பயராமனும் பாட்டில் பூதமும் | 6 | பாலகணேஷ்

 பயராமனும் பாட்டில் பூதமும் | 6 | பாலகணேஷ்

பனிங் சீனில் ‘அம்மா’ என்றழைத்தபடி உற்சாகமாக ஓடிவரும் எம்ஜியார்போல ‘அம்மா’ என்று துள்ளிக் குதித்து வீட்டினுள் நுழைந்த குமார் சற்று திகைத்துப் போனான். இதென்ன… வீடு இத்தனை அமைதியாக இருக்கிறது..?

மெல்ல அடியெடுத்து வைத்து சமையலறையினுள் நுழைந்தான். தனலட்சுமி அங்கே இல்லை. குழம்பியபடியே வெளியே வந்து தன்னறையினுள் நுழைந்து லைட்டைப் போட்டவன், கண்கள் விரிய அப்படியே ஆணியடித்தாற் போன்று நின்று விட்டான். எதிரே நின்றிருந்தது… அது!

வெள்ளை நிற அங்கியில், கண்கள் மட்டுமே சிவப்பாய்த் தெரிய, ஈயென்று கோரைப் பற்களைக் காட்டிச் சிரித்தது. “அயோ, பேய்… பேய்..” அலறியவாறு அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வந்தவன் எதிரே வந்த தனலட்சுமியின் மீது மோதிக் கீழே விழுந்தான்.

அவள் வியப்புடன் பார்க்க, நிமிர்ந்தவன் அலறினான். “யம்மா பேயி…. பேயிம்மா..”

“அறைஞ்சிடுவேன் ராஸ்கல். யாரைப் பாத்துடா பேயிங்கற..?” என்று அவன் சட்டையைப் பிடித்து அவள் நிமிர்த்தினாள்.

“ஐயோ அம்மா, உன்னைச் சொல்லல. அங்க என் ரூமுக்குள்ள…” என்று அவன் கை காட்டிய நேரம், ‘ஹிஹ்ஹிஹ்ஹ்ஹி’ என்று இளித்தவாறு அது வெளியே வந்தது. “பாரும்மா…” மீண்டும் அலறினான்.

“லூசு..! இதுக்காடா பயப்படற..? ரொம்ப நல்ல பேய்டா இது..” என்றபடி அதை நெருங்கி அதன் தோளில் கை போட்டாள் தனம். ‘ஹீஹீஹீ’யென்று இளித்தது அது.

“ஐயோ அம்மா… அது அடிக்கறதுக்குள்ள ஓடிவந்துடு..” உடலைவிட்டுத் தெறித்து விழுந்துவிடும் போலப் பிதுங்கின குமாரின் கண்கள்.

“அடேய் மடையா… இன்னுமா விஷயம் தெரியலை உனக்கு..?” வாய்விட்டுச் சிரித்த தனம் அதன் தலையைப் பிடித்து இழுக்க, தலை கையோடு வந்தது. அதற்குப் பின்னாலிருந்து நிஷாவின் முகம் வெளிப்பட்டு, அது அவனைப் பார்த்து ‘ஈ’யென்று இளித்தது. “ஏமாந்தியா குமாரு..?”

“அடிப்பாவி! உன்னய…” என்று பல்லைக் கடித்தவாறே அவன் துரத்த தனலட்சுமியைச் சுற்றிச் சுற்றி ஓடினாள். “அத்தே, என்னையக் காப்பாத்து…”

குமாரின் சட்டையைப் பிடித்து நிறுத்தினாள் தனலட்சுமி. “டேய், விட்றா…. சக்கையா ஏமாந்துட்டு கோபம் வேற..” என்றபடி சோபாவில் தள்ளி விட்டாள்.

சோபாவில் தொபீரென்று விழுந்த குமார், “நீ சாதாரணமா கிட்ட வந்தாலே பயந்திருப்பேன். என்னத்துக்கு மெனக்கெட்டு மேக்கப்லாம் போட்டே..?” என்று சிரித்தான். அவன் அருகில் அமர்ந்த நிஷா, புஸ்புஸ்ஸென்று மூச்சு வாங்கியபடியே, “ஸாரிடா குமார்…” என்றாள். சிரித்தான்.

தே நேரம், வீட்டினுள் எண்ட்ரியானான் சங்கரன். “என்னப்பா நீங்க மட்டும் வர்றீங்க..? ஹரிபட்டர் எங்க..?”

“அந்த ஆள் வீட்ல இல்லம்மா. யாரோ பூதத்தோட வீட்ல பேய விரட்டப் போயிருக்காராம்..”

“என்னது..? பூதத்தோட வீட்ல பேயா..?”

“அவரோட ப்ரெண்டாம்டா. மாத்ருபூதம்னு பேரு. சுருக்கமா பூதம்னு கூப்டுவாங்களாம். அவர் வீட்ல ஒரு பேய் அட்டகாசம் செய்யுதாம். அதை விரட்டப் போயிருக்கார்னாங்க. வந்ததும் வரச் சொல்லி அட்ரஸ் தந்துட்டு வந்தேன்….”

“என்னது, பூதம், ஆவின்னு பேச்சு அடிபடுது..?” என்றபடி உள்ளிருந்து வந்தான் ஜெயராமன்.

“அது ஒண்ணுமில்ல மாம்ஸ். அத்தைய..” என்று ஆரம்பித்த நிஷாவைக் கையமர்த்தி அடக்கினான் சங்கரன். “ஒண்ணுமில்ல மாப்ள. என்னோட ப்ரெண்ட் ஒருத்தர் ஹரிபட்டர்ன்னு. அவரைப் பாக்கப் போனேன். அவர் ஒரு எக்சார்சிஸ்ட். அவரப் பத்தித்தான் பேசிட்ருந்தோம்.” என்று சமாளித்தான்.

“டேய் குமார், இவங்க ஊருக்குப் போற வரைக்கும் ஒரு ரெண்டு நாள் கண்டபடி அலையாம வீட்லயே இரு.” என்றபடி குமாரின் அருகில் அமர்ந்தான் ஜெ.ரா.

“தனம், ‘ஆவி’ பறக்க ஒரு காபி குடேன்..” -சங்கரன்.

“யோவ், இன்னொரு தடவ காபின்னு பேச்செடுத்த… கொன்றுவேன். ஒரு நாளைக்கு எத்தனைய்யா..?” கடுப்பானான் ஜெயராமன்.

அதே செகண்டில், ‘நானே வருவேன் இங்கும் இங்கும்’ என்று பி.சுசீலாவின் குரலில் பாடல் கேட்க, ‘ழே’யென்று விழித்தான். பாக்கெட்டிலிருந்த செல்போனை எடுத்துப் பேசினான் சங்கரன்.

“சொல்லுய்யா ஹரி. ஒரு அவசரம்னு தேடினா கிடைக்க மாட்டியே…”

“……………………………….”

“அப்டியா..? செரி, செரி, விஷயம் வேற ஒண்ணுமில்லய்யா. என் தங்கச்சிய ஏதோ பேய் பிடிச்சிருக்குமாட்ட இருக்குது. அதான்…. நீதான் வந்து விரட்டணும்.”

“என்னது..?” திடுக்கிட்டுப் போய்ப் பார்த்- தான் ஜெயராமன் / தாள் தனலட்சுமி / தான் குமார்.

“……………………….”

“என்னது..? பேய்மெண்ட்டா..? அதப்பத்தி நீ கவலையே படாதய்யா. இப்பவே ஜிபேய் மூலமா உன் அக்கவுண்ட்டுல பணம் போட்டுடறேன். வந்து சேரு..” என்று போனை கட் செய்தான் சங்கரன்.

“அடப்பாவி…” சீறினான் ஜெயராமன்.

“இதென்னய்யா புதுப் புரளி..? இங்க பேயுமில்ல, பிசாசுமில்ல…”

“அதானே..? அதுலயும் என்னைப் பேய் பிடிச்சிருக்குன்னு என்னைய வெச்சுக்கிட்டே சொல்ற. நான் நல்லாத்தானேண்ணா இருக்கேன்..?” என்றாள் தனம்.

“சும்மாயிருங்க மாப்ள. நாங்கள்ளாம் கிராமத்துல புழங்கினவங்க. பாத்ததுமே கண்டுபுடிச்சுடுவோமாக்கும். தனம் உங்ககிட்ட நடந்துக்கற விதத்துல வித்யாசம் தெரியுது… மாப்ளே… என்னிக்கு எங்க தனம் நீங்க சொன்னா மறுபேச்சு பேசாம எதயும் செஞ்சிருக்கா..? கெஞ்சு கெஞ்சுன்னு கெஞ்சுவீங்க.. இப்ப என்னடான்னா… பாத்ரூம் போகணும்னாக் கூட உங்க மூஞ்சப் பாக்கறா. பேந்தப் பேந்த முழிக்கறா. இதுக்குல்லாம் என்ன ரீஸன் மாப்ளே..? நீங்களே யோசிச்சுப் பாருங்க…”

திகைத்துப் போனான் ஜெயராமன். “அடேய் பாவி ஜீனி….. உன்னால வந்த வினையா இது..? எங்கடா போய்ட்ட..?” என்று மேலே பார்த்துக் கத்தினான்.

இப்போது திகைத்துப் போவது சங்கரன் / நிஷாவின் முறை.

“ஏன் டாட்..? பேய் பிடிச்சிருக்கறது அத்தையவா, இல்ல, மாம்ஸையா..? காத்தைப் பாத்துப் பேசறாரே…” மெல்ல காற்றுக் குரலில் சங்கரனின் அருகேவந்து கேட்டாள் நிஷா.

“எனக்கும் அதான்மா புரியல. ரெண்டு பேருக்குமே ஏதோ ஆயிருக்குமாட்டருக்குது. எதாருந்தா என்ன..? ஹரிபட்டர் ஒரு கை பாத்துடுவான். அவனுக்கு யோகம், டபுள் பேமெண்ட்….” சங்கரனின் குரலில் பதட்டம் இருந்தது.

ஜெயராமன் மெல்ல எழுந்து தன் அறைக்குச் சென்றிருக்க, தனலட்சுமி புரியாமல் பார்த்துவிட்டு சமையலறை நோக்கிப் போனாள்.

குழப்பமாக சங்கரனைப் பார்த்தான் குமார். “அங்க்கிள், நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கறீங்கன்னே புரியல. கதை வசனத்தக் கொஞ்சம் சுருக்கமா எனக்குச் சொன்னீங்கன்னாத் தேவலை….”

“இப்டி வாடா..” என்று அவனை அருகில் அமரவைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தான் சங்கரன்.

“……………………………

இதாண்டா விஷயம்..” சொல்லி முடித்தான் சங்கரன்.

“ஓ, ஐ ஸீ… ஏன் அங்க்கிள், இத்தனை நாளா அப்பாவை அதிகாரம் பண்ணினது சலிச்சுப் போய் அம்மாவே மாறியிருக்கலாம் இல்லையா.? எனக்கென்னமோ நீங்க தப்பா அண்டர்ஸ்டாண்ட் பண்ணிருக்கீங்களோன்னு தோணுது…”

“சான்ஸே இல்லடா. எந்தப் பொண்டாட்டி, ஹஸ்பெண்ட் சொன்னா எதையும் அப்டியே அடுத்த செகண்ட் செய்வா..? ஈஸ்வரன் பொண்டாட்டிகூட சொன்ன பேச்சைக் கேட்டதா புராணத்துலயே இல்லைடா. இதுல என்னவோ கோளாறு நிச்சயம் இருக்கு..”

“கோளாறு இருந்தா நல்ல சைக்யாட்ரிஸ்ட் கிட்ட காட்டணும் அங்க்கிள். பேய், பிசாசுன்னு நினைக்கறதெல்லாம் ஹைலி இடியாட்டிக். அதை விரட்டறேன்னு வேற எவனோ ஒருத்தனுக்கு தெண்டச் செலவு பண்ணப் போறீங்க..”

“நீ சிட்டிலயே வளர்ந்த பயல். உனக்கு இதெல்லாம் புரியாது. ஹரிபட்டர் பெரிய ஆளாக்கும்..”

“என்னத்த பெரிய ஆள்..? இந்த எக்ஸார்ஸிஸ்ட் எல்லாம் என்ன பண்ணுவாங்கன்னு எனக்குத்தான் தெரியுமே.. சாட்டையால அடிப்பாங்க, இல்ல, வேப்பிலையால அடிப்பாங்க பேய விரட்ட. ஆகமொத்தம், ஏதோ ஒண்ணத்தால அடி கன்பர்ம்.”

“சேச்சே… இவர் அந்த மாதிரி டைப் ஆசாமியே கெடையாதுடா. ஏதேதோ சித்த மூலிகை எண்ணையல்லாம் கொதிக்க வெச்சு ஆவியாக்கி அதை ஒரு ஸ்ப்ரேயர்ல அடக்கி வெச்சிருப்பார். அத மூஞ்சிக்கு நேரா அடிச்சா, எந்தப் பேயா இருந்தாலும் தெறிச்சு ஓடிடும். அந்த பேய்கான் ஸ்ப்ரேக்கு அப்டி ஒரு சக்தியாக்கும்…”

“ஓகோ… சரி, வரட்டும். அந்தாளையும் பாக்கறேன். பட், மம்மிக்கு டிஸ்டர்பன்ஸ் எதுவும் வரக்கூடாது அங்க்கிள். அப்பறம் நான் பேயாடிடுவேன்..” சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தான் குமார்.

“அடப்பாவி… நீயும் பேயாடுவியா..? குடும்பமே பேய்க் குடும்பமாய்ட்டீங்க போலயே…” என்ற நிஷா, அவன் கோபமாக எழ, சட்டென்று காணாமல் போனாள்.

தேநேரம்…

உள்ளறையில் தனியே நின்று புலம்பிக் கொண்டிருந்தான் ஜெயராமன்.

“அடேய் ஜீனி…. எங்கடா போய்த் தொலைஞ்ச..? நீ திரும்ப வர்றதுக்குள்ள இங்க என்னென்னமோ கந்தரகோளமாய்டும் போலருக்கே…”

திடீரென மண்டையில் தட்டிக் கொண்டான். “ச்சே… ஏதோ படத்துல ஜெமினிகணேசன் பண்ணுவாரே… மேலுலகத்துல இருக்கற காதலியக் கூப்புட புல்லாங்குழல் வாசிக்கறதுன்னு… அப்டி ஏதாச்சும் இந்த ஜீனிப்பயல் கிட்ட வாங்கி வெச்சுக்காம போய்ட்டேனே…”

அறையில் அங்குமிங்குமாக நடந்தான். “என்ன செய்யலாம்..?”

சட்டென்று பிரகாசமானான். “இந்த அலாவுதீனோட அற்புத விளக்கைத் தேய்ச்சா அதுலருந்து பூதம் வரும்னு சினிமாவுல பாத்திருக்கேனே… அதுபோல இந்த பாட்டிலைத் தேச்சுப் பாத்தா ஜீனி வருமோ என்னமோ… யாரு கண்டா..?”

வேகமாக அந்த பாட்டிலை எடுத்துவந்து அதைத் தடவிக் கொடுத்தான். மெல்லத் தேய்த்தான். அழுந்தத் தேய்த்தான். ம்ஹும்.. ஒன்றும் நடக்கவில்லை. சோர்ந்தான்.

“அவனா வந்தாத்தான் உண்டு போல. அடேய் ஜீனி, எப்போ வருவாயோ, எந்தன் கலி தீர…” என்று மெல்லிய குரலில் புலம்பினான். குழப்பத்துடன் அறையில் அங்குமிங்கும் நடக்கத் துவங்கினான்.

அவனது நடவடிக்கைகளை ஜன்னல் வழியாக அதுவரையில் பார்த்துக் கொண்டிருந்த இரு விழிகள் இப்போது ஜன்னலை விட்டு நகர்ந்தன.

–பூதம் வரும்..

ganesh

1 Comment

  • எப்போ வருவாரோன்னு டென்ஷன்.
    பார்த்/தாள்/தான்.. பேய்க்கதையின் நடுவில் குறும்பா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...