காணவேண்டிய இடம் தஞ்சாவூர் மராத்தியர் தர்பார் கூடம்

 காணவேண்டிய இடம் தஞ்சாவூர் மராத்தியர் தர்பார் கூடம்

தஞ்சாவூர் என்றவுடன் நமக்கு சோழர்கள் நினைவுக்கு வரும். அப்படியானால் இந்த மராத்தியர் தர்பாரை சோழ மன்னர்கள் கட்டியிருப்பார்களோ எனத் தோன்ற வாய்ப்பிருக்கிறது. அதுதான் இல்லை. இது நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் இடையில் 200 வருடங்கள் மராத்திய அரசின் கீழ் இருந்தது.

இந்த அரண்மனை வளாகம் மிகப் பெரியது. 110 ஏக்கர் அளவுக்குப் பரந்து விரிந்தது. இந்த வளாகத்தினுள் பல அரிய கலைப்பொக்கிஷங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இங்குதான் சரஸ்வதி மஹால் நூலகமும், தஞ்சைக் கலைக் கூடமும் அமைந்துள்ளன. இவை இரண்டும் மிக மிகப் பழமையானவை.

தஞ்சாவூர் மாவட்ட நகரில் உள்ள மராத்தியர் தர்பார் கூடம் ஒரு அரண்மனை. இந்த அரண்மனை தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப்பட்டது. கி.பி. 1674 இல் இருந்து 1855 வரை தஞ்சாவூர் மராத்திய அரசின் கைவசம் இருந்தது. அரண்மனை வளாகத்தில் தர்பார் கூடம் மராத்திய மன்னன் சகாஜியினால் கி.பி.1684ஆம் ஆண்டு திருத்திக் கட்டப்பட்டது.

தஞ்சையைத் தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம் தர்பார் மண்டபம். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள் தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன.

இரு பெரும் மண்டபங்களைக் கொண்டதாக ஒரு திறந்தவெளி முற்றத்துடன் அமைந்துள்ளது.

இந்த அரண்மனை வளாகத்தில்தான் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சைக் கலைக்கூடம், தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசுப் பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப் பள்ளி, தொல்லியல்துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன.

மண்டபத்தின் முன் பகுதியில் மரத்தூண்களுடன் கூடிய தாழ்வாரம் கூரை வேயப்பட்டுள்ளது. இங்கிருந்து சில படிகள் மீது ஏறிச் சென்று தர்பார் மண்டபத்தை அடையும் வகையில் ஒரு மேடையும் உள்ளது.

இங்கு தஞ்சை பெரிய கோயிலைப் போன்று விமான அமைப்புடைய ஆயுத கோபுரம் அரண்மனையின் ஒரு பகுதியாகும். இது 190 அடி உயரமுடைய 7 நிலைகள் கொண்டதாக எடுப்பாக்க காட்சியளிக்கிறது. தஞ்சை மராட்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோபுரத்தில் ஆயுதங்களைச் சேமித்து வைத்ததால் ஆயுத கோபுரம் என்று பெயர் பெற்றது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆயுதங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டன. இக்கோபுரம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அங்கு மராத்தியர் தர்பாரைக் காண தன் மனைவியுடன் வந்திருந்தார் சிவகாசியைச் சேர்ந்த ராஜராஜன். அவரிடம் பேசினோம்.

“நான் சிவகாசியில் பழங்கால அரிய கலைப்பொருட்கள் கண்காட்சிகளை நடத்திவருகிறேன். அதனால் மராத்தியர் காலத்து கலைப்பொருட்களைக் காணச் சென்றிருந்தேன். அங்கே நான் கண்டது பழங்கால அணிகலன்கள், நாணயங்கள், பழைய ரூபாய் நோட்டுகள், மரச்சாமான்கள், யானைகளைக் கட்டுப்படுத்த யானைப்பாகன் வைத்திருக்கும் அங்குசம், ராணி அமர்கிற முக்காலி, அழகிய பெயின்டிங், போன்ற மராட்டிய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்திருந்தார்கள். அரிய கலை அழகுடன் செம்பு, பித்தளை, மரம், மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் நிறைய காணப்பட்டது.

கலைநயமிக்க தெய்வச்சிலைகளான சிவன் பார்வதி, காளி, முருகன் விநாயகர், நடராஜர் சிலைகள் காணப்பட்டது. குறிப்பாக நர்த்தனமிடும் நடராஜர் சிலைகள் அதிக முக்கியத்துவம் தந்து வணங்கப்பட்டதாகத் தெரிகிறது. நடராஜர்  சிலைகள்  மரம் மற்றும் செம்பு சிலைகள் பல அளவுகளில் காணப்பட்டதைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. மரச்சிற்பங்கள்தான் அதிகளவில் இருக்கிறது. அதில் நடன விநாயகர், கற்பகவிநாயகர், சிவன் பார்வதி, நடராஜர் போன்ற சிற்பங்கள் மெல்லிய ஆயிதங்களில் குறைந்து செய்திருக்கிறார்கள். மின்சாரம் இல்லாத காலத்திலும் இந்த மரச்சிற்பங்களை அவ்வளவு நுணுக்கமாக செதுக்கியிருப்பது ஆச்சரியமான விஷயம்.

வெளிநாட்டவர்கள் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். நிறைய பள்ளி மாணவர்கள் வந்திருந்தார்கள். மராத்தியர் தர்பார் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அந்தக் கலைப்பொருட்களைப் பார்க்கும்போது பழங்காலத்துக்கே போய் வந்த நிறைவைத் தந்தது. எல்லாரும் ஒருமுறை கண்டுகளிக்கவேண்டிய இடம் இந்த மராத்தியர் தர்பார் கூடம்” என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...