ஹைதராபாத் 4ம் நாள் பயணம் – நூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கும் பல்கலைக்கழகம்

 ஹைதராபாத் 4ம் நாள் பயணம் – நூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கும் பல்கலைக்கழகம்

மிக உயரத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் பல்கலைக்கழகம்,  மார்பிளால் ஆன பிர்லா மந்திர் கோவில், 12 அடி ஆழத்தில் அமைத்து மிக உயரமான கல்லறைகள்,  ரம்மியமான கண்டிப்பேட் லேக் 

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கேபிள் பாலம்  

ஹைதராபாத்தில் நான்காம் நாள் சுற்று பயணம்              

நண்பர்களே நான்காவது நாள் பயணமாக  காலையில் 8.40 மணிக்கெல்லாம் கிளம்பி ஒஸ்மானியா பல்கலைக்கழகம் சென்றோம்.  ஒஸ்மானியா பல்கலைக்கழகம் சென்றடைய ஒன்பது மணி ஆகிவிட்டது.

அங்கே ஓல்ட் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கட்டடம் இருக்கும் என்று எங்களுக்கு முன்பே தகவல் தெரிவித்திருந்தார்கள். நாங்கள் அந்தக் கட்டடத்தைப் பார்ப்பதற்காக ஆர்வமாகச் சென்றோம் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

நூறு வருடத்திற்கு மேலாக அந்தப் பல்கலைக்கழகம் இயங்கி வருவதாக தெரிவித்தார்கள். அங்கு உள்ள ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் காலேஜ் உள்ள  கட்டடம் மிகவும் பழமையானது என்று தெரிவித்தார்கள். அந்தக் கட்டடத்தின் உள்ளே சென்று பார்ப்பதற்காக முயற்சி செய்தோம். அங்கு உள்ள காவலாளி  இல்லை, இல்லை மதியத்திற்கு மேல்தான் உள்ளே வரவேண்டும் என்று தெரிவித்துவிட்டார்.

நாங்கள் எங்களுடைய பணியைத் தெரிவித்தும், அவரோ உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த நேரத்தில் எங்களின் நண்பர், மாணவர் சங்கத் தலைவர் திரு. மூர்த்தி அவர்களைச் சந்தித்தோம். அவரும்  எங்களுடன் மகிழ்வுடன் பேசி போட்டோக்கள் எல்லாம் எடுத்துக் கொண்டார்.

பிறகு நாங்கள் அவருடைய ஒப்புதலுடன் பல்கலைக்கழகத்தின் உள்ளே சென்று பார்வையிட்டோம். மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமாக வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நல்ல காற்றோட்டம், நல்ல இடவசதி, நல்ல முறையில் பயில்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எங்களுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.  நாங்கள் அங்கிருந்து பிர்லா மந்திர் கோவில் நோக்கிச் சென்றோம். மந்திர் கோவிலை நன்றாக வழிபட்டோம். பிர்லா மந்திர் கோயிலின் உள்ளே மொபைல் போன், கேமரா போன்றவை எடுத்துச் செல்வதற்கு அனுமதி இல்லை.

அந்தக் கோயிலின் வாசல் வரை வாகனம் செல்ல இயலும். அங்கு பார்க்கிங்கும் ஏற்படுத்தியுள்ளார்கள். மொபைல் போன், கேமரா வைப்பதற்கு இலவசம்தான். ஆனால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இருந்தபோதிலும் மிகப் பெரிய வரிசை நிற்பதால் கேமரா மற்றும் மொபைல் போன் முதலியவற்றைத் தாங்கள் காரிலேயே கொடுத்து செல்வது மிக நல்லது.

முற்றிலும் மார்பில் கற்களால் உருவாக்கப்பட்டுள்ள  திருக்கோயிலைக் கீழே இருந்து மேல் வரை நன்றாக நாங்கள் பார்த்து மகிழ்ந்தோம். பிர்லா மந்திர்  கோயிலின் உச்சியில் இருந்து பார்க்கும்பொழுது டேங்க் பண்ட் என்கிற இடமும், லும்பினி பார்க்கும், என்.டி.ஆர். காடனும், புத்தர் சிலையும் மிக அருமையாக நமக்குத் தெரிகின்றன.

 இவற்றைப் பார்க்கும் பொழுது நமக்கு நல்ல மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. அங்கிருந்து நாங்கள் நேராக சில்கூர் பாலாஜி கோவில் நோக்கிச்  சென்றோம். அங்கே 108 முறை சுற்றினால் வெளிநாடு பயணம் எளிதாகச் செல்லலாம் என்று தெரிவித்தார்கள்.

அந்தக் கோயிலில் சுவாமியைத் தரிசித்துவிட்டு வெளியே வரும்போது மிகப் பெரிய வியாபாரத் தலமாக அமைந்துள்ளது. அவ்வளவும் வியாபாரம்தான். வியாபாரக் கடைகள் எக்கச்சக்கமாக அமைந்திருக்கின்றது. அங்கேயும் வாசல்வரை கார் செல்லும். பார்க்கிங் வசதியும் உண்டு.

அங்கிருந்து நாங்கள் கிளம்பி கண்டிபெட் ஏரி  நோக்கிச் சென்றோம். கண்டிப்பேட் ஏரி செல்லும்போது  மதிய நேரம். ஏரி  மிகப் பெரியது. மிக அருமையானது. அங்கே நன்றாக குளு குளு  என்று காற்று வருகின்றது. பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

பூக்கள் மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. நாங்கள் சுமார் 2 மணி நேரம்தான் அங்கு இருந்தோம். ஒருநாள் முழுவதும் அங்கேயே நாம் காணக்கூடிய இடங்கள் இருக்கின்றன. அமைதியாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மதிய சாப்பாடு உடன் காலையில் கிளம்பினால் மாலை வரை அங்கு இருந்துவிட்டு வருவதற்கு மிக அருமையான இடம்.

அங்கிருந்து பிரிய மனமில்லாமல் நாங்கள் கோல்கொண்டா கோட்டை நோக்கி   மீண்டும் சென்றோம். அங்கு சில நிமிடங்கள் பார்த்துவிட்டு மீண்டும் வந்தவழியே சென்று குதுப் சாஹிப் டொம்பஸ் பார்த்தோம். 

குதுப் சாஹிப் டொம்பஸ் என்பது மிகவும் ஆச்சரியப்படத்தக்க கல்லறைகளில் நவீனத் தொழில்நுட்பத்துடன் பழங்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். 12 அடி ஆழத்தில் உடலைப் புதைப்பார்கள் என்றும், பச்சை உடை இருந்தால் ஆண் என்றும், சிவப்பு உடை இருந்தால் பெண் என்றும் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்கள்.

இறப்பதற்கு  முன்பாகவே அடக்கம் செய்யக்கூடிய  இடத்தை அந்தக் காலத்தில் திட்டமிட்டு கட்டி வைத்துள்ளார்கள். அந்த ராஜாக்கள், ராணிகள் மற்றும் அவர்களுடைய பணி பெண்களுக்கும் அங்கே கல்லறைகள் அமைக்கப்பட்டு உள்ளது எங்களுக்கு பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது.

க்ராவிட்டி போர்ஸ் மூலமாகத் தண்ணீர் உள்ளே வருமாறு அங்கு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இறந்த உடலைக் குளிப்பாட்டும், பல்வேறு விதமான சடங்குகள் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். அவற்றைப் பார்க்கும்போது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

இறந்த பிறகு மிகப்பெரிய கல்லறைகளை மிகப்பெரிய செலவில் ஏற்படுத்தி உள்ளது எங்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.  அங்கே ஒரு கைடு எங்களுக்கு மிகுந்த அளவில் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். முகமது என்பது அவர் பெயர்.

அந்தக் காலத்திலேயே நவீனத் தொழில்நுட்பத்துடன் ஒருவர் பேசுவதை இன்னொருவர் கேட்பது போன்றும், மொபைல் போன் போன்று நாம் மிக மெலிதாகப் பேசுவது அடுத்த பக்கத்தில் நன்றாக்க கேட்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அங்கிருந்து நாங்கள் என்.டி.ஆர். கார்டனை நோக்கிச் சென்றோம். என்.டி.ஆர். கார்டன் மிகவும் அருமையானது. பல்வேறு விதமான சிறு குழந்தைகளுக்கு விளையாடும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில  மணி நேரங்கள் இருந்துவிட்டு லும்பினி பார்க் சென்றோம்.

லும்பினி பார்க் இரவு நேரலை சவுண்ட் அண்ட் ஒளிக் காட்சியை (ஒரு நபருக்கு ரூபாய் 200)   கண்டுகளித்தோம். மீண்டும் நாங்கள் அங்கிருந்து புத்தர் சிலையைப் போன்றவற்றைப் பார்த்தோம். அருவி போன்று அமைப்பு ஏற்படுத்தி தண்ணீரில் குளிக்கும் வகையில் செய்து வைத்துள்ளனர். அதுவும் நன்றாக உள்ளது. அதுவும் இரவு நேரத்தில் நல்ல முறையில் விளக்குகளுடன் அமைந்துள்ளது.

எங்களுடைய பயணமானது துர்க்கம் சேர்வு  என்கிற கேபிள் பாலத்தை  நோக்கிச் சென்றது.  கேபிள் பாலத்தில்  இரவு நேரத்தில் லைட் வசதி மிக அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை நாங்கள் பார்த்துவிட்டு மிகுந்த ஆச்சரியத்துடன் அடுத்ததாக ஐ.டி. கம்பெனிகள் உள்ள இடத்திற்குச் சென்று பார்த்தோம்.

அங்கு ரவுண்டு மாடி வழியாகச் சுற்றிப் பார்க்க அமைத்துள்ளார்கள். அதுவும் இரவு நேரத்தில் வண்ண விளக்குகளில் அருமையாக இருந்தது. அங்கிருந்து கிளம்பி  9.45 மணி போல் எங்களது அறையை நாங்கள் அடைந்தோம்.

(பயணம் தொடரும்) 

எம்.எஸ்.லட்சுமணன், காரைக்குடி

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...