கிருஷ்ணை வந்தாள் | 5 | மாலா மாதவன்

 கிருஷ்ணை வந்தாள் | 5 | மாலா மாதவன்

விண்ண ளாவும் பெருமை – உந்தன்

வித்தை யாவும் அருமை

மண்ணின் மீது நாங்கள் – நின்று

மனம் உருகித் தொழுதோம்

பண்ணும் பாடி வைத்தோம் – எங்கள்

பாதை சிறக்க வருவாய்

கண்ணைப் போலக் காப்பாய் – காளி

காத்து நிற்பாய் என்றும்

ஜோதியுடன் உள்ளே வந்த அகல்யா என்ன நினைத்தாளோ தெரியவில்லை. கூடத்து ஊஞ்சலில் அதிவேகமாக ஆட ஆரம்பித்தாள். பின் சடாரென அதை அப்படியே விட்டுவிட்டுச் சமையலறைக்கு வந்தாள். சட்னிக்குத் தக்காளியை வாணலியில் வதக்கிக் கொண்டிருந்த ஜோதியிடம்..

“எனக்கு என்னாச்சு பெரியம்மா. நான் அங்க கொல்லைப்புறம் தானே பேசிண்டு இருந்தேன்.. எப்படி உள்ள வந்தேன்..?”

‘இதென்னடியிது..? நான் போய்த் தொட்டதும் இவளா தானே நடந்து வந்தா. அதுக்குள்ள மறந்துட்டாளே. சுந்தர் சொன்னது சரியாத் தானிருக்கு.’

நினைத்த ஜோதி…

“அதுவா அகல்யா..? உனக்கு மறந்து போச்சுபோல. இதோ வரேன் பெரியம்மான்னு நீ தான் எழுந்து வந்த. ஆமா… யாரோட பேசிண்டு இருந்த..?” கொக்கி இட்டாள்.

“நம்ம காளியம்மா தான் பெரிம்மா. ஆலம்பாடி காளி.. அவதான் நான் கிருஷ்ணைன்னு கூப்பிட்டதும் ஓடி வந்து என்னோட பேசுவா.”

‘நம்பற மாதிரியா இருக்கு? தினம் தினம் பூஜை பண்றவா, வேதம் படிச்சவா, அவளை மந்திரத்தால் பூஜிக்கறவா, ஞானியர், யோகியர் இவா கண்ணுக்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் புலப்படாதவா சாதாரண பெண்ணுக்கு காட்சி தரதாவது? இந்தப் பொண்ணுக்கு சுந்தர் சொல்ற மாதிரி சித்தம் கலங்கித் தான் போச்சு. மெதுவாத் தான் கையாளணும்’ என நினைத்தவள்…

“சுந்தர்..! அகல்யாவைப் பாரேன். உனக்கு உடம்பு முடியாததில் இருந்து வீட்டிலேயேதான் இருக்கிறாள். முதியோர் கல்விக்கும் போகலை. ட்யூசனுக்கும் போகலை. இப்பதான் நாங்க ரெண்டு பேர் உன்னைப் பார்த்துக்க இருக்கோமே. இவளைப் போகச் சொல்லுப்பா.” சொல்லு என்பதைப் போலக் கண்ணைக் காட்டினாள்.

“ஆமா அகல்யா. பெரியம்மா சொல்றபடி உனக்கும் ஒரு டைவர்ஷன் வேணும்மா. இன்னில இருந்து போய்ட்டு வா.”

“சரிப்பா!” சொன்ன அகல்யா மடமடவென்று சமையல் கட்டுக்குப் போய் எல்லோருக்கும் இட்லியும், சட்னியும் செய்து வைத்து விட்டுக் கிளம்பினாள். இரவு ஏழு முதல் ஒன்பது வரை வகுப்பு இருக்கும். அதனால் வகுப்புக்குச் செல்லும் முன்னரே இங்கு சமையலை முடித்து விடுவாள். அந்தப் பழக்கம் இப்போதும்.

டியூஷன் செண்டருக்குப் போகும் போது ஏற்கனவே சிறுவர் சிறுமிகள் வந்து காத்திருந்தனர்.

“ஹை அகல்யாக்கா வந்தாச்சு.” குழுமிக் கொண்டனர்.

“அக்கா..! அக்கா..! நீங்க வராம நல்லாவே இல்லக்கா..! மேத்ஸ்லாம் நாங்களே ஏதோ போட்டோம்.”

“அக்கா..! எப்படிக்கா இருக்கு உங்கப்பாக்கு..? சரியாப் போச்சா..? இனி தினைக்கும் வருவீங்களாக்கா..?”

“அக்கா..! மிஸ்டு யூ சோ மச்..!” எனக் கலவையாய்க் குரல்கள் ஒலித்தன.

நெகிழ்ந்து விட்டாள் அகல்யா. இத்தனை கரிசனமும், பரிவும் வெறும் பாடம் நடத்தியதால் மட்டும் வரவில்லை.. அதையும் மீறி ஒரு பாசம். இத்தனை நாள் இதையெல்லாம் இழந்து தனிமையில் வாடினேனே… தனிமைக்குள் கிடைப்பது வருத்தமும், வாட்டமும்தான். புரிந்து கொண்டவள் அக்குழந்தைகளின் முன் குழந்தையாகிப் போனாள்.

“அப்பா நல்லா இருக்காருப்பா. நாம பாடத்தைப் படிப்போமா..? படிச்சுட்டு அப்புறம் அரட்டை அடிக்கலாம்.. ஆமா. இன்னிக்குப் பெரியவங்க யாரும் வரலயா..? வீராத்தாத்தா மட்டும் ஒத்தையா பீடி குடிச்சுட்டு தேமேன்னு உட்கார்ந்திருக்காரு. “

அகல்யா தன் பேரைச் சொன்னதும் வீராத்தாத்தா தன் பொக்கை வாயைத் திறந்து சிரித்தார்.

“நீ வராம இருக்கவும் மத்தவங்கல்லாம் கெளம்பிட்டாங்க தாயி. எனக்கு ரோஷம்.. எப்படியாச்சும் என் கையெழுத்த நான் போடணும். அத மட்டும் சொல்லிக் கொடு தாயி. வேற எழுத்தெல்லாம் வேணாம்..!” என்றவரைப் பார்த்துச் சிரித்து விட்டாள் அகல்யா.

“கட்டாயம் தாத்தா. ஆனா நீங்க வீராச்சாமின்னு உங்க முழுப் பெயரையும் எழுதணும். சரியா..?” எத்தனையோ தரம் சொல்லிக் கொடுத்திருந்தாலும் தப்பாகவே எழுதும் அவரை மீண்டும் எழுத உற்சாகப்படுத்தினாள்.

அதற்குள் ஒரு சிறுவன் கிட்டே வந்து..

“அக்கா..! நீங்க சொன்னமாதிரி கணக்குப் பாடம் முடிச்சிட்டேங்கா. இனி தமிழ் எடுக்கவா..? அதுல திருக்குறள் மனப்பாடம் பண்ணச் சொன்னாங்க!”

“டேய்.. என்னையே ஏமாத்துறியே.. ஒண்ணுமே ஒழுங்காப் போடல. திரும்பப் போடுடா. தமிழை வீட்டுல போய் படிச்சுக்க..!” சொன்னவள் அவன் நோட்டில் அந்தக் கணக்குக்கான விடையைத் தெளிவாக எழுத ஆரம்பித்தாள்.

எல்லோரும் முடித்த பின் அரட்டைக்கெனவே உட்கார்ந்தனர் குழந்தைகள்.

“அக்கா.. உங்களுக்குப் பைத்தியம்ன்னு நிறையப்பேரு சொன்னாங்க. அதான் நீங்க எங்களுக்குப் பாடம் நடத்தக் கூட வரலைன்னு..” கோபி என்ற சிறுவன் வெடிகுண்டை வீசி எறிந்தான்.

“டேய்.. நம்ம அக்காடா! அதெல்லாம் சொல்லக் கூடாது..!” இடையிட்டான் மற்றொருவன்.

அகல்யா தீர்க்கமாக கோபியையே பார்த்தாள். பின் கண்ணை மூடிக் கொண்டவள் அசரீரி போல்…

“கோபி..! உன் அம்மாட்ட அவங்க கண்ணை பத்திரமா பார்த்துக்கச் சொல்லு..! உடனே வைத்தியம் பார்க்கச் சொல்லு. உடனே..!” ஆணையிடுவது போல் அவள் குரல் ஒலித்தது.

“உங்களைப் பைத்தியம்ன்னு சொன்னது எங்க அம்மா இல்லக்கா..!”

“தெரியும்டா. நான் அதற்கு சொல்லலை. அவங்க உடல்நிலையில் கவனம் வைக்கணும் நீங்க..!”

“அதெப்படிக்கா உங்களுக்குத் தெரியும்..? எங்கம்மா கண்ணை செக் செஞ்சீங்களா..?”

“செக் செஞ்சது நானில்லடா. கிருஷ்ணை. அவ தான் இப்ப என் மூலமாச் சொல்றா உனக்கு..!”

அகல்யா அவனைப் பார்த்து முறுவலித்தாள்.

“கிருஷ்ணைன்னா யாருக்கா? நம்ம க்ளாஸ்ல கிருஷ்ணன்னு இதோ இவன் தான் இருக்கான். இவன் தான் எங்கம்மாக்கு கண் போகும்ன்னு சொன்னானா..?” கோபி தன் கையில் வைத்திருந்த நோட்டு புத்தகத்தால் கிருஷ்ணன் என்ற அந்தப் பையனை அடிக்க ஆரம்பித்தான்.

“டேய்.. விடுடா. எனக்கும் அதாருன்னே தெரியாதுடா. நான் ஏண்டா உங்கம்மாவச் சொல்லப் போறேன்..?”

“ஷ்..! கோபி! அவனை விடு. நானே தான் சொன்னேன். கிருஷ்ணனுமில்ல. கிருஷ்ணையுமில்ல.” அகல்யா அவர்கள் கைகளை விலக்கினாள்.

க்ளுக்கென்ற சிரிப்பொலி கேட்டது. அகல்யா அந்த சிரிப்பொலியிலேயே தெரிந்து கொண்டாள். கிருஷ்ணை வந்து விட்டாள். இந்தக் கூட்டத்தில் இவளோடு எப்படிப் பேசுவது..? எல்லோரும் ஏற்கனவே என்னைப் பைத்தியம்ன்னு முத்திரை குத்தியாச்சு.

குட்டிப் பாதம் சலங்கையுடன் சிணுசிணுக்கக் கிளுக்கிச் சிரித்தாள் கிருஷ்ணை.

“இப்பத்தானே போன..? திரும்பவும் வந்துட்டியா..?”

(நாங்க இங்க தானே இருக்கோம் அக்கா.. டேய்..! நாம எங்கடா போனோம்..?)

“என்ன… நீயும் என்னைப் போல் குறிசொல்றவ ஆகிட்டியா அகல்யா..?” கிருஷ்ணை கேட்டாள் குறும்பாய்.

“பின்ன நீ தான் எனக்குள்ள புகுந்துட்டியே. சொல்லாம எப்படி இருப்பேன்..?”

(நாம் எங்கடா புகுந்தோம்..? புகுந்துக்கறதுக்கு ஒரு சந்துபொந்துகூட இல்லையே!)

எதிரில் இருந்தவர்கள் உன்னிப்பாய் அவள் பேசுவதைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். பதிலுக்குப் பதில் பேசவும் ஆரம்பித்தார்கள்.

“அக்கா யாரோடடா பேசுது..?”

“ஏய்…அக்காவப் பாரேன்.. தன்னாலயே கையாட்டிப் பேசி சிரிக்குது. பைத்தியமே தான்.!”

“டேய்.. பேய் புடிச்ச அக்காடா..! ஓடியாங்கடா..!” ஒரு சிறுவன் கத்தியதில் குழந்தைகள் அனைத்தும் தறிகெட்டு வெளியில் ஓடின.

“அகல்யா.. நான் உன்னால் வெளிவந்தேன். உன்னோடு மகிழ்ந்து நின்றேன்.. உன்னில் கலந்து விட்டேன். இனி நீ செய்யும் செயல்கள் எனதானவை. அதுவரை யார் என்ன சொன்னாலும் கலங்காதே..!”

அகல்யா கண்ணில் நீர் திரையிட அங்கேயே விழுந்து சேவித்தாள். பார்த்துக் கொண்டிருந்த வீரா தாத்தாவுக்கு அகல்யாவின் நிலைமை புரிந்தது.

“ஆத்தா..! காளியாத்தா..!” என்ற படி அகல்யாவை விழுந்து கும்பிட்டார் அவர்.

“சித்தம் கலங்கல ஆத்தா – சிவனின்

சக்தி புடிச்சுக்கிச்சு..!

உத்தமி பெண் தாயி – உன்

உள்ளொடு புகுந்து விட்டா.”

வீராத் தாத்தா தழுதழுத்தார்.

ஊரில் ஒருவராவது தன்னைப் பைத்தியம் என்று சொல்லாது இருக்கிறாரே என நினைத்த அகல்யா ட்யூஷன் சென்டர் கதவைப் பூட்டி, வீராத் தாத்தாவிடமே சாவியைக் கொடுத்து விட்டு வீட்டை நோக்கி நடை போட்டாள்.

வழிநடைக்கு கிருஷ்ணையும் துணைக்கு வந்தாள்.

“என் மேல் கோபமா அகல்யா?”

“இல்லையே கிருஷ்ணை. இன்னும் என் வாழ்வில் என்னல்லாம் நடக்கப் போறது..? உனக்குத் தெரியாதது உலகத்தில் உண்டா..? சொல்லேன்!”

‘இத்தனை அன்பா இருக்கற நீ என்னை விட்டு விலகப் போற. அதான் நடக்கப் போறது.”

“ஆ..! இல்லை இல்லவே இல்லை. உன்னை விட்டு போகவே மாட்டேன் கிருஷ்ணை. கொஞ்ச முன்னாடி தானே சொன்ன.. உன்னில் கலந்து விட்டேன்னு. அப்புறம் எப்படி நான் உன்னைப் பிரிவேன்..?”

“வாசஸ்பதி வீட்டில் அம்மன் கோவிலுக்குப் போக மாட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் பெருமாள் தான்.”

“அவர்கள் வீட்டில் என்ன செய்தால் எனக்கென்ன..? அவர் யாரோ..? எவரோ..? ஏதோ அப்பாவுக்கு அந்த சமயம் ஹெல்ப் செஞ்சதால அவங்க வீட்டைப் பத்தி நான் சிலாகிக்கணும்ன்னு அர்த்தமில்ல கிருஷ்ணை.” சமயத்தில் கிருஷ்ணை தன்னைக் காக்கும் காளி என மறந்து விடுகிறது அகல்யாவுக்கு.

தேசமயம் மதுரையின் பக்கம் உள்ள காட்டூரில் பங்களாவின் பால்கனி ஊஞ்சலில் சிந்தனை வயப்பட்டவனாக சாய்ந்து கொண்டிருந்தான் வாசஸ்பதி.

அவன் எண்ணம் முழுவதும் இன்னும் கண்ணில் படாத மாமாவின் மகள் அகல்யா மீதே இருந்தது.

எண்ணத்தின் நாயகி அவன் எண்ணம் போகும் போக்கை அறிந்தால் என் செய்வாளோ?

“பதி..! கூப்பிடக் கூப்பிட ஏன்னு கேட்க மாட்டேங்கறியே. என்ன பெரிய யோசனை..? என் தம்பி சுந்தருக்கு ஆஸ்பத்திரில போட்ட காசு வருமான்னா..? அதெல்லாம் வந்துடும். வராட்டாலும் பாதகமில்ல. இது அவன் சொத்தும் தானே. ஏதோ இந்த மட்டாவது நம்மோட ஒண்ணு சேர்ந்தானே. இல்லன்னா அவனுக்குக் கொடுக்காம நாம அனுபவிக்கற இந்த சொத்தே நம்மள முழுங்கிச் சாப்பிட்டுடும்ன்னு நினைச்சேன்.” அலமேலு பேசிக்கொண்டே வந்தார்.

“ஏம்மா அப்படிச் சொல்றீங்க..? இப்ப நமக்கென்ன குறை..?”

“மனோ ஒருத்தன் போதாதா..? என்ன குறைன்னு கேட்கற..? எந்நேரமும் ஜபம் தபம்ன்னு ரூமுக்குள்ளயே தன்னிலை அறியாமக் கெடக்கறானே. வயசும் முப்பத்திரெண்டாச்சு. ஒரு கல்யாணம் காட்சி இல்ல. உனக்குப் பண்ணலாம்ன்னா உனக்கு யாரையுமே பிடிக்கலங்கற. இத்தனை சொத்து வசதி இருந்து என்ன பிரயோசனம்..? நம்ம வானமலை பெருமாளுக்குப் போய் வஸ்திரம் சாத்தி வேண்டிட்டு வரணும். நல்லபடியா கல்யாண மேளம் இந்த வீட்டில் கேட்கட்டும்.”

“நான் மனோவைப் பார்த்தே நாளாச்சும்மா. எப்பப் பார்த்தாலும் அறைக் கதவு சாத்தியே இருக்கு. சாப்பிடறானா இல்லையா?”

“அதெல்லாம் சாப்பிடறான். இலை, தழை, பழம்ன்னு. ருசிக்குச் சாப்பிடாம பசிக்குச் சாப்பிடறான். என்ன.. யாரு கிட்டயும் பேசறது தான் இல்ல. எதையோ கூர்ந்து பார்த்துட்டே இருப்பான். திடீர்னு சிரிப்பான். திடீர்னு அழுவான். இப்ப எல்லாமே கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் போச்சு.”

“ஆமா. நான்கூட சுந்தர் மாமாட்ட சொன்னேன் மனோவைப் பத்தி.”

“ஏண்டா..? அவன் இப்பதானே அப்படி நடந்துண்டு இருக்கான். முன்னல்லாம் அவனும் சமத்தா உன்ன மாதிரி இருந்தவன் தானே. அதைச் சொல்லலியா நீ..?”

அலமேலுவின் பேச்சில் மனோவுக்கான தவிப்பு தெரிந்தது. தம்பியே ஆனாலும் தன் பிள்ளையைத் தப்பாக நினைத்து விடக் கூடாது என்ற தவிப்பு.

இப்போது தாயிடம் மாமா தன் மகளை மனோவுக்குக் கொடுப்பதாகச் சொன்னார் என்று சொன்னால்.. அன்று தன்னிடம் அப்படித்தானே சொன்னார்.. உங்க வீட்டு மூத்த மருமகளா அகல்யா வரட்டும் தம்பின்னு. அப்படின்னா மனோவுக்குன்னு தானே அர்த்தம் ஆகுது. இது தெரிந்தால் அம்மா..

‘ஆஹா..! அமிர்தம்’ என்று சொல்லி விடுவாள்.

‘ம்ஹும்..! என் மனதில் மாமா மகள் பற்றி ஒரு பிம்பம் வந்து உட்கார்ந்திருக்கே. இது வளருமா மறையுமா என்பதைப் பொறுத்துத் தான் மனோ பக்கம் காய் நகர்த்தலை முடிவு செய்ய வேண்டும்.’ நினைத்த வாசஸ்பதி..

“சரிம்மா! ஒரு அவசர வேலை. போய்ட்டு வந்து பேசறேன்” என்று நகர்ந்தவனின் சட்டைப்பையில் உள்ள கைப்பேசி அடித்தது.

அதனை எடுத்துப் பேசியவன் “வேலை நிறைய இருக்கும்மா” என விர்ரென நடந்து காரிலேறிச் சாலையைத் தொட்டான்.

–கிருஷ்ணை வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...