திருவண்ணாமலை,
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கின்றனர்.
திருவண்ணாமலை அருகில் உள்ள மலப்பாம்பாடியில் அமைந்துள்ள கலைஞர் திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரான பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “வடக்கு மண்டலம் என்பது சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
அதன்படி வடக்கு மண்டல தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கான இடம் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடும் இதே இடத்தில் தான் நடைபெற்றது. எனவே இந்த இடத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்தார்.

17 கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை
தி.மு.க.வின் தாய் கழகத்தில் எப்படி கிளைக் கழகங்கள் வரை நிர்வாகிகள் உள்ளனரோ அதேபோல வாக்குச்சாவடி வரை இளைஞர் அணி நிர்வாகிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமித்திருக்கிறார். வடக்கு மண்டலத்தில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து அவர்களை சந்தித்து தேர்தல் பணி செய்வது குறித்து கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆலோசனைகள் வழங்கிட இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. கடிதம் கொடுத்த போது 17 கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறை உத்தரவிட்டது. அதனடிப்படையில் 7 துறைகளில் தடையில்லா சான்று பெற்று இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2 ஆயிரத்து 700 பஸ் மற்றும் 500 வேன் மற்றும் கார் ஆகியவற்றை நிறுத்துவதற்கான ‘பார்க்கிங்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி நிர்வாகிகள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வெள்ளை சீருடையில் கலந்து கொள்கிறார்கள். எனினும் 2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

உணவு, குடிநீர் வசதி
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தண்ணீர் பாட்டில், குளிர்பானம், பிஸ்கட், முந்திரி போன்ற ‘நட்ஸ்’ வகைகள் உள்ளிட்ட சிற்றுண்டி அடங்கிய 10 பொருட்கள் கொண்ட தொகுப்பு ஒவ்வொரு இருக்கையிலும் வைக்கப்படும். அது மட்டுமன்றி வருகிற அனைவருக்கும் உணவும், குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறவர்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வந்து செல்வதற்கும் பொது மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையிலும் மூன்று இணைப்பு சாலைகளில் 2 வழி புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை செய்வதற்கு ‘தூய்மை அருணை’ அமைப்பின் சார்பில் 500 தன்னார்வ தொண்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாடு போல் நடைபெறும் இந்த இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி முறைப்படி காவல்துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
