கோடு ஓவியக் கூடல் ஓவியக் கண்காட்சி
சென்னை தியாகராயர் நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர் பாபா வித்யாலயா அரங்கில் கோடு ஓவியக் கூடல் அமைப்பு ஓவியக் கண்காட்சியை எட்டு நாட்களுக்கு நடத்துகிறது. கண்காட்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்களின் 150 ஓவியங்கள் மற்றும் சிறப்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பார்வையாளர்கள் தினமும் இலவசமாகப் பார்வையிடலாம்.
19-02-2023 ஞாயிறு காலை தொடங்கி 26-02-2023 சனி மாலை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை ஓவியரும் நடிகருமான சிவகுமார் ஞாயிறு (19-02-2023) காலை 11 மணிக்குத் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.
மூத்த ஓவியர் திருமாறன் (63) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு நிதி திரட்டும் நோக்கில் கோடு ஓவியக் கூடல் அமைப்பு சார்பில் இந்த ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் ஓவியர், நடிகர் சிவக்குமார், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, ஓவியர் மணியம் செல்வன், எழுத்தாளர், கவிஞர் அமிர்தம் சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். எழுத்தாளரும் ஓவியருமான சீராளன் ஜெயந்தன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
ஓவியர் சீராளன் தனது பணி ஓய்விற்குப் பின்னர் எடுத்திருக்கும் பெரிய முயற்சி என்பது மிகையல்ல. அவரது அர்ப்பணிப்பு பெரியது. பொருளாதார மற்றும் உடல்ரீதியான நெருக்கடிகளுக்குப் பின்னர் அவர் நான்காண்டு காலமாக நடத்தி வந்த கேலரியை இப்போது ஐந்தாவது ஆண்டாக நடத்தியிருக்கிறார். இப்போது இது ஒரு virtual gallery ஆக மாறியிருக்கிறது.
இவரது கனவில் சரிபாதி சுமந்து இவருக்கு உறுதுணையாய் இருந்தவர் ஓவியர் திருமாறன். அவர் உடல்நலக் குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருக்கு நிதி திரட்டும் நல்ல நோக்கத்தின் காரணமாக அனைத்து ஓவியர்களின் ஒத்துழைப்புடன் இந்தக் கண்காட்சிக்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
ட்ராட்ஸ்கி மருது, திரை கலைஞர் சிவகுமார், அமிர்தம் சூர்யா ஆகியோர் இந்த கண்காட்சியின் தொடக்க விழாவில் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். முன்னோடிப் படைப்பாளர்களான என்.எஸ்.மனோகரன், ஆடு மனோகரன், மஹி (ஆர்ட் டைரக்டர் மஹேந்திரன்) தக்ஷிணாமூர்த்தி, கு.பாலசுப்ரமணியன், ஓவியர் சூரியமூர்த்தியின் படைப்புகள் என ஆரம்பித்து ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓவியர்கள் இதில் பங்கேற்றார்கள். ஓவியங்கள் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக பல கலைஞர்களின் கைவண்ணத்தில் மனதை அள்ளுகிறது. அங்கேயே இருக்கலாமா என்கிற எண்ணத்தைத் தூண்டுகிறது.
இம்மாதிரியான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு சீராளன் அவர்களுக்கு உறுதுணையாக எப்போதும் நிற்கும் ஓவியர் திருமாறன் அவர்கள் உடல்நலம் பெற்று வருவார் என்கிற நம்பிக்கையுடன் வாழ்த்துவோம்.
ஓவியர் சீராளன் ஜெயந்தன், உங்கள் முயற்சிகளுக்குப் பாராட்டுகள். பல கலைஞர்கள் மற்றும் அழகான கலைப் படைப்புகளையும் பார்க்க இந்த வாய்ப்பை உருவாக்கியதற்கு நன்றி.
இந்த ஓவியக் கண்காட்சி பிப்ரவரி 26 வரை சென்னை தியாகராய நகர் தக்கர் பாபா வித்யாலயா சமிதி வளாகத்தில் நடைபெறுகிறது. கலை ஆர்வம் மிக்கவர் கண்டுகளித்து ஓவியர் சீராளன் ஜெயந்தன் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கலாமே.