ஒற்றனின் காதலி | 12 | சுபா
பீஹாரில் நான் கொன்ற புத்திசுவாதீனமற்ற கணவன், தான் சாகப் போகிறோம் என்பதை உணராமலேயே, ஓர் உயர்ந்த கட்டிடத்தில் இருந்து, கடவுளிடம் சேர்வதற்காக நான் காட்டிய வழியான, குதித்தடைவது என்ற வழியைப் பின்பற்றிக் கீழே குதித்துச் செத்தான்.
சாவு என்பதையே உணராதவன். என் கைகளில் ரத்தக்கறை படியவில்லை. என் மேல் குற்றக்கறை படியவில்லை. போலீஸ், அவன் சித்தசுவாதீனமற்றவன் என்பதால் தற்கொலை செய்து கொண்டான் என்று ஃபைலை மூடிவிட்டது. ரத்தம் விரயமானதை நான் பார்க்கவே இல்லை. அவனுடைய படித்த மனைவி, எனக்குப் பாயானாள். சில நாட்களிலேயே…
அப்புறம் அந்தக் கிழவன். தண்ணீருக்குள் அவனை இழுப்பது எளிதாக இருந்தது. நுரையீரலில் தண்ணீர் நிறைய, நிறைய உதைத்துக் கொண்டான். சமாளிக்கும் திறன், என் உடம்பில் இருந்தது. வாரணாசியில் கங்கையில் மூழ்கிப் பாவம் தொலைக்க வந்தவன்.
கடவுளை தியானித்துக் கொண்டு, கங்கையில் மூழ்கினான். அவனைச் சுற்றிலும் பக்தர்களின் ‘ஹர, ஹர, மஹாதேவா’ என்ற ஆரவாரம். நான் கிழவனுக்காகத் தண்ணீரின் அடியில் காத்திருந்தேன். அவன் கால்களை வாரி விட்டேன். கிழவன் முன்னால் சாய்ந்தான். முகம் தண்ணீருக்குள் வந்தது.
பின்னந்தலையை அழுத்தினேன். ஒரு இரண்டு நிமிடங்கள் மௌனமாக அஞசலியுங்கள்.
என்ன? இரண்டு நிமிடங்கள் ஆயிற்றா? இந்த இரண்டு நிமிட அஞ்சலி நேரத்தில் கிழவனின் எதிர்ப்பு தொலைந்து போனது. என் பிடியைத் தளர்த்தினேன். கிழவனின் உடல் தண்ணீருக்கடியில் இறங்கியது.
ஸ்லோ மோஷனில் ஒரு பாறையில் மெதுவாக மோதி, தத்தித், தத்தித் தரையைத் தொட்டது.
நான் வேறுபக்கம் தலை உயர்த்தினேன். ‘ஹர, ஹர, மஹாதேவா.’
அவர்களுக்கிடையில், நான் ஒரு கொலைகாரன் என்பதை, அங்கிருக்கும் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்.
கிழவன் இறந்தபோதும், நான் ரத்தத்தைப் பார்க்கவே இல்லை.
அவன் இறந்தவுடன், அவனும், அவனுடைய அழகான இளம் மனைவியும் தங்கியிருந்த சத்திரத்திற்குப் போனேன்.
அவன் மனைவி படித்தவள். வாழ்க்கையில் இளமைக் கனவுகள் நிறைந்தவள். ஏழைக் குடும்பத்தில் எட்டுப் பெண்களில் ஒருத்தியாய்ப் பிறந்தவள். அவள் தகப்பன், அவள் ஸ்காலர்ஷிப்பில் படித்ததை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு, ஒரு ஆயிரம் ரூபாய்க் காசுக்கு ஆசைப்பட்டு, பரிசம் போட்ட டாக்குர் கிழவனுக்கு அவளை மணமுடித்தான். கன்னிகாதானம்.
அவனை, அவள் வாழ்க்கையில் இருந்து விலக்கி விட்டால், அந்த சுஷ்மா என்னுடன் எங்கே வேண்டுமானாலும் வருவதற்குத் தயாராக இருந்தாள்.
வந்தாள். நான் ஏற்றேன். புதுதில்லியில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஒரு மாதம் நானும், அவளும் இரட்டைக் கட்டில் கொண்ட அறையில் இருந்தோம்.
அப்புறம் அவளையும்..
சாரி, என்ன சொல்ல வந்தேன்? என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
கிழவனின் சாவிலும் ரத்தம் பார்க்கவில்லை, என்றுதானே சொன்னேன். இந்த முறை அப்படி முடியாது போலிருக்கிறது.
விஜய்குமாரின் சாவு கொஞ்சம் பயங்கரமானது. ரத்தம் நிறைய விரயமாகும். உடலே சிதையும், சின்னாபின்னமாகும். உமாவை அதிகம் கலவரப்படுத்தக் கூடாது என்பதால், அவளிடம் சரியாகச் சொல்லவில்லை.
பாறை வெடிக்கும் விபத்தில் சுரங்கத்தில் இதுவரை ஒருவர்கூட, உயிர் பிழைத்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு சாவுக்கு நான் பாசக்கயிற்றை வீசியிருக்கிறேன். பார்க்கலாம். உமா, ஜஸ்ட் வெய்ட். வந்துவிட்டேன்.
நான், முப்பத்தாறாவது கூண்டு அடைந்து நின்றதும், அதிலிருந்து வெளிப்பட்டேன்.
என் கூடவே மதுவும், அபுபக்கரும், ஏசுவடியானும், பரசுராமனும் இருந்தார்கள். வேறு ஷிஃப்ட்டில் இருந்தவர்கள்.
இன்றைக்கு ஷிஃப்ட் மாறியதால், என்னுடன் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
முப்பத்தாறாவது லெவல் என்பது பூமியில் இருந்து மூவாயிரத்து அறுநூறு அடிக்குக் கீழே. புதிதாகத் தோண்டி குடைந்து கொண்டு போன சுரங்கம் என்பதால் இன்னும் ட்யூப்லைட் போடவில்லை.
அதனால் இருட்டு.
நான் என் தலை விளக்கைப் போட்டுக் கொண்டேன். பாதை இரும்புக் கதவிற்கப்பால், வலது பக்கம் திரும்பியது.
நான் வலதுபக்கப் பாதையில் சென்றேன். கொஞ்ச தூரம் போனவுடன் பாதை இரண்டாகப் பிரிந்தது. வலது பக்கம், இடது பக்கம்.
வலதுபக்கப் பாதையில்தான் ஏற்கனவே பாறைகளை வெடிவைத்துத் தகர்த்துக் கொண்டிருந்தோம்.
மதுவையும், மற்றவர்களையும் வலது பக்கம் போகச் சொன்னேன். அங்கே ஏற்கனவே வெடி வைத்துத் தகர்த்த பாறைகளை இன்ஜினில் ஏற்றி அனுப்பச் சொன்னேன். முதல் நாளே, அந்த வலது பக்கப் பாதையின் முடிவில் இன்ஜின் போய்க் காத்திருந்தது.
அவர்கள் மண்வெட்டியுடன் கிளம்புவதற்கு முன் என்னைக் கேட்டார்கள்.
“நீ?”
நல்லவேளை, அவர்கள் தலைகளின் விளக்கு வெளிச்சம் என் முகத்தில் படியவில்லை. ஒருவேளை படிந்திருந்தால், அவர்கள் பார்த்திருந்தால், என் முகத்தில் தெரிந்த லேசான படபடப்பை அவர்கள் பார்த்திருப்பார்கள்.
“நான் லெஃப்ட் சைட் போகிறேன். அங்கே நேற்றே தங்க ரேகை பார்த்தேன். ஏற்கனவே கண்டெம் பண்ணி வைத்த பாதை அது. அங்கே சரியாகக் கவனிக்காமல் வந்திருக்கிறார்கள்.”
“பார்த்து சிவா. ஜாக்கிரதையாகப் போ. பாறை சரிந்து விடப் போகிறது” என்றான் மது.
“தாங்க் யூ. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றேன்.
நான், இடது பக்கம் பிரிந்தேன்.
இந்தப் பாதையை நான் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன்.
ஒவ்வொரு லெவலிலும் இறங்கி வேலை செய்யும்போது, அந்தந்த லெவல்களில் எது கண்டெம் பண்ணப்பட்ட பாதை, என்று அறிந்து போய்ப் பார்த்துவிட்டு வருவது என்று வைத்திருந்தேன்.
இதுவரை பார்த்த நிராகரிக்கப்பட்ட பாதைகளில் முப்பத்தாறாவது லெவலில் இருக்கும் இந்தப் பாதைதான் எனக்கு மிவும் தோதான பாதையாகப் பட்டது.
சரியாகக் குடையப்படாத பாதை. பாறைகள் அங்கங்கே ஓர் ஒழுங்கின்றி முன்னால் நீண்டும், பின்னால் அழுந்தியும் இருந்தன. சில இடங்களில் தலைக்கு மேல் பாறை இடித்தது. குனிந்து போக வேண்டிய கட்டாயம்.
நான் இருட்டில் தலை விளக்கு வெளிச்சத்தின் உதவியுடன் நடந்தேன்.
எங்கேயோ தண்ணீர் சலசலவென்று சொட்டும் சத்தம் கேட்டது. அந்த இடத்தில் காலுக்குக் கீழே முழங்காலுக்கு ஒரு சாண் கீழ் வரை தண்ணீர் சேறாகக் குழம்பித் தேங்கி இருந்தது. பாறைகள் நான்கு புறமும் ஈரக் கசிவுடன்.
சுவர்க்கோழிகள் இரண்டு மாறி, மாறி தங்கள் ரீங்காரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தன. நான் தண்ணீரில் காலை அழுத்தமாக ஊன்றி நடந்தேன். சுரங்கத்தின் மூலையில் லேசான திருப்பம்போல் பாறை ஒரு வளைவுடன் நின்றிருந்தது. அந்த வளைவிற்குப் பின்னால் நான் குறிப்பிட்ட ஓர் இடத்தில் கை வைத்தேன்.
என் கைக்கு ட்ரில் பிட் தட்டுப்பட்டது. கூடவே சுத்தியல். அதற்குப் பக்கத்தில் ஒரு சின்ன பொந்தில் பிளாஸ்டிக் பையின் பத்திரத்தில் ஜெலட்டின் வெடி குண்டுகள். டைமருடன் இணைக்கப்பட்டு இருந்தன.
பிளாஸ்டிக் பையைக் கையில் எடுத்தேன். அதைத் திறந்தேன். அதிலிருந்த ஜெலட்டின் வெடிகுண்டை எடுத்தேன். டைமருடன் இணைத்தேன். அந்த வினாடியில் இருந்து, முன்னூறு வினாடிக்கு டைமரை செட் பண்ணினேன்.
ட்ரில் பிட்டை எடுத்து அங்கே மேலே ஓடிய இரும்புக் குழாயில் சுத்தியலால் ஒரு தட்டு தட்டினேன். ஓட்டை, நான் எதிர் பார்த்தது போல் அசுத்தக் காற்று. குழாயில் இருந்து பிய்ச்சி அடித்துக்கொண்டு வரவில்லை. ஆனால், கசிந்தது. ஏற்கனவே அங்கே வெப்பம் சூழ்ந்திருந்தது. நான் செய்த செயலால், என் உடலில் வியர்வை வெள்ளம்.
அந்த இடத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன் டைமருடன் கூடிய வெடிகுண்டுடை, பாறையின் ஓரிடுக்கில் பொருத்தினேன். அது வெடித்தால், அந்த இடத்துப் பாறைகள் சிதறுவது நிச்சயம்.
நான் திரும்பினேன்.
“சிவா…”
விஜய்குமாரின் குரல். வந்துவிட்டான். தன் சாவைத் தேடி, தானே வந்துவிட்டான். நான் முன்னால் ஓரடி எடுத்து வைத்தேன்.
என் முகத்தில் சடக்கென்று கை பட்டது.
“யார்… யாரது?” என்றேன்.
மௌனம். யாருமில்லை.
“சிவா” என்று முன்னிலும் அதிக டெஸிபல்களுடன் விஜய்குமாரின் குரல்.
“கமிங்” என்றேன்.
இன்னொரு முறை, என் கண்களுக்கு நேர் எதிரே அந்த கருப்புக் கை வினாடிக்கும் குறைவான நேரத்தில் வீசுகிற மாதிரி வந்து விலகியது.
ச்சே. அது கையில்லை. ஒரு வௌவால்.
நான் பாறையில் கை ஊன்றி இரண்டடி எடுத்து வைத்தேன்.
பாறைச் சுவரில் என் விளக்கு வெளிச்சத்தில் ஒரு நட்டுவாக்களி. அது கொடுக்கை வளைத்து பாறையில் படர்ந்து நின்றது. தப்பித் தவறிப் பார்க்காமல், என் கை அதன் மேல் பட்டிருந்தால், ஒரே போடு போட்டிருக்கும்.
நான் சுவரில் எங்கும் சாயாமல் தண்ணீரில் காலை வைத்து, ‘தளக், புளக்’ என்று நடந்து பாறையின் முகப்பிற்கு வந்தேன்.
“என்ன சிவா?” கேட்டுக்கொண்டே, விஜய்குமார் வந்து சேர்ந்தான்.
குரலில் போலி உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டேன்.
“சார், இந்தப் பாதையில் போனால் பாறையில் ஃபர்ஸ்ட் கிளாஸாகத் தங்க ரேகை தெரிகிறது சார்.”
“ரியல்லி. இது கண்டெம்ட் ஏரியா ஆயிற்றே?”
“சரியாகக் கவனிக்காமல் விட்டு விட்டார்கள் போலிருக்கிறது சார்.”
“எங்கே நான் பார்க்கிறேன்.”
விஜய்குமார் பாதையில் நடந்தான். நான் எதிர்பார்த்ததுதான்.
நான், அவன் பின் நடந்தேன். இன்னும் நூற்று எண்பது வினாடிகள் மிச்சமிருந்தன.
“எங்கே?” என்ற கேட்டான்.
நான் டைமர் வைக்கப்பட்டிருந்த பாறையைச் சுட்டிக் காட்டினேன்.
“அதோ” என்று என் தலை விளக்கைப் பாறையின் பக்கம் திருப்பினேன்.
விஜய்குமார் குனிந்தான். என் விளக்கு வெளிச்சத்தில் விஜய்குமாரின் கழுத்தில் தேட வேண்டிய நரம்பு புடைத்துக்கொண்டு தெரிந்தது.
அதை லேசாக ஒரு தட்டு தட்டினேன்.
விஜய்குமார் சரிந்தான். பாறைமேல் அப்படியே சாய்ந்தான்.
‘டிக், டிக், டிக், டிக்’
அவன் கண்கள் மூடிவிட்டன.
“விஜி.”
ம்ஹும்.
“சார்.”
ம்ஹும்.
‘டிக், டிக், டிக்’
நேரமில்லை. நேரமில்லை. நான் இனிமேல் வினாடிகளை விஜய்குமாருடன் செலவிடுதல் தவறு.
நான் அங்கிருந்து விலகினேன். எனக்கு அவசரம் போலவே தண்ணீரிலும் ஒரு தண்ணீர்ப் பாம்பிற்கு அவசரம் போலும். தலையை உயர்த்தியபடியே அதுவும் விஜய்குமாரிடம் இருந்து விலகியது.
நான் அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு விலகிப் போய் விடலாம் என்று முன்னேறிய போது, எதுவோ என் தலை விளக்கில் மோதியது. விளக்கு அவுட்.
நெஞ்சத்தில் லேசாகப் படபடப்பு. வேண்டாம். காப்பாற்றிவிடு. காப்பாற்றாதே. உமா கிடைக்க மாட்டாள். இருட்டு மையிருட்டு. நான் பதறி விலகினேன். அதற்காக இவ்வளவு கோரமான மரணமா? தலை விளக்கில் என்ன மோதி விளக்கு உடைந்தது? நான் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டேன்.
ஒன்… டூ… த்ரீ… ஃபோர்… ஃபைவ்… ஸிக்ஸ்.
டமால்.
“ஐயையோ… யாராவது வாருங்களேன். ப்ளாஸ்டிங்கில் விஜிசார் மாட்டிக் கொண்டார்.”