கண்ணே, கொல்லாதே | 7 | சாய்ரேணு

 கண்ணே, கொல்லாதே | 7 | சாய்ரேணு

7.புத்தன்?

வெகுநேரம் யாரும் எதுவும் பேசவில்லை.

கௌதம் கான்ஸ்டபிள்களிடமிருந்து திமிறிக் கொண்டு அம்மாவின் அருகில் சென்றவன், அவள் உயிர் பறந்துவிட்டது என்பதை உணர்ந்ததும் அவள் காலடியில் அமர்ந்து கண்ணீர் பெருக்கினானே தவிர, ஒரு வார்த்தை சொல்லவில்லை.

போஸ் தன்னைத் தாக்கிய அதிர்ச்சிக் கட்டிலிருந்து மெதுவாக வெளிவந்தான். கான்ஸ்டபிள்களை அனுப்பி சாந்தியின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸை அழைக்க உத்தரவிட்டான். போலீஸ் யந்திரத்தையும் போன் மூலம் முடுக்கிவிட்டான். கான்ஸ்டபிள்கள் வெளியேறிவிட்டதால் கௌதமின் அருகில் வந்து நின்றுகொண்டவன் சாந்தியின் உடலைப் பார்த்து “பாவம்” என்றான்.

“அவங்க ஸ்டேட்மெண்ட் நான் குறிச்சு வெச்சிருக்கேன், ரெகார்டிங்கும் இருக்கு” என்றாள் தர்ஷினி.

“தாங்க் யூ. அது ரொம்ப முக்கியம். கோர்ட்டில் தாக்கல் பண்ணணும்” என்றான் போஸ்.

“இந்த ஸ்டேட்மெண்டை நீ நம்பறியா, போஸ்?” என்றாள் தன்யா மெதுவாக.

எதிராஜு வீட்டிலிருந்து வந்ததிலிருந்தே அவளோ, தர்மாவோ பேசவே இல்லை என்பதை உணர்ந்தான் போஸ்.

“என் நம்பிக்கையில் என்ன இருக்கு? ஆனா எதிராஜுவோட சாட்சியம் வலுவா இருக்கே” என்றான் போஸ்.

“வலுல்லாம் இல்லை. எதிராஜுவோட சாட்சியத்தை ஈஸியா உடைச்சுட முடியும்” என்றாள் தன்யா.

“ஐ சப்போஸ் ஸோ” என்றான் போஸ் உற்சாகமில்லாமல். “இதை நாம ஒத்துக்கறதுக்காக உயிரையே விட்டிருக்காங்க இந்த அம்மா. அதோட… எனக்கும் அவங்க சொல்றதை நம்பத்தான் தோன்றுகிறது. மாசிலாமணி தன்னை என்ன சொல்லிக்கிட்டாலும், அவன் ஒரு கொடூரமான கணவன், பொறுப்பில்லாத தகப்பன். இந்த மாதிரி கோடிக் கேஸ் நான் பார்த்திருக்கேன். மனைவிகள் ஒரு ஸ்டேஜில் – சாதாரணமா அது அவங்க குழந்தைகள் விஷயமாத்தான் இருக்கும் – பொறுமை இழக்கறதையும் புருஷனைத் தண்டிக்கறதையும் பார்த்திருக்கேன். இது ஒரு கன்வென்ஷனல் கேஸ், ஆஃப் அ நான்-கன்ஃபர்மிஸ்ட், தூத்தெறி!” என்றான் போஸ்.

“எதிராஜு பொய் சொல்றான்னுதான் எனக்கும் தோன்றியது” என்றான் தர்மா மெதுவாய்.

“ரெண்டு வருஷமா விஷம் வாங்கி வெச்சிருக்காங்க, அதைப் பயன்படுத்தாம, விஸினைப் பயன்படுத்திருக்காங்க” என்றாள் தன்யா, தர்மாவைக் கவனிக்காமல்.

“விஷம் தற்கொலை செய்துக்க வாங்கி வெச்சதா சொன்னாங்களே” என்றான் போஸ்.

“தற்கொலை செய்துக்கற எண்ணம் உள்ளவங்க கொலை செய்வாங்களா? அப்படியே செய்தாலும் ப்ளான் பண்ணி, யாருக்கும் தெரியாத விதத்தில்… இப்போ கௌதம் கிடுக்கிப்பிடில மாட்டிட்டான் என்ற நிலையில்தான் உண்மையைச் சொல்லியிருக்காங்க. அவங்களா சொல்றவரையில் நாம யாரும் இதை ஊகிக்கக்கூட இல்லை. வெறும் விக்டிம் இல்லை இவங்க, போஸ். ரொம்ப, ரொம்ப கெட்டிக்காரங்களான ஒன்-டைம் க்ரிமினல்!”

“ஷட்-அப்! என் அம்மாவைப் பற்றி இப்படியெல்லாம் பேச உங்களுக்கு உரிமையில்லை” என்று கத்தினான் கௌதம். “என் அப்பாவைக் கொன்றது நாந்தான்! இப்போ சொல்றேன், எதிராஜு பார்த்தது உண்மை! என் அப்பாவோட டானிக்கில் விஷத்தைக் கலந்தது நாந்தான். என்னைக் காப்பாற்றச் சொன்னதுதான் அம்மாவோட ஸ்டேட்மெண்ட். அதை இக்னோர் பண்ணிடுங்க” என்று ஓங்கி அலறினான்.

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நிச்சயமா அதை இக்னோர்தான் பண்ணியிருப்போம்” என்றான் தர்மா.

“வாட் டு யூ மீன்?” என்று கௌதமும் போஸும் ஏககாலத்தில் கேட்டார்கள்.

“எதிராஜு எதையும் பார்க்கலைன்னா, உன் விஷயமா அவன் பொய் சொல்றான்னா, அவன் வீட்டில் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? உன் அம்மா அதைக் கொடுத்திருக்க முகாந்திரமே இல்லை. ஏன்னா, அவங்களைப் பார்த்ததா எதிராஜு எந்த இடத்திலும் சொல்லலை. அவங்களுக்கு ரகசியமா எத்தனையோ வாய்ப்புகள் கிடைக்கும், ராத்திரியில் உள்ளே வந்து மருந்தைக் கலக்கணும்னு தேவையே இல்லை. அப்படியே இருந்தாலும்… எதிராஜுவுக்குக் கொடுக்க அவங்ககிட்டப் பணம் ஏது?” என்று தர்மாவின் கூற்றை ஒட்டிச் சிந்தித்தாள் தன்யா.

கௌதம் திருதிருவென்று விழித்தான். தர்மா அவனை நெருங்கி, அவன் தோளில் கைபோட்டான். “இந்த லாஜிக்கிலேயே தொடர்ந்து போவோம். எதிராஜுவுக்குக் கொடுக்க உன்னிடம் மட்டும் பணம் ஏது, கௌதம்?”

கௌதம் தவித்தான்.

“அண்டர்வேர்ல்டைப் பற்றி எங்களுக்கு நல்லா தெரியும். உன்மேல அவங்க கண்ணு வெச்சிட்டேதான் இருப்பாங்க. கணிசமா உன் கையில் ஒரு தொகை சேர்ந்திருந்தா, அது அடுத்த நிமிஷம் அவங்க கைக்குப் போயிடும் – உன் ‘கடன்’ தொகை எவ்வளவா இருந்தாலும் சரி. அவங்க கண்ணில் மண்ணைத் தூவிட்டு நீ எதிராஜுவுக்கு ரெண்டு லட்ச ரூபாய் கொடுத்தேன்னு நாங்க நம்பணும், இல்லை?” என்றாள் தன்யா.

கௌதம் மௌனமாக நின்றான்.

“எல்லோரும் உட்காருங்க. உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை இனிமேலாவது பார்க்கலாம்” என்றாள் தன்யா.

சிறிதுநேரம் முன்புவரை “சாந்தலக்ஷ்மி” என்றும் “சாந்தி” என்றும் “அம்மா” என்றும் அழைக்கப்பட்ட அந்தத் தேகம் அந்த அறையின் நடுவில் கிடக்க, அதனைச் சுற்றிலும் சோபாக்களிலும் நாற்காலிகளிலும் எல்லோரும் அமர்ந்தார்கள்.

தர்ஷினியும் போஸும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இருவருடைய மனங்களிலும் ஒரேமாதிரியான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.

“இது போன்ற செஷன்ஸ் இதுவரை நாம் எத்தனை பார்த்திருப்போம்? தர்மா எழுப்பிய ஒரு சிறு பொறியைக் கொண்டு உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டும் தீபமாக இந்தத் தன்யாவின் பேச்சு அமைவது இது எத்தனையாவது முறை? ஆனால் இந்த முறை போன்று இதுவரை நடந்ததே இல்லை. சாதாரணமாய் ஒரு ஆடியன்ஸுக்கு முன்னால்தான் இந்தச் செஷன் நடைபெறும். இங்கே நம்மைத்தவிர ஒரே ஒருவன். குற்றவாளி அவனா, இல்லை அவன் அம்மாவா – இவ்வளவுதான் கேள்வி. அவன் அம்மாவும் உயிரோடு இல்லை. அவர்கள் உயிர் விட்டிருப்பது இவனைக் காப்பாற்ற. அதற்கு நாம் மரியாதை தரவேண்டும்…”

ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன்யா பேச ஆரம்பித்தாள். எல்லோருடைய கவனமும் அவள்மேல் பதிந்தது.

“நாங்கள் முதன்முதலில் துப்பறிய ஆரம்பித்தபோதே, தர்மா எங்களிடம் சொன்னது, அவன் எங்களுக்கு வெறுமே கார்டியனாகவும் ஃபைனான்ஷியராகவும் இருப்பான் என்று.

“ஆனால் ஆரம்பகாலத்திலிருந்தே, அவனுடைய இன்ட்யூஷனை – உள்ளுணர்வை – நான் மதித்திருக்கிறேன். அது சரியாகவே இருந்திருக்கிறது. எதிராஜு எந்தக் காரணத்தினாலோ பொய் சொல்கிறான் என்பது அவனுடைய தீர்மானம். கேள்வி கேட்காமல் அதை ஒப்புக்கொண்டு, அதிலிருந்து மேற்கொண்டு செல்வதற்குள் கௌதமின் அம்மா தான்தான் இந்தக் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் எதிராஜுவிற்குப் பணம் கொடுக்கவில்லை.

“எதிராஜுவிடம் பணம் இருந்தது உண்மை. அவனுக்குப் பணம் கொடுத்தது யார்?”

எல்லோரும் தன்யாவை உற்றுப் பார்த்தார்கள்.

“இந்த வீட்டின் குணாதியங்களை யோசித்துப் பார்ப்போம். அம்மா கையில் பணம் கிடையாது. மாசிலாமணியின் மரணத்திற்குப் பின் லீகல் ப்ரொசீஜர்கள் இன்னும் முடியவில்லை. கௌதமோ, பணம் இல்லையென்றுதான் இங்கு வந்திருக்கிறான். இந்த வீட்டில் பணம் இருக்கும் ஒரே நபர் – மகாவீர்!”

போஸ் படாரென்று எழுந்து நின்றான்.

“ஓகே. இப்போ புரிஞ்சுடுச்சு. ஆனா அவன் கல்கத்தா…”

“அவன் பேரில் முதல்நாள் யாரோ பயணம் செய்திருக்கணும். யாருக்கும் தெரியாம ராத்திரி வந்து மருந்தைக் கலந்துட்டு, மிட்நைட் ஃப்ளைட் பிடிச்சிருக்கணும்.”

“கரெக்ட். இப்போ நான் என்ன பண்றது? அம்மா… தன் உயிரையே கொடுத்திருக்காங்க…”

“மகாவீர் ரொம்ப நல்லவன்” என்றான் கௌதம். “கல்யாணம்… பிஸினஸ்… நெருக்கடியான சந்தர்ப்பம்…”

யாரும் எதுவும் பேசவில்லை.

பத்து நிமிடங்கள் கழிந்தன.

மகாவீர் உள்ளே வந்தான். அழுதிருந்தான். “கௌதம்… என்ன நடக்குது இங்கே? அம்மா… போலீஸ் ஏதேதோ சொல்றாங்க?” என்றான்.

யாரும் பேசுவதற்குமுன் தன்யா “இந்தக் கொலையை உங்க அம்மா செய்ததா மரண வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. இந்தக் கொலையை யார் செய்திருந்தாலும், அவங்க வாக்குமூலம்தான் கோர்ட்டில் நிற்கும். இந்த அறையில் கௌதமோ, நாமோ பேசியது எதுவும் வெளியே போகாது. கௌதம் பேசிட்டாரு. நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா, மகாவீர்?” என்றாள், தர்மாவை ஓரக்கண்ணால் பார்த்தவாறு. தர்மா “சரி” என்பதுபோல் மிக மெலிதாய்த் தலையசைத்தான்.

கத்தியை வைத்து வெட்டலாம்போல் கனத்த மௌனம். மகாவீர் அதை ஒரே வார்த்தையால் கலைத்தான்.

“இல்லை!”

வெளியே போய்விட்டான்.

“அவனை அரெஸ்ட் பண்ணிடு, போஸ்” என்றான் தர்மா.

“காஞ்சிப் பெரியவா ஒருமுறை சொன்னாராம் – எனக்குத் தவறு செய்யும் சந்தர்ப்பங்களைத் தராத காமாக்ஷியன்னைக்கு நமஸ்காரம்னு! சந்தர்ப்பங்கள் நம்மைத் தவறு பண்ணத் தூண்டுகின்றன. இந்த வழக்கில், மாசிலாமணி ஒரு ரோக். அவன் மரணத்தால் யாருக்கும் எந்தக் கஷ்டமும் இல்லை. மகாவீர் – இந்த ஒரு தவறை விட்டுட்டுப் பார்த்தா, ரொம்ப நல்லவன், எல்லோருக்கும் நல்லது செய்யக் கூடியவன்.

“ஆனா போஸ், கொலை ஒரு மனிதனுடைய குற்றவுணர்வை அரிச்சுடும். முதல் கொலையின்போது வருத்தமும் பயமுமிருக்கும். மாட்டிக்கலைன்னதும், அடுத்த நெருக்கடி வரும்போது கொலை பண்றது சுலபமா இருக்கும், அப்புறம் அவன் சமூகத்துக்கு நேர்ந்த ஆபத்தாய் மாறுகிறான். அதனாலேயே எத்தனை நியாயமா இருந்தாலும் கொலை செய்தவனைச் சட்டம் தண்டிக்குது.

“அபூர்வமாகவே தப்பு செய்துட்டவங்க அதை எண்ணி வருந்தி அப்புறம் எந்தத் தப்பும் செய்யாத நல்லவங்களா காலம் முழுவதும் வாழ்ந்து மறையறாங்க. அப்படி வாழ ஒரு சந்தர்ப்பத்தைத்தான் அம்மா மகாவீர்க்குக் கொடுத்திருக்காங்க – தன் உயிரைக் கொடுத்து! அவன் அப்படிப்பட்டவனா, இல்லை, அவன் செய்த கொலை அவன் குணத்தை அரிக்க ஆரம்பிச்சுடுச்சான்னுதான் ஒரு டெஸ்ட் வெச்சோம்… அவன்…” என்று இழுத்து நிறுத்தினான் தர்மா.

“புத்தன் – அது கௌதமில்லை, மகாவீர்” என்றான் போஸ். “சந்தர்ப்பத்தினால் புத்தன்கூடக் கொலை செய்துடலாம். ஆனா அப்புறம் அவன் யார்? புத்தனா, கொலைகாரனா? அநேகமாய் அவன் புத்தனா இருக்கறதில்லை, இல்லையா?” ஒரு பெருமூச்சு விட்டவன் “தேங்க் யூ கர்ல்ஸ், தர்மா. நானும் பெரிய தவறு செய்யறதிலேர்ந்து காப்பாற்றப்பட்டுட்டேன்” என்றான் நன்றியுடன்.

“கௌதம், இனி நீ உன் அம்மாவுடைய மகனா நடந்துக்கணும். உன் பிரச்சனைகளிலிருந்து சீக்கிரம் வெளியே வரப்பார்” என்றான் தர்மா. தன்யா, தர்ஷினி ஆமோதிப்பதுபோல் தலையசைத்தார்கள்.

மரணமும் இருட்டும் சூழ்ந்த அந்த அறையிலிருந்து விலகி, வாழ்வையும் வெளிச்சத்தையும் தேடிக் கொண்டு எல்லோரும் வெளியுலகிற்குள் நுழைந்தார்கள்.

-நிறைவு-

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...