என்.டி.டி.வி.யை வாங்கினார் அதானி

 என்.டி.டி.வி.யை வாங்கினார் அதானி

இந்தியாவில் மக்களைடையே நீடித்த நன்மதிப்பை பெற்ற ஊடகங்களில் ஒன்றான NDTV கைமாறியிருக்கிறது. பிராணாய் ராய் தம்பதியினரின் கைகளில் இருந்து அதானி குழுமத்தின் கைகளுக்கு சென்றிருக்கிறது. எதிர்பார்த்த நிகழ்வுதான் என்றாலும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

NDTVயின் முகம் என்றால் அது பிரணாய் ராய் தான். NDTV ஆரம்பிக்கும் முன்னரே அவர் பிரபலமான ஆளுமையாக வலம்வந்தார். தூர்தர்ஷனுக்கான The world this week நிகழ்ச்சியை அவர் தயாரித்து வழங்கினார். ஒரு தூர்தர்ஷன் சானல் மட்டுமே இருந்த காலத்தில் உலக செய்திகள் என்றால் அதைக் காண ஒரே வழி இந்த நிகழ்ச்சிதான்.

பிரணாய் ராயிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவரின் மொழி அழகும் எந்த சூழலிலும் கைகொள்ளும் சாந்தமான மனநிலையும் தான். இன்று ஊடகம் என்ற பெயரில் காட்டுக்கத்தலாக உளறிக்கொண்டிருப்பவர்களை கேட்டு பழகியவர்களுக்கு அந்த கால ஆங்கில ஊடக செய்திகளும், பேட்டிகளும் இளையராஜாவின் தாலாட்டுப் பாடல்கள்.

‘பாபர் மசூதி’ இடிக்கப்பட்ட பின்னர் வாஜ்பாயி அவர்களை பேட்டி கண்டிருப்பார். அதில் ராய் கேள்வி கேட்கும் விதம் இன்று மைக்கை கையில் பிடிக்க கனவு காணும் எல்லா இளைஞர்களும் அவசியம் கேட்க வேண்டிய ஒன்று. பரபரப்பு செய்தியில் இருக்க வேண்டும் செய்தியாளரிடம் அல்ல.

ராய் பின் தேர்தல் முடிவுகளை ஊகிப்பதிலும் அலசுவதிலும் முதன்மை ஆளுமையாக உருவாகினார், அது தொடர்பான டேட்டா மாடலிங் வேலைகளை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்துவைத்தார். நம்பகமான தேர்தல் கணிப்புகள், அலசல், பேட்டிகள் என்றாலே பிரணாய் ராய் தான் என்ற சூழல் உருவானது.

செய்தித்துறை நம் சமூகத்தில் செலுத்த முடிகிற அதிகாரம் என்பது கண்கூடானது. கோடிக்கணக்கான மக்களுக்கு தினப்படி ‘எது செய்தி?’ என்பதை நிர்ணயிக்கும் இடத்தில் இருப்பது. மக்கள் எதன் மீது கவனம் கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்க முடிவது நவீன சமூகத்தில் மாபெரும் அதிகாரம், அதே சமயம் அதைவிட பெரிய பொறுப்பும்கூட.

NDTV கூடுமானவரை அந்தப் பொறுப்புணர்வுடனேயே நடந்து வந்திருக்கிறது. இனி அப்படி தொடருமா என்பது சந்தேகமே. நிறுவனம் கைமாறியதும் பிராணாய் ராய் தனது பதவியில் இருந்து விலகிவிட்டார். பத்திரிக்கை சுதந்திர பட்டியலில் இந்தியா ஏற்கனவே 150ஆம் இடத்துக்கு சறுக்கியிருக்கிறது. இது மேம்படும் சாத்தியக்கூறுகள் கண்ணுக்கு எட்டியவரை தென்படவில்லை.

இத்தோடு ஒரு சகாப்தம் நிறைவுக்கு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஊடக சூழல் கடந்த 30 ஆண்டுகளில் வெகுவாக மாறிவிட்டது. பிரணாய் ராய் 70 வயதை தாண்டிவிட்டார் இனியும் தொடர்ந்து புதிய ஊடகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுகிறது. அப்படி இணைய ஊடகம் போல ஆரம்பித்து தொடர்ந்து பணியாற்றினால் நல்லதே.

பல முக்கிய செய்தியாளர்கள் இணைய வடிவத்துக்கு வந்துவிட்டனர். அப்படி நிகழ்ந்தால் அது அடுத்த தலைமுறை செய்தியாளர்களுக்கும் ஊட்கவியலாளர்களுக்கும் பிரணாய் ராய் நல்ல ஒரு தளத்தை உருவாக்கி அளிப்பதாக இருக்கும், It will be his legacy.

Karthik Velu  முகநூல் பக்கத்திலிருந்து…

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...