க சாமியார் விளையாட்டெல்லாம் போதும். ஏதாவது செஞ்சு பழைய மாதிரி ஆகற வழியப் பாருங்க. இல்லன்னா நான் பொல்லாதவளாய்டுவேன்” என்று கத்தினாள் தனலட்சுமி.

“நீ வேற கோவிச்சுக்காத கஜலட்சுமி, என் நிலைமை புரியாம..”

“யோவ் மாப்ளை…” என்ற குரலுக்கு அதிர்ந்து திரும்பினான். மாமியார்க்காரியான மைதிலிப்பாட்டி கடுப்புடன், “என் பொண்ணு கேக்கறதுல என்னய்யா தப்பு..? புள்ளப்பூச்சியாட்டம் ஒழுங்கா இருந்த நீயி, ஏதோ மாயமந்திரம் கத்து வெச்சுக்கிட்டு இப்ப பேயாட்டம் ஆடிட்ருக்க. இதெல்லாம் நல்லால்ல…”

“இப்ப என்ன பண்ணனும்ங்கறீங்க..?”

“நிப்பாட்டணும். எல்லாத்தையும் நிப்பாட்டணும்..” என்றாள் மணிரத்னத்தின் கதாநாயகி போல.

“முடியாது. என்னால முடியாது.” என்றவன் மேலே நிமிர்ந்து பார்க்க, ஜீனி மட்டும் இருந்தது. அருகில் மோகினியைக் காணோம். “அடேய், மோகினி எங்கடா..?”

ஜீனியும் அப்போதுதான் கவனித்தது. “அவ வந்த வேலைய முடிச்சுட்டு ஓடிட்டா போலருக்கு தல. நான் போய் அவ கைல கால்ல விழுந்தாவது சமாதானம் பண்ணிக் கூட்டிட்டு வரேன்.. கொஞ்சம் சமாளிச்சுக்க..” என்றபடி அதுவும் எஸ்ஸாகிப் பறந்தது.

என்ன செய்வதென்று புரியாமல் விழித்தபடி, ஜெயராமன் திரும்பி, மனைவியையும் மாமியாரையும் பார்க்க, அவர்கள் மறுபடி கத்த, கூடியிருந்தவர்கள் ஆளுக்காள் பேசத் தொடங்க… ரகளை. ஏக ரகளை.

சத்தம் தாங்காமல் ஜெ. காதுகளைப் பொத்திக் கொண்ட அதே நேரம், வீட்டு வாசலில் வந்து நின்றது அது. போலீஸ் ஜீப்! சங்கரன் இறங்கிவர, அவனுக்கு எஸ்கார்ட்டுக்கு வந்ததுபோல கூடவே ஒரு இன்ஸ்பெக்டரும் மூன்று கான்ஸ்டபிள்களும் பின்னால் நடந்து வந்தார்கள்.

“இவர்தான் இன்ஸ்பெக்டர்..” என்று கை காட்டினான் சங்கரன்.

“டேய் சங்கரா, இதெல்லாம் அநியாயம்டா. குடும்ப சமாச்சாரத்துக்குப் போய் போலீசைக் கூட்டிட்டு வந்துருக்கியேடா. நியாயமா..? அதுல பாருங்க இன்ஸ்பெக்டர் சார்…”

“வடிவேல்..” உறுமினார் அந்த உயரமான இன்ஸ்பெக்டர். “க்வார்ட்டர் வடிவேல்…”

“என்னங்க..?” என்றான் புரியாமல்.

“ஐயாவோட பேருங்க அது. அதை எப்பவும் இப்டித்தான் பல்லைக் கடிச்சுக்கிட்டு கம்பீரமா சொல்லுவாரு.” என்றார் பின்னால் நின்ற கான்ஸ்.

“க்வார்ட்டர் வடிவேல்ன்னு ஒரு பேரா..? ஏதோ ரவுடி பேர் மாதிரில்ல இருக்குது..” அந்த சூழ்நிலையிலும் தன்னை மறந்து சிரித்தான் ஜெயராமன்.

“சிரிக்கற.? இந்த க்வார்ட்டர் வடிவேலைப் பார்த்துச் சிரிக்கற..? என் பேருக்கு என்ன காரணம்ங்கறதை அப்பறம் சொல்றேன். இப்ப… கான்ஸ்டபிள்ஸ், அரெஸ்ட் ஹிம். ஸ்டேஷன்ல வெச்சு மிச்சத்தைப் பேசிக்குவோம்..” என்றதும் அரண்டு போனவனாய் அலறினான் ஜெ.

“ஐயையோ சார்… தெரியாம சிரிச்சுட்டேன். என்னை விட்றுங்க. நான் அப்பாவி. இந்த சங்கரன் சொல்றதெல்லாம் பொய்..”

“எதுய்யா பொய்யி..? நிஷா, இங்க வாம்மா..” என்று சங்கரன் கூப்பிட, குமார் அருகில் வந்தாள். “இன்ஸ்பெக்டர்ட்ட சொல்லும்மா.” என்றான்.

“ஆமாம் ஸார். இது என் மாமா பையனோட பாடி. என்னத்தையோ மாயம் பண்ணி என்னை இதுக்குள்ள சொருகிட்டாரு. ப்ளீஸ், என்னைக் காப்பாத்துங்க..” என்று அழுதாள் குமார்.

“என்னாலயும் இதை சகிச்சுக்க முடியலை இன்ஸ்பெக்டர் சார். நாளைக்கு எனக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு. இந்த உடம்போட நான் எப்டிப் போக முடியும்..? அப்பா, என்னப்பா கூத்து இது..?” என்று ஜெயராமன் பக்கம் திரும்பிக் கத்தினான் நிஷா.

“ஐய்யோ…” அலறினார் இன்ஸ்பெக்டர். “இன்னும் கொஞ்ச நேரம் இந்தக் கும்பலுக்குள்ள இருந்தா நான் பைத்தியமாய்டுவேன். யோவ், கான்ஸ்டபிள், இந்தாளை அரஸ்ட் பண்ணி ஜீப்ல ஏத்துய்யா. மிச்சத்த ஸ்டேஷன்ல போய் பேசிக்கலாம்.” என்றபடி திரும்பி ஜீப்பை நோக்கி நடக்கலானார். கான்ஸ்டபிள்கள் ஜெயராமனை கதறக் கதற இழுத்துக் கொண்டு போனார்கள். கூடவே போனான் சங்கரன்.

இப்போது நிஷா திரும்பி குமாரைப் பார்த்தான். “இங்க பாரு.. உன்னையும் என்னையும் இடமாத்தி விளையாடறதால எங்கப்பாவுக்கு பைசா லாபமில்ல. என்னமோ தப்பு நடந்திருக்கு. அதுக்கு எங்கப்பா பலியாகியிருக்கார். பதட்டப்படாம யோசி. நான் சொல்றது உனக்கே புரியும்…”

குமாரினுள்ளிருந்த நிஷா சற்றுநேரம் அமைதியாக நின்றாள். பின் மெதுவாக, “நீ சொல்றதும் பாயிண்ட்தான். மாமா இப்டியெல்லாம் செய்யக்கூடிய ஆள் இல்லதான்.” என்றாள்.

“ஹப்பாடா.. நீ ஒத்துக்கிட்டதுல சந்தோஷம். இப்ப இருக்கற நிலைமைல நாம ரெண்டு பேருமே தனியாத் திரிய முடியாது. சேர்ந்து இருந்தா குரலை மட்டுமாச்சும் மாத்திப் பேசி சமாளிக்கலாம். என்கூட கோவாப்ரேட் பண்றேன்னு சொல்லு. அப்பாக்கு என்னாச்சு, ஏன் இப்டி நடந்ததுங்கறத நாம சேர்ந்து கண்டுபிடிக்கலாம். ஓகேவா..?”

இரண்டு நிமிடங்கள் அமைதியில் கழிய, தலையை நிமிர்த்திச் சிரித்தாள் குமார். “ஓகேடா. ஐ அக்ரீட்..” என்று கையை உயர்த்த, நிஷா தன் கையில் அதில் அடித்துச் சிரித்தான்.

ந்த போலீஸ் ஸ்டேஷன் ஜவஹர்லால் நேரு காலத்தில் வெள்ளையடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். புராதனமான மேஜை, நாற்காலிகள், மங்கலான ட்யூப் லைட் என்று அழுது வடிந்து கொண்டிருந்தது.

“ஏன்யா… இப்பல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ங்களே ஹைபையாயிட்டு வருதே. இத மட்டும் ஏன் இப்டி வெச்சிருக்கீங்க..?” அதற்குள் சற்றுப் பழகிவிட்டிருந்த கான்ஸ்டபிளிடம் கேட்டான் ஜெ மெதுவாக.

“எங்க இன்ஸ்பெக்டர் க்வார்ட்டருக்கு யாரும் லஞ்சம் வாங்கினாப் பிடிக்காது. கவர்மெண்ட்ல ஷார்ட் கட்ல போக மாட்டார். அதுனால அவர் கேக்கறதையும் யாரும் கவனிக்க மாட்டாங்க. ஆனா ஒண்ணு… ஆளு படு முரடர்ய்யா. மரியாதையா அவர் பேசறப்ப எதிர்த்துப் பேசாம இரு. இல்லன்னா, உன் கதி அதோகதிதான்..”

“எதோ கதி..?” என்றபடி திரும்பிப் பார்த்தான் ஜெ.

“நக்கலு..?” சிரித்தார் கான்ஸ். “வா என்னோட, காட்றேன்..” என்றபடி அவனை இழுத்துக் கொண்டு போனார். ஸ்டேஷனின் ஒரு மூலையிலிருந்த லாக்கப் ரூமிற்கு அழைத்துச் சென்று நிறுத்தினார். உள்ளே பார்த்துக் கத்தினார். “யோவ், வாய்யா இங்க..”

படுத்திருந்த உருவம் திரும்பி எழுந்துவர, பார்த்த மாத்திரத்தில் அரண்டு போனான் ஜெயராமன். ‘குருதிப்புனல்’ படத்தின் க்ளைமாக்ஸ் கமல் போல, முகமெல்லாம் ரத்தம் வடிய, கன்னமும் தாடையும் வீங்கிச் சிவந்து, ‘பதினாறு வயதினிலே’ சப்பாணி கமல் போல இழுத்து இழுத்து நடந்து வந்தான் அவன்.

“பாத்தியா..? பல கமலஹாசன்களை ஒரே ரூபத்துல கொண்டு வந்திருக்காரு எங்க இன்ஸ்பெக்டரு… நாளைக்கு காலைல அவர் உன்னைய விசாரிக்க வர்றப்ப நீ முரண்டு பிடிச்சயின்னா, இதே கதிதான் உனக்கும்..” என்றபடி கான்ஸ்டபிள் திரும்பிப் பார்க்க, அங்கே மயங்கிச் சரிந்திருந்தான் ஜெயராமன்.

–பூதம் இன்னும் வரும்….

ganesh

1 Comment

  • க்வார்ட்டர் வடிவேல்கிட்டேர்ந்து ஜெவைக் காப்பாத்துமா பூதம்?

Leave a Reply to ரிஷபன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...