ஒற்றனின் காதலி | 6 | சுபா

 ஒற்றனின் காதலி | 6 | சுபா

நான் அயர்ந்து போனேன். எந்தப் பெண்ணைத் தேடி நான் தக்கலை தங்க வயல் முழுக்க, நாயாய், பேயாய் அலைந்து கொண்டிருந்தேனோ, அதே பெண் இப்போது கண்ணெதிரே.

அவளைக் கண்டால், பொசுக்க வேண்டும். தொட்டால், நெறிக்க வேண்டும் என்ற உணர்வெல்லாம், ஓவர்ஹெட் டாங்க்கின், அடி ஓட்டையைத் திறந்தவுடன் வழியும் நீர்போல, அப்படியே வடிந்து விட்டது.

அவள், என்னை ஏமாற்றுபவளாய் இருந்தால் மறுபடியும் இந்த இடத்திற்குத் தேடி வந்திருக்க மாட்டாளே!

“வாருங்கள்” என்றேன், “உட்காருங்கள்” என்றேன்.

அவள் உட்கார முயன்ற சமயம், “உட்காராதீர்கள்” என்று, பதறும் குரலில் சொன்னேன். அவள் திடுக்கிட்டுப் போய் பாதி உட்காரும் போஸில் அப்படியே உறைந்து நின்றாள். நான், அவள் உட்காரவிருந்த நாற்காலியில் இருந்த காஃபிக் கோப்பையை எடுத்து டீப்பாயில் வைத்து, என் துருக்கியத் துண்டால் நாற்காலியைத் தட்டினேன்.

“உட்காருங்கள்.”

அவள் ஒரு விடுதலை உணர்வுடன், பெருமூச்சு விட்டு அமர்ந்தாள்.

“புது விதமாய் இருக்கிறது உங்கள் வரவேற்பு” என்றாள்.

“பையன் வரவில்லை, அதனால் ரூம் பார்க்க தகுந்த நிலையில் இல்லை.”

“ஆண்பிள்ளைகள் இருக்கும் அறை இவ்வளவு சுத்தமாய் இருப்பதை நான் இப்போதுதான் பார்க்கிறேன்” என்றாள்.

“தாங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட்ஸ்” என்றேன். அவளுக்கு ஆங்கிலம் புரியும் என்ற நம்பிக்கையில்.

வெட்கப்பட்டாள்.

“நீங்கள் சமயத்தில் கொடுத்த பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டுப் போக வந்தேன்! கொடுக்க வேண்டாம் என்றுதான் இருந்தேன். நீங்கள் கொடுக்க வேண்டாம் என்ற சொன்னதால். ஆனால், மனது கேட்கவில்லை. நீங்கள் அன்றைக்கு ஹெல்ப் பண்ணியிருக்காவிட்டால், என்னைப் பற்றி, ஹோட்டல்காரன் எவ்வளவு மட்டமாக எடை போட்டிருப்பான். அதனால், ஒரு வாரமாக யோசித்து, யோசித்துக் கடைசியில் இன்றைக்கு கொடுத்துவிடுவது என்ற முடிவோடு வந்தேன்” என்றாள் அவள். அப்பாவித்தனமாக.

பாம்பா, பழுதா என்ற தெரியவில்லை.

கையில் ஒரு பத்து ரூபாயை எடுத்து நீட்டினாள். கரன்ஸி மணம் மாறாத, புத்தம் புது பத்து ரூபாய்.

“உங்களோடு நான் பேசப் போவதில்லை” என்றேன்.

“ஐயோ… ஏன்?” அவளுடைய ஐயோவில் ஒரு மாதிரியான மலையாள வாடை இருந்தது. யோவை இழுத்துச் சொன்ன விதம், அபாரமாக இருந்தது. அவளை அப்படியே இழுத்துப் படுக்கையில் சாய்த்து, அவளை, என் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து… வேண்டாம், அவசரப்படாதே. பதறும் காரியம் சிதறும்.

“உங்களால் நான் அடிபட இருந்து தப்பித்தேன்.”

“ஐயோ… எப்படி?”

“அது ஒரு சோகக் கதை.”

“என்ன ஆயிற்று?”

“நான் உங்களை உங்கள் வீட்டருகில் இறக்கி விட்டேனா… இறக்கி விட்டு ரூமுக்குத் திரும்பினேனா… ஆட்டோவில் இருந்து இறங்கும் போது பார்த்தால், பின் சீட்டில் பளபளப்பாய் ஒரு பிளாஸ்டிக் டப்பா இருந்தது. உள்ளங்கை அகலம். ரத்தச் சிவப்பு நிறம். அது ஏதாவது நகைப்பெட்டி, கிகைப் பெட்டியாக இருக்கப் போகிறது என்று திறந்தேன். திறந்தால் சங்கீதம் கேட்டது. ஒரு இங்கிலீஷ் டியூன். ட்யூனுக்கு ஏற்றமாதிரி பெட்டியின் உள்ளே வெல்வெட்டில் பதிக்கப்பட்டிருந்த ஒரு ஆண் பிளாஸ்டிக் பொம்மையும், பெண் பிளாஸ்டிக் பொம்மையும் கைகோர்த்து நடனம் ஆடினார்கள்… ஃபாரின் சமாச்சாரம். அற்புதமான பொம்மை. நீங்கள்தான் தவறவிட்டுப் போய்விட்டீர்கள் என்று எனக்குத் தோன்றியது. நீங்கள் ஒருவேளை வந்தாலும் வருவீர்கள் என்று இரண்டு நாட்கள் காத்திருந்தேன். நீங்கள் வராததால், மூன்றாம் நாள் உங்களைத் தேடிக் கொண்டு உங்கள் வீட்டிற்குப் போனேன்..”

நான் சொல்லச் சொல்ல அவள் விழிகள் விரிந்தன.

“அதாவது உங்கள் வீடு என்று நீங்கள் இறங்கிக்கொண்ட, இடத்தில் இருப்பது உங்கள் வீடு என்று நினைத்துப் போனேன். ஒரு கிழவி இருந்தாள். நீக்ரோ மாதிரி ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணை நான் காதலிக்க வந்துவிட்டேனோ என்று கிழவி சந்தேகப்பட்டாள். அவர்கள் வீட்டுப் பையனைக் கடத்திக் கொண்டு போக வந்த பிள்ளை பிடிக்கிறவனோ? என்ற சந்தேகம் வேறு கிழவிக்கு. லபோ, திபோ என்று கத்தல். ஒரு படையே வந்துவிட்டது. அங்கிருந்து தப்பித்து வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது.”

“ஐ’ம் ஸாரி சிவரஞ்சன்” என்று கொஞ்சும் குரலில் சொன்னாள் அவள். “இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால், நான் அப்படிச் செய்திருக்கவே மாட்டேன்.”

“எப்படி?”

“உங்களை ஏமாற்றி இருக்க மாட்டேன். பொய்யான தகவலைச் சொல்லி இருக்க மாட்டேன்.”

“ஏன் சொன்னீர்கள், அந்த மாதிரி ஒரு பொய்யை?”

“பின்னே… முன்பின் தெரியாத ஆண்களிடம் எல்லாம் அட்ரஸ் சொல்கிற மாதிரியா நம் ஊர் இருக்கிறது?” என்று கேட்டாள்.

புத்திசாலிதான். கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடனேயே பிறப்பெடுத்திருப்பவள். இவளிடம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

“முன்பின் தெரியாத ஆண் பிள்ளையின் ரூமுக்கு மட்டும் வரலாமா?”

“வாசலில் என் வீட்டு வேலைக்காரப் பெண் இருக்கிறாள். பத்து நிமிஷத்தில் நான் திரும்பி வராவிட்டால், அவள் லாட்ஜ் ஓனரிடம் சொல்லுவாள். லாட்ஜ் ஓனர், இரண்டு பேர்களுடன் இந்த ரூமுக்கு வருவார். தமிழ்நாட்டில், அந்த விஷயத்தில் மட்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு. தங்களுக்குக் கிடைக்காத பெண் அடுத்தவனுக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் எல்லா ஆண்களுக்கும் இருப்பதால், லாட்ஜ் ஓனர் நிச்சயம் வந்து விடுவார்.”

“ஐயையோ” என்று பதறி எழுந்தேன். முதலில் கதவைத் திறந்தேன். அது தானாக மறுபடி மூடிக்கொள்ளப் பார்த்தது. கதவைத் திறந்தே வைத்திருக்க முடியாதபடி ஆட்டோமாடிக் டோர் – ஷட்டர் பொருத்தப்பட்ட கதவு அது.

“எழுந்திருங்கள்” என்றேன்.

“எங்கே?”

“முதலில் வெளியே போகலாம். இங்கே வேண்டாம். இங்கே இருக்கும் ஒவ்வொரு வினாடியும் என் எலும்புக்கு ஆபத்து போல் எனக்குத் தோன்றுகிறது.

சிரித்தாள். அசையவில்லை.

“ஐயோ, எழுந்திருங்களேன். வெளியே போய் ஒரு காஃபியாவது சாப்பிடலாம்” என்றேன். ‘ஐயோ’வை அவளுடைய பாணியிலேயே உச்சரித்தேன்.

எழுந்து கொண்டு விட்டாள். நான், அவளுடன் கீழே இறங்கினேன். லாட்ஜ் ரிசப்ஷனிஸ்ட் அப்படி ஒன்றும் மேலே ஏறிவரும் தயாரில் இல்லை.

பக்கத்திலேயே கோல்ட் ஃபீல்ட் என்று ஒரு ஹோட்டல் இருக்கிறது.

“போகலாமா?” என்றேன்.

“ம்.”

“எங்கே?”

“என்னது எங்கே?”

“உங்களோடு உங்கள் வேலைக்காரி வந்திருப்பதாகச் சொன்னீர்களே?”

“உங்கள் ரியாக்ஷனைப் பார்ப்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்” என்றாள்.

எனக்கு நிஜமாகவே அவளை அறையலாம் போலத் தோன்றியது.

எவ்வளவு சாதுரியமானவள்..!

ஹோட்டலுக்குள்ளே போனோம். ஃபாமிலி ரூமில் நுழைந்தேன். அவளும் நுழைந்து என் எதிர் நாற்காலியில் உட்கார்ந்தாள்.

“என்ன சாப்பிடுகிறீர்கள்..?”

“ஜஸ்ட் காஃபி.”

“ஓ.கே. இரண்டு காஃபி” என்றேன், கேள்விக்குறியுடன் என் முகம் பார்த்த சர்வரிடம்.

காஃபி குடித்தோம். அப்புறம் என்ன பேசுவது? கடன் தீர்த்து விட்டாள். இத்தோடு அவள் உறவை முறித்துக் கொள்ளத் தயாராக இல்லை. ஏதாவது ஒன்றைப் பேசி உறவு வளர்க்க வேண்டும்.

“இப்போது கூட உங்கள் ஒரிஜினல் அட்ரஸைச் சொல்லமாட்டீர்களா?” என்றேன்.

“எதற்கு..?” என்று சிரித்துக்கொண்டு கேட்டாள்.

“நான் இந்த ஊருக்குப் புதியவன். லாட்ஜில் தங்கியிருக்கிறேன். லாட்ஜில் இருப்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத விஷயம். உங்கள் மூலமாகத் தெரிந்தவர்களிடம் வாடகைக்கு வீடு இருந்தால் எடுத்துக் கொள்ளலாமே?”

“என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“நான் ஒரு ரெப்ரசென்டேடிவ். ராஜஸ்தானில் மார்பிள் நிறைய. இங்கே யாருக்காவது மார்பிள் தேவைப்பட்டால், நான் ஆர்டர் புக் செய்து, ராஜஸ்தானில் இருந்து மார்பிள் வரவழைத்துத் தருவேன். மார்பிள் மட்டும் என்றில்லை. கோட்டா ஸ்டோன், ஸாண்ட் ஸ்டோன், கிரானைட் என்று, எல்லாவிதமான டெகொரேடிவ் கற்களுக்கும் நான் ரெப்ரசென்டேடிவ். ஒவ்வொரு ஊராகச் சுற்றுவேன். ஒரு ஊரில் ஒரு வருடம், மூன்று வருடம் என்று ஊரின் கப்பாசிட்டிக்கேற்பத் தங்கி இருப்பேன். அப்புறம் இன்னொரு ஊருக்குப் போவேன். ஃபாரின் ஆர்டர் கூட கான்வாஸ் பண்ணுகிறேன். இத்தாலியில் டைல்ஸ் ஜோராக இருக்கும். இங்கே இருக்கிறவர்களுக்கு இத்தாலி டைல்ஸ் வேண்டுமென்றால், வரவழைத்துக் கொடுப்பேன். ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ, நான் இங்கே தங்கியிருக்கும் நாளெல்லாம் லாட்ஜில் இருப்பது என்பது அவ்வளவு நன்றாக இருக்காது பாருங்கள். அதனால்தான் உங்கள் அட்ரஸ் கேட்டேன். இந்த ஊரிலேயே எனக்கு அறிமுமானது நீங்கள்தான். உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் போய்க் கேட்கப் போகிறேன்.”

“இந்த முறை நிஜ அட்ரஸ் தருகிறேன்” என்றாள்.

“பெயர் கூட நிஜப் பெயரைச் சொன்னால் நன்றாக இருக்கும்”

“உமாதேவி.”

“உமா என்று கூப்பிடலாமா? அதுதான் ஃபாமிலி பெயராக இருக்கிறது. தேவி என்பது என்னவோ சினிமாக்காரர்கள் வைத்துக் கொள்ளும் பெயர் போல இருக்கிறது.”

“கூப்பிடுங்களேன்” என்றாள், எழுந்து கொண்டாள்.

நானும், அவளுடன் சேர்ந்து எழுந்து கொண்டேன்.

“இந்த முறை நேராக உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து உங்களை ட்ராப் பண்ணலாமா?”

“பை ஆல் மீன்ஸ்.”

“உங்கள் இங்கிலீஷ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது. என்ன படித்திருக்கிறீர்கள்?”

“பி.ஏ.லிட்ரேச்சர்.”

“நான் கூட.”

“பி.ஏ.லிட்ரேச்சரா?”

“இல்லை, எம்.ஏ.லிட்ரேச்சர்.”

“என்னைவிட ஒரு படி மேல் என்று சொல்லுங்கள்.”

ஆட்டோவில் இந்தமுறை அவள் அவ்வளவு ஒதுங்கி உட்காரவில்லை. கொஞ்சம் நடுவிலேயே உட்கார்ந்தாள்.

“இப்போது மட்டும் எப்படி என்னைத் தைரியமாக வீட்டுக்குக் கூட்டிப் போகிறீர்கள்?”

“கேள்வியே புரியவில்லை.”

“போன தடவை ஏதோ ஒரு வீட்டுக்குப் பக்கத்தில் இறங்கிக் கொண்டீர்களே!”

“அப்போதுதான் உங்களோடு நான் அறிமுகமானேன். எல்லா ஆண்களையும் நம்ப முடியுமா? என்று தெரியவில்லை.”

“இப்போது மட்டும்?”

“நான்தான் உங்கள் ரூம் வரை வந்து, உங்கள் ரியாக்ஷனை எல்லாம் பார்த்தேனே. நீங்கள் நம்பிக்கையானவர் என்று எனக்குத் தோன்றுவதால்தான் உங்களைக் கூட்டிப் போகிறேன்.”

வீட்டு வாசலில் ஆட்டோ நின்றது. நேரு சுரங்கத்திற்குப் பக்கத்தில்தான் இந்த வீடும். அவள் காட்டிய கிழவி வீட்டிற்கும், இந்த வீட்டிற்கும் ஒரு ஃபர்லாங் தூரம் கூட இருக்காது. இவ்வளவு பக்கம் வரை வந்து, என்னை அவள் ஏமாற்றிவிட்டாளே என்ற ஆண்மைத் திமிர், இப்போதும் என்னுள் மூர்க்கமாக மூண்டது.

இருக்கட்டும். அடக்கியே வாசிக்கலாம். அவளை அடிமைப்படுத்தும் வரை நான், அவளுக்கு அடிமையாக நடித்துத்தான் ஆக வேண்டும்.

அவள் இறங்கினாள். மறந்து விட்டேனே… அவள் டிரஸ்ஸை உங்களுக்கு அறிமுகப்படுத்தத் தவறிவிட்டேனே… சிவப்பு, சிவப்பு, சிவப்பு, சிவப்பு, சிவப்பு, சிவப்பு ரிப்பன். தோடு, ரவிக்கை, புடவை, வளையல், செருப்பு, மூக்குத்தி அணிந்திருந்தாள், அதில்கூட சிகப்புக்கல். முன்பு அறிமுகமான போது மூக்குத்தி குத்தியிருக்கவில்லை. அதனால், இது க்ளிப் டைப் மூக்குத்தியாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன்.

ஒருபுறம் பார்த்தால், குங்குமக் காளிபோல் தோன்றினாள். மறுபுறம் பார்த்தால், எனக்கு டாலர் வரம் அளிக்க வந்த சிகப்பு தேவதை போலத் தெரிந்தாள்.

வீட்டின் கதவு பூட்டியிருந்தது. சாவி போட்டுத் திறந்தாள்.

“ப்ளீஸ் கம் இன், எங்கள் குடிசைக்கு விஜயம் தாருங்கள்.”

“வீட்டில் யாருமில்லை?”

“இல்லை.”

“அப்படியானால், நான் அப்புறம் வருகிறேன்.”

“ஏன்?”

“அப்படித்தான்.”

“அதெல்லாம் இல்லை. வந்துதான் ஆக வேண்டும். நீங்கள் மட்டும் தனியாக இருக்கும் ரூமுக்கு நான் வரவில்லையா? நீங்கள், எங்கள் வீட்டிற்கு வரக்கூடாதா? விமன்ஸ் லிபரேஷனில் நம்பிக்கை உள்ளவள் நான்.”

கதையில்தான் ஒரு பெண் இவ்வளவு ப்ரீயாக பழகுவாள். நான் சந்தித்த பெண்களிடமெல்லாம் ஒரு வார்த்தை பேசுவதற்குள் எவ்வளவோ தண்ணீர் குடித்திருக்கிறேன். உமாதேவி, என்னவோ ஜன்ம, ஜன்மமாக என்னுடன் இணைந்து இருந்திருக்கிறாள் என்ற, உணர்வை என்னிடம் ஏற்படுத்தினாள். இவளைப் போயா நான் அந்த மாதிரி செய்யப் போகிறேன்? பேசாமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டால் என்ன?

அதைப்பற்றி அப்புறம் யோசிக்கலாம். நுழைந்தவுடன் ஹால் இருந்தது. சின்ன ஹால்தான். ‘ப’ வடிவில் சோஃபா செட். கரும்பச்சை நிறத்துணி போட்டு நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தது. டீப்பாயில் கண்ணாடி. கண்ணாடிக்குக் கீழே கரும் பச்சை வெல்வெட்.

“உட்காருங்கள்” என்றாள்.

உட்கார்ந்தேன். “நீங்கள் என்ன ஏவாளா?”

“அப்படி என்றால்?”

“ஈடன் தோட்டத்தில் தனியாக இருந்த ஏவாள் மாதிரி, இந்த வீட்டில் தனியாக இருக்கிறீர்களே. அம்மா, அப்பா, தம்பி, தங்கை?”

“நான் என் பேரன்ட்ஸுக்கு ஒரே பெண். இந்த ஊருக்கு வாழ வந்தவள்.”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வாழ வந்தவள் என்றால் வேலை தேடி வந்தவள் என்று சொல்லலாம். இல்லாவிட்டால், கல்யாணமாகி வந்து செட்டில் ஆனவள் என்று சொல்லலாம். உமாதேவி, கல்யாணமானவளா?

“இங்கே வேலையில் இருக்கிறீர்களா?”

“ம்ஹூம். என் கணவர்தான் வேலையில் இருக்கிறார், அதோ…”

அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் நான் பார்த்தேன். சுவரில் ஏழடி உயரத்தில் இருந்த ஒரு போட்டோவில் அவளும், அவள் கணவனும்.

பாப்ரே, கல்யாணமானவளா? எனக்கு சான்ஸே இல்லையா?

தாலி, கீலி என்று எதுவுமே இல்லையே. நான் என்ன செய்வதென்று புரியாமல் கதவிடுக்கில் அகப்பட்ட எலிபோல் உணர்ந்தேன்.

–காதலி வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...