
விலங்கினங்களிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி. இதன் பிறப்பிடம் இந்தியா. ஆனால் தற்போது இந்தியாவில் ஒரு விலங்குகூட இல்லை. அருகிப்போன விலங்கினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த விலங்கை சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்க வேண்டும் என்கிற முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்காக இந்திய காட்டுயிர் நிறுவனம் (Wildlife Institute of India), மும்பை இயற்கை வரலாற்றுக் கழகம் (Bombay Natural History Society) மற்றும் நான்கு மாநில அரசுகள் இணைந்து இந்தச் சிவிங்கிப்புலி வளர்ப்புத் திட்டத்தில் பங்கேற்றுள்ளன.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலக் காடுகளில் இந்தப் புலியை மறுபிரவேசம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆந்திரம், கர்நாடகத்திலும் இவற்றை வளர்க்கத் தகுதியான இடங்கள் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இதற்காக 2022, செப்டம்பர் மாதம் நமீபியாவிலிருந்து மூன்று சிவிங்கிப்புலிகளை இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, மத்தியப்பிரதேசத்தில் உள்ள குணே தேசியப் பூங்காவில் விடப்பட்டுள்ளன.
புலி, சிறுத்தை, சீட்டா ஆகியவற்றின் வரிசையில் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த சிவிங்கிப்புலி அரிய வகை விலங்கினமாக ஆகிவிட்டது. குறிப்பாக இந்தியாவில் இது முற்றிலுமாக அழிந்துவிட்டது.
பொதுவாக புலி, சிங்கம் ஆகியவற்றின் நடமாட்டத்தை வைத்தே காட்டின் இயற்கையான வரம்பை வரையறுப்பதுண்டு. ஆனால் இன்றைய நவீன காலங்களில் காடுகள் குறைக்கப்பட்டதால் வனவிலங்குகள் நகரங்களுக்குள் வரத் தொடங்கிவிட்டன. எனவே காட்டைப் பாதுகாப்பதில் நமக்குப் பெரிய பங்குண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சிவிலிங்கிப்புலியின் வாழ்க்கை முறை
வேங்கை அல்லது சிவிங்கிப்புலி என அழைக்கப்படும் இவை பூனை இனத்தைச் சேர்ந்தவை. ஆங்கிலத்தில் Cheetah என்றும், உயிரியல் பெயர்: Acinonyx Junatus என்றும் குறிப்பிடப்படுகின்றன. தரையில் வாழும் விலங்குகளிலேயே அதிக வேகத்தில், அதாவது மணிக்கு 112 கி.மீ. முதல் 120 கி.மீ. வரையிலும் ஓடக்கூடிய சிவிங்கிப்புலி, இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிய தலையும், நீண்ட உடலும், உயரமான கால்களும், நீளமான வாலும் கொண்டிருக்கும். இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செ.மீ. அளவுள்ள வட்டவடிவக் கரும்புள்ளிகள் காணப்படும். அதன் கீழ் வயிற்றுப்பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
வயது வந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கி.கி. எடையும், 112 முதல் 135 செ.மீ. நீளமான உடலும், 84 செ.மீ. நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் பெண் சிவிங்கிப்புலிகளைவிட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும். ஆனால் ஒரு வேங்கையைத் தனியாகப் பார்க்கும்போது அது ஆணா, பெண்ணா என இனம் பிரித்துக் காண்பது கடினமான ஒன்றாகும்.

தற்போது ஆப்பிரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. வேட்டையாடி உண்பதை வழக்கமாகக் கொண்ட இவை பொதுவாக புல்வெளி, திறந்தவெளி காடுகள் ஆகியவற்றை வாழிடங்களாகக் கொண்டுள்ளன. பண்டைய காலத்தில் மன்னர்கள் இவற்றைப் பிடித்துப் பழக்கி, வேட்டைக்குப் பயன்படுத்தும் வழக்கமும் இருந்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எஞ்சியிருந்த மூன்று சிவிங்கிப்புலிகள்
1948ஆம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தின் காடுகளில் வாழ்ந்து வந்தன. மத்திய பிரதேசத்தை அதற்கு முன்னதாக ஆட்சி செய்துவந்த கோரியா மன்னன் அவற்றைச் சுட்டு வீழ்த்தியதுடன் இந்தியாவில் சிவிங்கிப்புலிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. இதுதான் அவற்றின் சோகக்கதை.
இந்தியாவைத் தாயகமாகக் கொண்டு வாழ்ந்துவந்த சிவிங்கிப்புலிகளின் மறுபிரவேசம் செய்யப்பட்டு மீண்டும் புத்துயிர் பெறவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
