கிருஷ்ணை வந்தாள் | 6 | மாலா மாதவன்

 கிருஷ்ணை வந்தாள் | 6 | மாலா மாதவன்

எட்டுத் திக்கும் காப்பாள் காளி

எல்லை காத்து நிற்பாள்

பட்டுக் கைகள் கொண்டு காற்றாய்

பறந்து நம்மில் புகுவாள்

சட்ட திட்டம் இல்லை அவள்

சக்தி தரும் சக்தி

எட்டு அவளை எட்டு காளி

என்றும் நமது சக்தி

ய்வான ஒருநாள் அகல்யாவின் பாடலை ராகத்துடன் இசையமைத்துப் பார்த்தாள் ஜோதி.

“யாருங்க வீட்டுல? கொஞ்சம் வெளியில் வாங்க!” சற்றே தடித்த உரத்த குரல் கேட்டு ஜோதி பாட்டை நிறுத்தி விட்டு வாசல் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.

வெளியே அகல்யாவிடம் பாடம் படிக்கும் கோபியும் அவன் அப்பா மற்றும் சில பேரும் நின்றிருந்தனர். பின்னாடியே வீரா தாத்தாவும்.

“எங்கேம்மா அகல்யாம்மா? எங்க குலத்தக் காக்க வந்த சாமி!”

ஜோதி புரியாமல் முழித்தாள். என்ன ஆச்சு இவர்களுக்கு? அகல்யாவை சாமி கீமின்னு தேடிண்டு வரா. ஏதாவது ஏடாகூடமா பண்ணி வைச்சுட்டாளா? ரொம்ப நாள் கழிச்சு நேத்திக்குத் தான் அவ வெளிலயே போனா! இப்ப என்ன செய்ய? சுந்தரும் இவரும் மதுரைக்குக் கிளம்பிப் போயிட்டாளே செக்கப்புன்னு. அகல்யாவும் கோவிலுக்குப் போயிருக்கா. ம்ம்! சரி.. இவாளை உட்காரச் சொல்லுவோம் என நினைத்து

“அகல்யா வந்துடுவா! உட்காருங்கோ!” என்றாள்.

கூட்டம் ஒரு ஓரமாகக் கூடத்தை நிறைத்தது.

அகல்யா அங்கு ஆனந்தமாய் கிருஷ்ணையுடன் கோவில் குளத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். கோவிலின் பின்புறம் தாமரையும் அல்லிகளும் போட்டி போட்டுப் பின்னிக் கொண்டிருக்க அவற்றின் நடுவில் ஊடாடி மகிழும் நீர்ப்பரப்பு தெள்ளந்தெளிவாய் பளிச்சென இருந்தது. கிருஷ்ணை அதன் நடுவில் இறங்கி அமிழ்ந்தும் எழுந்தும் ஆடிக் கொண்டிருக்க அவளைப் பிடிக்கச் சென்ற அகல்யாவையும் நீர் நனைத்து விட்டது. நீரில் மூழ்கும் போது சிறுமியாகவும், எழும்போது காளியாகவும், அகல்யாவை வாவெனக் கூப்பிடும்பொழுது அவள் அன்னை வேணியின் உருவமாகவும் தெரிந்தாள் கிருஷ்ணை.

“அம்மா!” உணர்ச்சிப் பெருக்கில் கத்தி விட்டாள் அகல்யா.

“அம்மா தான் அகல்யா.. வா! குளத்தினுள் இறங்கு.”

அகல்யா சந்தோஷமானாள். இன்றைய பொழுது நற்பொழுது கிருஷ்ணை. அம்மனே எனக்கு அம்மாவும் ஆனாள். தண்ணீருக்குள் அமிழ்ந்தாடினர் இருவரும். கோவிலுக்கு இன்னும் யாரும் வந்திருக்க வில்லை. கோலமிடத் தான் வந்தாள் அகல்யா. பூசாரியும் அவள் கோலமிடட்டும் எனத் தன் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

“போதும் போதும் அம்மா. நாம் உள்ளே போகலாம்.” மகள் இப்போது அன்னையாய் மாறி உத்தரவு இட்டாள்.

புடவையைப் பிழிந்து ஒரு பக்க முனை உதறி மாற்றிக் கட்டிக் கொண்டாள். உள்ளே வந்து பிரகாரத்தில் ஏறுவெயில் படுமாறு அமர்ந்தனர்.

“பூசாரி ஐயா இன்னும் வரலையே! உனக்கு சளி பிடிச்சுக்குமே. நானே சாம்பிராணி போடவா கிருஷ்ணை?”

“உனக்குச் சளி பிடிக்காதா அகல்யா? என்னை மட்டும் பார்க்கறியே?”

“ஏன்னா என்னைப் பார்த்துக்க நீ இருக்க. லோகமாதாவான உன்னைப் பார்த்துக்க யார் இருக்கா? அதுவும் எனக்கு நீ என் அம்மாவாகவும் மாறிட்ட. நான் தானே உன்னைப் பார்க்கணும்!” அகல்யா சலுகையுடன் கிருஷ்ணை மீது தலை சாய்த்தாள்.

பிறந்த ஒரு வருடத்தில் உன் அம்மாவைத் தவற விட்டவள் நீ. அன்னை அன்பை அறியாத உன் ஜாதகத்திலேயே தெய்வ சம்பந்தம் உண்டென இருக்கு அகல்யா. அதே போல் நீயும் உன் ரத்தத்தால் நான் இருக்கும் இடமான குபேர மூலையை நனைத்தாய். அம்மா! அம்மா! என்ற இடைவிடா அழைப்பு வேறு உன்னிடமிருந்து. நான் என்ன கல்லா வராமல் இருப்பதற்கு? கூப்பிட்டவர் குறை தீர்க்க ஓடி வருபவள் தானே நான். உளமாறக் கூப்பிட்டால் உடன் துணையாய் வருவேன். நீ விடாது நம்பிக்கையுடன் அழைத்தாய். வந்தேன்.” தாயாய்த் தலை கோதினாள் கிருஷ்ணை.

பூசாரி வந்து கொண்டிருந்தார். அவர் பார்வையில் அகல்யா மட்டும் தலைக்கு கை வைத்து படுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

“என்னம்மா அகல்யா. காலைல சீக்கிரம் எழுந்திருச்சியா? கோலமெல்லாம் போட்டுட்டு அசந்துட்ட. இதோ.. மாலை கட்ட பூவெல்லாம் வாங்கியாந்துட்டேன் அகல்யா. கொஞ்சம் சிரமம் பாக்காமக் கட்டிக் கொடுத்துட்டுப் போம்மா”

பூசாரி சொன்னதும் “இதோ வரேன் யா!” என வந்த அகல்யா பூக்களை கவனமாய்ப் பிரித்து அடுக்கத் தொடங்கினாள்.

“பூசாரிய்யா! இன்னிக்கு அவளுக்குக் பொங்கலோட கூடக் கஷாயமும் நைவேத்தியம் பண்ணிடுங்க. நான் எங்க வீட்டுல இருந்து பண்ணி எடுத்து வர்றேன்.”

“ஏம்மா?”

“அது நீங்க ஊத்தி ஊத்திக் குளிப்பாட்டின அபிஷேகத் தண்ணியில் அவளுக்கு ஜலதோஷம் பிடிச்சுடுத்தாம்”

“உங்கிட்ட வந்து சொன்னாளா ஆத்தா?” அவருக்கும் அகல்யாவின் போக்கு பற்றி பராபரியாய்த் தகவல் வந்திருந்தது. ஆயினும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவர். கேட்பவர்க்கெல்லாம் சொல்லும் ஒரே பதில்.. “எங்க ஆத்தா எல்லோருக்கும் நல்லதே செய்வா!” என்பதே.

நம்பிக்கை அது தானே பெரிய பலம். ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கை எந்தத் தப்புக்கும் வழி வகுக்காது. எந்த பொய்க்கும் இடம் கொடுக்காது. எந்த துன்பத்தையும் நெருங்க விடாது. அந்த ஒருவர் மனிதராகவும் இருக்கலாம். தெய்வமாகவும் இருக்கலாம்.

இங்கு தெய்வத்தின் மீது அகல்யா வைத்த மாறாத நம்பிக்கை தன் அம்மாவாய் தாலாட்ட வைத்தது. அகல்யா வீட்டிற்கு போன் செய்தாள். ஜோதி தான் எடுத்தாள்.

“என்னம்மா! இங்க நிறையப் பேர் உன்னைப் பார்க்க வந்திருக்காங்க. நீ இன்னும் கோவில்ல தான் இருக்கியா?”

“யார் வந்திருக்காங்க பெரிம்மா?”

“உன் கிட்ட படிக்கற கோபி, அவங்க வீட்டாளுங்க. அப்புறம் வீரா தாத்தா. எல்லோரையும் உட்காரச் சொல்லி இருக்கேன்.”

“அப்படியா நல்லதாப் போச்சு. நீங்க கோபிட்ட இஞ்சி, மிளகு போட்டு எனக்கு ஜலதோஷத்துக்குக் கஷாயம் வைப்பிங்களே. அது போட்டுக் கொடுத்தனுப்புங்க பெரிம்மா. உடனே.”

“யாருக்குடி அகல்யா? அதுவும் இத்தனை அவசரமா?”

“நம்ம கிருஷ்ணைக்குத் தான் பெரிம்மா. என் கூட குளத்தில் ரொம்பவே ஆட்டம் போட்டுட்டா. நீங்க போட்டுத் தந்துட்டா பூசாரிய்யா பொங்கலோட நைவேத்தியம் பண்ணிடுவார். அவளும் பாவம் தானே. தாயாய் இருந்து நம்மை பார்த்துக்கறவளை நாமும் பார்த்துக்கணும் தானே.”

“கிருஷ்ணை! கிருஷ்ணை! கிருஷ்ணை! எங்கிருந்துடி வந்தா உன் நாம ஸ்மரணைக்கு.”

“ஏன் பெரிம்மா.. நம்ம காளி தானே அவ. ஒண்ணும் சொல்லாதீங்கோ. உடனே கஷாயம் பண்ணி கோபி கிட்ட கொடுத்து விடுங்கோ. நான் அவனோடயே திரும்பி வந்துடறேன். “

அகல்யா போனை வைத்து விட்டு சன்னதியைப் பார்த்தாள். இவளின் கை கட்டும் மாலைக்காகக் காளியம்மன் சிற்றாடை அணிந்து தெய்வீகப் புன்னகையுடன் காத்துக் கொண்டிருந்தாள்.

மல்லிகைப் பூ சரம் கட்டி பந்தாய் சுருட்டி வைத்து விட்டு, மரிக்கொழுந்து அரளி வைத்து மாலை தொடுக்கத் தொடங்கினாள். அதற்குள் ஒன்றிரண்டு பேர் பூஜைக்காக வரத் தொடங்கினர்.

கும்பாபிஷேகத்தின் பின் கோவில் புதுப்பிக்கப் பட்டிருந்ததில் கோபுரம் வர்ணம் அடிக்கப்பட்டு பளபளவென மின்னியது. புதிதாகத் திருமண மேடை ஒன்று மீனாட்சி கல்யாண ஓவியத்துடன் அமைக்கப் பட்டிருந்தது. அதன் எதிரே சுமார் ஐநூறு பேர் உட்காரும் அளவு இடம் காலியாக இருந்தது. கல்யாண சமையல் சாப்பாடு வேண்டுமானால் கோவிலுக்கு வெளியில் கூரை போட்டு செய்து கொள்ளலாம். மாங்கல்ய தாரணம் மட்டும் கோவில் மேடையில்.

முதல் கல்யாணம் யாருடையதோ தெரியவில்லை. காளியம்மன் காத்திருக்கிறாள்.

அகல்யா சிந்தித்தபடி கட்டிய சரங்களையும், மாலைகளையும் எடுத்துக் கொண்டு பூசாரியிடம் சென்றாள்.

“தட்டில் வைம்மா அகல்யா. உட்காரு. அபிஷேகம் ஆரம்பிச்சுருவேன். ” மணியை அடிக்க ஆரம்பிக்க..

ஊர் ஜனங்கள் ஒவ்வொருவராகக் கூடத் தொடங்கினர்.

கோபியும் கஷாயத்தோடு வந்து சேர்ந்தான்.

“அக்கா! இந்தாக்கா! செம சூடு!”

“கொடுடா!” வாங்கியவள் நைவேத்திய சாமான்களோடு வைத்து விட்டு வந்தாள். இனி பூசாரி நைவேத்தியம் செய்து விடுவார்.

நைவேத்தியம் ஆனதும் வெளிப் பிரகாரத்தில் அமர்ந்த அனைவருக்கும் பிரசாதம் வினியோகிக்கப் பட்டது. கூடவே கஷாயமும். அகல்யாவின் கஷாயப் பங்கு அப்படியே பூசாரியிடம் இருக்க பிரதட்சணம் முடிந்து வந்தவளிடம் மீதமிருந்த கஷாயத்தோடு பாத்திரத்தைக் கொடுத்தார் பூசாரி. கூடவே ஒரு இலையில் கட்டிய பொங்கல் பிரசாதமும்.

“பொங்கலோடு கஷாயத்தையும் எல்லோருக்கும் வினியோகிச்சாச்சு அகல்யா!” சிரித்தார் அவர்.

“நல்லது தான் ஐயா. ஆத்தா பிரசாதம்ல . யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது. கொடுங்க .. நானும் கிளம்பறேன் வீட்டுக்கு!” எனத் திரும்பியவள்

“கோபி! கோபி எங்கே பூசாரிய்யா. இருக்கச் சொன்னேனே!”

“அந்தப் பய அப்பவே ஓடிப் போயிட்டான்மா. நீயும் கிளம்பு. நேரமாயிடுச்சுல்ல!”

பூசாரி சொல்லக் கையில் பாத்திரத்தோடு வெளியில் வந்து செருப்பைப் போட்டவள் மெதுவாய் நடக்கலானாள்.

“ஒரே கசப்பு.” என்றபடி நடப்பதில் இணைந்து கொண்டாள் கிருஷ்ணை.

“வந்துட்டியா? கசப்பா? எது கஷாயமா? பின்ன இல்லாம? கஷாயம்ன்னா கசக்கத் தான் செய்யும். அப்படி ஆட்டம் போட்டுருக்க குளத்துல. சளி புடிச்சுக்கும்ல!”

“ஆனாலும் கசப்பு. நீயும் குடி. நீயும் சேர்ந்து தானே நீரில் ஆடின?”

“வேப்பிலைக்காரி இந்தக் கஷாயத்தைக் கசப்புன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு.” என்றபடி அகல்யா கையில் இருந்த பாத்திரத்தை வாயில் சரித்துக் கொண்டாள்.

கஷாயம் பாயாசமாய் மாறி இருந்தது. அத்துணை இனிப்பு அதில்.

“கிருஷ்ணை! உனக்கு நைவேத்தியம் பண்ணினதும் கஷாயமும் அமிர்தமாயிடுத்தே!” ஆச்சரியமாய் அகலக் கண் விரித்தாள் அகல்யா.

“என் பொண்ணுக்கு என் கையால் குடுக்கறது கஷாயமா இருக்காது. என்னிக்கும் பாயாசமா தான் இருக்கும். “

“அம்மா!” குழைந்தது குரல் அகல்யாவுக்கு.

“இனி உனக்கு எல்லாம் இன்பமாக நடக்கட்டும் அகல்யா. கிளம்பு. உள்ளே வீட்டில் உனக்காக உன் பக்தகோடிகள் காத்திருக்கிறார்கள்.”

“எனக்கா? பக்தஜோடிகளா?”

“பக்தஜோடி இங்கு நானும், நீயும் தான். நான் சொன்னது பக்த கோடி. உன் பக்தர்கள்.” சிரித்தாள் கிருஷ்ணை.

வீட்டு வாசலில் நின்றிருந்த கோபியின் அம்மா அகல்யாவைப் பார்த்ததும் ஓடி வந்து கால்களில் விழுந்தாள்.

“ஆத்தா மகமாயி ஞான திருஷ்டியாலயே என் கண்ணைப் பத்தி சொல்லிட்டீங்களேம்மா. டாக்டரய்யா சரியான நேரத்தில் வந்திருக்கம்மா.. ஆபரேசனே வேணாம்மான்னு சொல்லிட்டாரு! ஆத்தா அகல்யா! நான் கும்புடற காளியாத்தா தான் உன்னுருவுல வந்து சொல்லியிருக்கு தாயி!”

“என்னம்மா இது.. என் கால்ல விழுந்துண்டு.. எழுந்திருங்க! நம்ம எல்லோருக்கும் அவள் தான் எல்லாம். நம் ஆலம்பாடி காளி தான் எல்லாம்” அகல்யா அவளை ஆதுரத்துடன் தொட்டாள்.

–கிருஷ்ணை வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...